FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மூலிகை அணையாடை தயாரிப்பில் அசத்தல்

மாதவிடாய் நாள்களில் மகளிர் பயன்படுத்தும் நாப்கின்களில் வேதிப்பொருள்கள் கலந்து இருப்பதால், பலவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன.

12 செப்டம்பர் 2026, 10:20 pm IST
பகிர்:

மாதவிடாய் நாள்களில் மகளிர் பயன்படுத்தும் நாப்கின்களில் வேதிப்பொருள்கள் கலந்து இருப்பதால், பலவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன. எனவே அவர்களுக்குப் பாதிப்புகள் அல்லாத மூலிகை நாப்கின்கள் தயாரிப்பில் தனித்துவம் பெற்று விளங்குகிறார் முப்பத்து ஏழு வயதான பெண் ரேணுகா கார்த்திகேயன்.

விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட வளவனூர் நல்லரசன்பேட்டையைச் சேர்ந்த அவர், மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பப் படிப்பை முடித்தார். திருமணம் நடைபெற்று குழந்தைப்பேறு என்ற நிலையை அடைய, உடலியல் சார்ந்த பல்வேறு சிக்கல்களால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுபோன்ற பிரச்னைகளுக்குச் சந்தையில் கிடைக்கும் வேதிப்பொருள்கள் கலந்த நாப்கின்களும் ஒரு முக்கியக் காரணம் என்பதை உணர்ந்த ரேணுகா, தான் அனுபவித்த வேதனை வேறு எவருக்கும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் மூலிகை கலந்த நாப்கின்கள் தயாரித்து விற்பனை செய்கிறார்.

இன்று சிறந்த தொழில்முனைவோராக மாறியிருக்கும் அவரிடம் பேசியபோது:

Advertisement

Advertisement

''மகளிர் உடல் இயக்க ரீதியான கழிவுகளை வெளியேற்றும் மாதவிடாய்க் காலத்தில் அனுபவிக்கும் வேதனைகள் சொல்லி மாளாது. நாப்கின்களினாலும் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் மூலிகைப் பொருள்களைக் கொண்டு நாப்கின்களைத் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து வந்தது. எனது கணவர் கார்த்திகேயன், குடும்பத்தினரின் ஒப்புதலைப் பெற்று, 2019-ஆம் ஆண்டில் இதற்கான திட்டமிடல்களைத் தொடங்கினேன்.

இதற்கு உறுதுணையாக இருந்த எனது தோழி ஒருத்தியும் நிதியுதவி அளித்தார். இருவரும் சேர்ந்து ரூ.25 லட்சம் முதலீட்டில் மூலிகை நாப்கின் தயாரிப்பைத் தொடங்கினோம்.

சர்ஜிக்கல் காட்டன், ஓவன் சீட்டுகளைக் கொண்டும், பாரம்பரிய வேப்ப இலை, சோற்றுக் கற்றாழை, மலைவேம்பு, துளசி, மஞ்சள் உள்ளிட்டவை கலந்த பொடிகளைக் கொண்டும் நாப்கின்கள் தயாராகின்றன.

வேப்பஇலை, மலைவேம்பு ஆகியன கிருமிநாசினியாகச் செயல்படுகிறது. துளசி, மஞ்சள் ஆகிய அழற்சி எதிர்ப்புக் குணங்களுடன் சருமத்துக்கு எரிச்சல் ஏற்படாமல் தடுக்கிறது. சோற்றுக் கற்றாழை உடலுக்குக் குளிர்ச்சியையும், மென்மைத் தன்மையும் தருகிறது. இவை ஐந்தும் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியாகத் திகழ்கின்றன.

மாதம்தோறும் 6 ஆயிரம் நாப்கின்கள் தயாரிப்பு: வாரத்துக்கு 1,500 நாப்கின்கள் வீதம் மாதத்துக்கு 6 ஆயிரம் மூலிகை நாப்கின்களைத் தயாரித்து வருகிறோம். 6 நாப்கின்கள் கொண்ட ஒரு பாக்கெட் எக்ஸ்.எல். பிரிவில் ரூ.130-க்கும், எக்ஸ்.எக்ஸ்.எல். பிரிவில் ரூ.150-க்கும் விற்பனை செய்கிறோம். இதைத் தவிர 77 நாப்கின்கள் கொண்ட பாக்கெட் ரூ.1000-க்கு விற்பனை செய்கிறோம்.

விழுப்புரம் நகரம், வளவனூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நாப்கின்களை கேட்டால், அவர்கள் இருப்பிடத்துக்குச் சென்று நேரடியாக வழங்கி வருகிறோம். மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு தூதஞ்சலில் (கூரியர்) அனுப்பி வைக்கிறோம்.

தபால் செலவு வாடிக்கையாளர்களைச் சேர்ந்தது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், பெங்களூரு, ஹைதராபாத் போன்ற மாநகரங்களுக்கும் அதிகளவில் அனுப்பி வைக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, எங்களுடைய இன்ஸ்டாகிராம் முகவரியைத் தொடர்பு கொண்டு விவரத்தைத் தெரிவித்தாலும் அனுப்பி வைக்கிறோம்.

சுயசார்புடன் வாழ வழிவகை செய்யும் தொழில்: எனக்கு ஊக்கமளித்த எனது கணவரை இழந்துவிட்டேன். இருந்தாலும் எனது மகன், மகளுடன் வசித்து வரும் நான் மாதம்தோறும் வருவாயை ஈட்டி, சுயசார்புடன் வாழ்வதற்கு உதவியாக இருக்கிறது.

இயற்கையான முறையில் மூலிகைப் பொருள்களைக் கொண்டு நாங்கள் தயாரிக்கும் நாப்கின்கள், மகளிருக்கு மாதவிடாய்க் காலப் பிரச்னைகளைக் குறைப்பதுடன், அவர்களுக்குத் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்குகிறது என்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது.

முளைக்கட்டிய கருப்பு உளுந்து களி, சத்து மாவு, மூலிகை டீ பௌடர் போன்றவற்றையும் தயாரித்து விற்பனை செய்கிறோம். இதற்கும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனித்துவம், திறமை உண்டு. அதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால், வாழ்வில் வெற்றி பெறலாம். குடும்பத்தினர் ஒத்துழைப்பு இருந்தால் அனைத்தும் சாத்தியம்தான்'' என்கிறார் ரேணுகா.

படங்கள் : ஆர். ஸ்ரீராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments