FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிரமிக்க வைக்கும் பிரம்பனன்

கடல் கடந்து பரவிய பாரத நாட்டின் ஒப்பற்ற கலைத்திறனும் சனாதன சிறப்பும் உலகோரை வியப்பில் ஆழ்த்துகின்றன.

19 செப்டம்பர் 2026, 7:18 pm IST
பகிர்:

கடல் கடந்து பரவிய பாரத நாட்டின் ஒப்பற்ற கலைத்திறனும் சனாதன சிறப்பும் உலகோரை வியப்பில் ஆழ்த்துகின்றன. அதற்கு இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்பனன் கோயிலும் ஒரு சான்று. அங்குள்ள யோக்யகார்த்தா' என்ற நகரின் மையப் பகுதியில் உள்ள இந்தக் கோயிலில் அரசர்களும் யோகியரும் வழிபாடுகளை நடத்தியுள்ளனர்.

வாஸ்து மண்டல கோட்பாடுகள், வடஇந்திய நாகர பாணி, சைவ ஆகம தத்துவங்கள், ஜாவானியக் கலைநுட்பங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்த தனித்துவமான கலைப்படைப்பு, பிரம்பனன் கோயில். இயற்கைச் சீற்றங்களையும் காலத்தின் சவால்களையும் கடந்து கம்பீரமாகத் திகழும் இந்தச் சிவன் கோயில், இந்திய மரபின் தாக்கத்தோடு கிழக்காசியாவின் உன்னதமான ஆன்மிகக் களஞ்சியங்களுள் ஒன்றாகும். 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகரின் தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!' என்ற முழக்கத்தை உறுதி செய்கிறது.

அந்த நாட்டுக்கு அண்மையில் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடன் இணைந்து கோயிலைப் பார்வையிட்டதோடு, புனரமைப்புப் பணிக்கான திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

Advertisement

Advertisement

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தளமாகப் போற்றப்படும் பிரம்பனன் கோயில், 9-ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. இந்த வரலாற்றுக் கலை ஆவணத்தைப் பார்க்கும்போது, இந்தியாவுடனான அதன் நெருங்கிய பண்பாட்டு உறவின் காரணமாகவே அந்நாட்டுக்கு இந்தோனேசியா' என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.

இந்நாடு பல்வேறு காலகட்டங்களில் நுசாந்தரா, த்வீபாந்தர, யவத்வீபம் போன்ற பல்வேறு பெயர்களைத் தாங்கியிருக்கிறது. 19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய அறிஞர்கள், இந்திய நாகரிகத்தின் ஆழமான தாக்கம் பெற்றிருந்த இந்தத் தீவுக் கூட்டத்தைச் சுட்டிக்காட்டுவதற்காக கிரேக்கச் சொற்களிலிருந்து இந்தப் பெயரைச் சூட்டினர்.

இந்தோ' என்றால் இந்தியாவையும், நேசியா' எனில் நேசோஸ்' என்று தீவுக்கூட்டங்களையும் குறிக்கும். இந்நாட்டை இந்தியத் தீவுகள்' எனும் பொருள்பட இந்தோனேசியா' என்று பெயரிட்டுள்ளனர். இருப்பினும், நுசாந்தரா' என்ற பெயரே இந்தோனேசியாவின் வரலாற்று, பண்பாட்டு அடையாளப் பெயராக இன்றளவும் குறிப்பிடப்படுகிறது.

2 ஆயிரம் ஆண்டு உறவு

இந்தோனேசியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான பண்பாட்டு, கலாசார உறவு என்பது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வடக்கு, தென் இந்தியப் பேரரசுகள், வணிகர்கள், புத்த பிட்சுகள், கலைஞர்களால் வேரூன்றியதாகும். இந்தியாவிலிருந்து சென்றவர்கள் இந்து, புத்த சமயங்களுடன் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும், சிற்பக்கலை, கட்டடக் கலை, மொழி, இலக்கியங்களையும் தம்முடன் கொண்டு சென்றுள்ளனர்.

இதன் விளைவாக, ஜாவா, பாலி போன்ற பகுதிகளில் இன்றும் விசேஷ காலங்களில் மகாபாரத நாடகங்கள் நடத்தப்படுகின்றன. அந்த நாட்டின் தேசியச் சின்னமாக கருடன்' இடம்பெற்றுள்ளதும், விமானச் சேவைக்கு கருடா இந்தோனேசியா' என்றும் பெயரிடப்பட்டுள்ளன.

4 முதல் 9-ஆம் நூற்றாண்டுகளில் பல்லவர்களும், 9 முதல் 13-ஆம் நூற்றாண்டுகளில் சோழர்களும் கொண்டிருந்த மிக நெருங்கிய தொடர்புகளே பிரம்பனன் கோயில் எழுப்பப்படுவதற்கான அடித்தளமாகும்.

ஜாவானிய மொழியில் பிரம்பனன்' என்ற சொல், பரபிரம்மனுடைய இருப்பிடத்தைக் குறிக்கிறது. நாளடைவில் ஜாவானிய மக்களின் உச்சரிப்பு முறைக்கு ஏற்ப பரபிரம்பனன்' என்ற சொல் மருவி பிரம்பனன்' என்று நிலைத்துள்ளது. ஜாவானிய வழக்கில், பரபிரம்மனை பிரம்பன்' என்றும், வசிப்பிடத்தை ஆனான்' என்றும் சேர்த்து பிரம்பனன்' என அழைக்கிறார்கள்.

பிரம்பன்' என்ற பெயர் தமிழகக் கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தஞ்சாவூர் தில்லை ஸ்தானம் (திருநெய்த்தானம்) நெய்யாடியப்பர் கோயில் கருவறை தெற்குச் சுவரில் அமைந்துள்ள கல்வெட்டில், இவ்வூரைச் சேர்ந்த தேவநார் மகள் நக்கன் என்பவள், தன் தம்பியாகிய பிரம்பன் பிசங்கன் என்பவனின் பெயரால் நொந்தா விளக்கொன்று எரிப்பதற்காக 24 கழஞ்சு பொன் கொடையாக அளித்துள்ளார்' என தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி 8'-இல் பதிவாகியுள்ளது.

மூம்மூர்த்திகளை ஒருங்கிணைக்கும் கோயில்

பிரம்பனன் கோயில், கிழக்கு நோக்கியவாறு 390 மீட்டர் சதுர அளவிலான திட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூலக்கோயிலில் சிவன் தரிசனம்தர, அவருக்கு இருபுறமும் படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் தனித்தனிக் கோயில்கள் அமைந்துள்ளன.

அர்த்த சித்திரமாய் சிவனின் முழு உருவச் சிலை நின்ற கோலத்தில் தியானத்தில் ஆழ்ந்தவாறு நிறுவப்பட்டுள்ளது. வெளிப்புறச் சுவரில் தெற்கு நோக்கிய கோஷ்டத்தில் அகத்தியர், மேற்கு நோக்கிய கோஷ்டத்தில் கணபதி, வடக்கு நோக்கிய கோஷ்டத்தில் மகிஷாசூரமர்த்தினி ஆகியோர் ஸ்தாபிக்கப்பட்டுள்ளனர். இவர்களை மேலே சென்று வழிபடுவதற்கு வசதியாக அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட படிக்கட்டுகள் உள்ளன.

மூலவர் சிவன் கோயில் படிக்கட்டின் இருமருங்கிலும் காலபைரவர், க்ஷேத்திரபாலகர்களுக்குச் சிறு சந்நிதிகள் உள்ளன. பிரம்மாவின் கோயிலருகே சரஸ்வதி சந்நிதி தெற்கு நோக்கியவாறும், விஷ்ணு கோயில் அருகே மகாலட்சுமியின் சந்நிதி வடக்கு நோக்கியவாறும் காணப்படுகின்றன. சிவனுக்கு நந்தி, விஷ்ணுவுக்குக் கருடன், பிரம்மாவுக்கு அன்னம் என்று மூன்று வாகனங்களுக்கும் தனித்தனிப் பிரம்மாண்டமான கோயில்கள் மூலவருக்கு இணையாகக் கலையம்சத்துடன் நிறுவப்பட்டுள்ளன.

சுமார் 154 அடி உயரம் கொண்ட பிரம்பனனின் பிரதான சிவன் கோயிலின் செங்குத்தான விமான அமைப்பு மனதைக் கவரும். நுணுக்கமான கலைவேலைப்பாடுகள், தெய்வச் சிற்பங்கள், ராமாயணக் காட்சிகளைச் சித்திரிக்கும் புடைப்புச் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. கோயில் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள கலைநயமிக்க ராமாயணக் காட்சிகள், ஜாவானியச் சிற்பக் கலைஞர்களின் கற்பனை, உள்ளூர் பண்பாட்டு மரபுகளுடன் இணைந்து புதிய கலைவடிவத்துடன் மிளிர்கின்றன.

அடுத்தடுத்த இயற்கைப் பேரிடர்களால் சிதலமடைந்த கோயிலின் பாகங்களும், பல சிற்பங்களும் வளாகத்தினுள்ளே காணப்படுகின்ற கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சூரிய-சந்திரர்களுடன் வாயு, அக்னி போன்ற திக்பாலகர்களின் சிற்பங்களும் உள்ளன. ஒருகாலத்தில் பிரம்பனன் அனைத்துப் பரிவாரங்களையும் கொண்ட ஒரு முழுமையான கோயிலாக இருந்துள்ளது. சோழர்களின் கோயில்களில் எட்டுத் திசைகளிலும் திசாமூர்த்திகளை நிறுவுகின்ற மரபு உள்ளது.

சஞ்சய வம்சத்தின் மன்னரான ராகை பிகாதன் என்பவரால் 850-ஆம் ஆண்டில் இதன் கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது. பின்னர், அவரது வாரிசுகளான லோகபாலன், பாலிதுங் ஆகியோரால் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

வாஸ்து வடிவமைப்பிலான கோயில்

கோயிலின் தரைப்பட வடிவமைப்போ வாஸ்து சாஸ்திரத்தின் உச்சகட்ட நுட்பங்கள் திறம்படக் கையாளப்பட்டுள்ளதை உணர்த்துகின்றன. 19-க்கு 19 என 361 பதங்களைக் கொண்ட மண்டல அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை சிற்ப நூல்கள் ஜெயந்தி பதம்' எனக் குறிப்பிடுகின்றன.

இதன் மையப் பகுதியில் மும்மூர்த்திகளுக்காக 9 -க்கு 9 என 81 சதுரங்களைக் கொண்ட பரமசாயிகப் பதம்' என்னும் கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. சரஸ்வதி, மகாலட்சுமி ஆகியோரின் சந்நிதிகளும், எட்டுத் திசைகளையும் காக்கும் அஷ்ட திக்பாலகர்களின் சந்நிதிகளும் (ஜாவானிய மரபில் சிப்கா', படோக்' என அழைக்கப்படுபவை) வாஸ்துவின் பதவிந்யாச விதிமுறைகளுக்கு ஏற்ப உரிய திசைகளில் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.

கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில் அமைந்திருந்த 224 சிறிய பரிவார உப சந்நிதிகள் தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ளன. கோயிலின் தரைப்பட வடிவமைப்பைப் பருந்து பார்வையில் ஆராயும்போது, வாஸ்து மண்டல அமைப்பில் கோயில் உருவாக்கப்பட்டுள்ளதோடு, மூன்று பிரகாரங்களுடன் கூடிய முகபத்ர' அமைப்பிலும் விளங்குவது தெரிகிறது. மூலவர் தொடங்கி அனைத்துப் பரிவாரத் தெய்வங்களின் உருவங்களும் யோக நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments