FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முதன்முதலாக...

இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர்' என்ற சாதனையை 1987-ஆம் ஆண்டில் விஸ்வநாதன் ஆனந்த் படைத்தார்.

19 செப்டம்பர் 2026, 7:35 pm IST
பகிர்:

இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர்' என்ற சாதனையை 1987-ஆம் ஆண்டில் விஸ்வநாதன் ஆனந்த் படைத்தார். அண்மையில், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற போட்டியில், கிராண்ட் செஸ் டூர்' என்ற பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை சென்னையைச் சேர்ந்த ஆர். பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.

அதோடு, அவருக்கு ரூ.1.68 கோடி பரிசுத்தொகையும் கிடைத்துள்ளது. இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான ஃபேபியானோ கருவானாவை 15-13 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய பிரக்ஞானந்தா, அற்புதமான மீள்வருகையை நிகழ்த்தினார். இதன்மூலம், அடுத்த ஆண்டுப் போட்டியில் நேரிடையாகப் பங்குபெறும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

கிராண்ட் செஸ் டூர்' என்பது கிளாசிக்கல், ரேபிட், பிளிட்ஸ் போட்டிகளை உள்ளடக்கிய உயர்மட்ட செஸ் சுற்றுப் போட்டியாகும். இதில் தலைசிறந்த வீரர்கள் பங்கேற்று, மொத்தமாக 20 லட்சம் டாலர் பரிசுத்தொகையை வெல்கின்றனர். இரண்டு கிளாசிக்கல், மூன்று ரேபிட், பிளிட்ஸ் போட்டிகள் அடங்கிய ஐந்து கடுமையான போட்டிகளுக்குப் பிறகு, முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுகின்றனர்.

Advertisement

Advertisement

உலகச் சாம்பியனான இந்தியாவின் டி . குகேஷுக்கு சவால் விடுபவரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட கேண்டிடேட்ஸ்' போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பைத் தவறவிட்ட பிரக்ஞானந்தாவுக்கு இந்தப் பட்டம் ஏணியாக அமைந்துள்ளது. கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆர். வைஷாலி, மகளிர் கேண்டிடேட்ஸ்' பிரிவில் வெற்றி பெற்று, சீனாவின் உலகச் சாம்பியனான ஜூ வென்ஜுனை எதிர்கொள்ள உள்ளார்.

கருவானாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், பிரக்ஞானந்தா தொடக்க ஆட்டத்தில் தோற்று, இரண்டாவது ஆட்டத்தை சமன் செய்ததன் மூலம், கிளாசிக்கல் சுற்றுக்குப் பிறகு 3-9 என்ற கணக்கில் ஆறு புள்ளிகள் பின்தங்கிய நிலையில், இறுதிப் போட்டியைத் தொடங்கினார். அவர் ராபிட் சுற்றில் நிலைமையை மாற்றி, இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று எட்டுப் புள்ளிகளைப் பெற்று, இறுதி பிளிட்ஸ் சுற்றுக்கு 11-9 என்ற முன்னிலையுடன் சென்றார்.

முதல் பிளிட்ஸ் ஆட்டத்தில், பிரக்ஞானந்தாவுக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், நேர நெருக்கடியில் பிரக்ஞானந்தாவால் சோபிக்க முடியவில்லை. நிலைமை மேலும் மோசமடைந்தது. அதேசமயம், எதிராளியாலும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.

ஆரம்பத்தில் 6 புள்ளிகள் முன்னிலை பெற்று போட்டியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் ஃபேபியானோ கருவானா. ஆனால், பிரக்ஞானந்தாவின் அசத்தலான மீள் வருகை, போட்டியின் போக்கை முழுமையாக மாற்றியது. முன்னிலை பெற்ற பிறகு, பிளிட்ஸ் போட்டிகளிலும் அவர் நிதானமாக விளையாடி தனது வெற்றியை உறுதி செய்தார்.

பயிற்சியாளர்கள் ஆர்.பி. ரமேஷ், கிராண்ட்மாஸ்டர் வைபவ் சூரி ஆகிய இருவரும் அவர்களுடைய வீடுகளில் நள்ளிரவில் விழித்திருந்து, செஸ் ஆட்டத்தை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தனர்.

ஃபேபியானோ போன்ற திறமையானவருக்கு எதிராக பிரக்ஞானந்தா ஆறு புள்ளிகள் பின்தங்கியிருப்பது பெரிய நெருக்கடி. ஆனால், பிரக்ஞானந்தாவுக்கு விட்டுக் கொடுக்க மனமில்லை. வெளிப்படையாகச் சொன்னால், இரண்டாம் இடத்தையோ அல்லது ஜிசிடி இறுதிப் போட்டியில் பங்கேற்றதையோ வைத்து திருப்தியடைய அவருக்கு விருப்பமில்லை. அந்த மனப்பான்மைதான் பிரக்ஞானந்தாவை வெற்றியடையச் செய்துள்ளது என்கிறார் பயிற்சியாளர் வைபவ் சூரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments