FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தடைகளைத் தகர்த்த வீராங்கனை

மதுரை வளர் நகரைச் சேர்ந்த ராமலிங்கம் - சித்ரா தம்பதியரின் மகள் இருபத்தொரு வயதான ஹீரா.

12 செப்டம்பர் 2026, 10:24 pm IST
ஹீரா
பகிர்:

எம். சங்கர்

மதுரை வளர் நகரைச் சேர்ந்த ராமலிங்கம் - சித்ரா தம்பதியரின் மகள் இருபத்தொரு வயதான ஹீரா. சிறு வயதில் அவர் சுந்தரம் பூங்காவுக்கு நடைப்பயிற்சிக்குச் சென்றபோது, ஸ்கேட்டிங் பயிற்சியைக் கண்டு, அதில் ஆர்வம் ஏற்பட்டு, ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி விளையாட்டில் பயிற்சி பெற்றார். இன்று அவர் நாட்டில் உள்ள மிகச் சிறந்த ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி கோல் கீப்பர்களில் ஒருவராக தன்னை நிலைபெறச் செய்துள்ளார்.

இவர் 2014-ஆம் ஆண்டு முதல் பல போட்டிகளில் பதக்கங்களைப் பெற்றுள்ளார். 2021-இல் நடைபெற்ற தேசிய ரோலர் டெர்பி பிரிவுப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 2021-இல் தேசிய ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கிப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் பெற்றார். 2025-ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கம் கிடைக்கவும், 2023-இல் சீனாவில் நடைபெற்ற ஆசியன் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன் போட்டியில் வெண்கலம் கிடைக்கவும் இவர் முக்கியப் பங்காற்றினார். தனது சாதனைப் பயணம் குறித்து ஹீரா கூறும்போது, ''எங்கள் குடும்ப வறுமை என் விளையாட்டை அனுமதிக்காவிட்டாலும், பெரும் சிரமங்களுக்கிடையே பெற்றோர் அளித்த ஊக்கத்தால் பயிற்சிகளைத் தொடர்ந்தேன். இதன் பயனாகத்தான் என்னால் பயிற்சி பெறவும், பதக்கங்கள் வெல்லவும் முடிந்தது'' என்கிறார்.

Advertisement

Advertisement

அவர் மேலும் கூறியது:

''ஆசியப் போட்டியில் பங்கேற்க சீனா, தென்கொரியாவுக்குச் சென்றபோது வட்டிக்குக் கடன் வாங்கித்தான் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை

வரைவோலை எடுத்துச் செலுத்தினேன். ஆசியப் போட்டிக்குத் தேர்ச்சி பெற்ற பிறகு நான்கு பயிற்சி முகாம்கள் நடைபெறும். இதில் பங்கேற்க மட்டுமே ஏறத்தாழ ரூ. 30 ஆயிரத்துக்கும் அதிகமான தொகை செலவானது. ஆசியப் போட்டியில் 2023-இல் வெண்கலம் வென்றபோது ரூ. 6 லட்சமும், 2025-இல் தங்கம் வென்றபோது ரூ. 12 லட்சமும் தமிழக அரசு சார்பில் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. இந்தத் தொகையைக் கொண்டே வாங்கிய கடன்களை ஓரளவு அடைத்தோம்.

எனது தாய் சித்ரா, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் காவலாளியாகப் பணியாற்றினார். இதிலிருந்து கிடைக்கப் பெற்ற வருமானத்தைக் கொண்டே எங்கள் குடும்பச் செலவுகளையும், எனது விளையாட்டுப் பயிற்சிக்கான செலவுகளையும் செய்தார். அண்மைக்காலமாக அவருக்கு இந்தப் பணியும் இல்லை.

இளங்கலை நிர்வாகவியல் (பி.பி.ஏ.) பட்டதாரியான நான் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிக்குச் சேர்ந்தேன். ஆனால், மாலை நேரப் பயிற்சிக்கும், வெளியூர்களில் நடைபெறும் விளையாட்டுகளுக்கும், இதுதொடர்பான பயிற்சிகளுக்கும் செல்ல எந்தத் தனியார் நிறுவனமும் அனுமதிக்கவில்லை.

தேசியப் போட்டியில் பங்கேற்க வேண்டுமெனில், குறைந்தபட்சம் 15 நாள்கள் விடுப்பு தேவைப்படும். மாநிலப் போட்டிக்குக் குறைந்தபட்சம் ஒரு வாரம் விடுப்பு எடுக்க நேரிடும். ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்வு பெற்றால் ஏறத்தாழ 7 - 8 மாதங்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த விடுப்புகளை எந்தத் தனியார் நிறுவனம் அனுமதிக்கும்?

கடுமையான வறுமைக்கிடையே நான் பயிற்சி மேற்கொள்கிறேன். திருமணம் போன்ற விழாக்களில் நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து, இதன் மூலம் கிடைக்கும் தொகையையே பயிற்சிக்கும், வாழ்வாதாரத்துக்கும் பயன்படுத்துகிறேன். அரசுப் பணியில் விளையாட்டு வீராங்கனைகளுக்கான உள்ஒதுக்கீட்டில் பணி கோரி விண்ணப்பித்தேன். ஆனால், எந்தப் பலனும் இதுவரை கிடைக்கவில்லை'' என்றார் ஹீரா.

இதுதொடர்பாக அலெக்ஸ் ஸ்கேட்டிங் அகாதெமி நிர்வாகி அலெக்ஸ் கூறியது: ''இனி வரும் காலங்களில் ஸ்கேட்டிங், அதன் உள்பிரிவு விளையாட்டுகளுக்கும் அரசுப் பணி ஒதுக்கீடுகளிலும், உயர்கல்வி வாய்ப்புகளிலும் முக்கியத்துவம் அளித்தால், ஹீரா போன்றவர்கள் வாழ்வாதாரத்துக்குப் போராடாமல், விளையாட்டுக் களத்தில் மட்டும் போராடினால் போதும் என்ற நிலை உருவாகும்'' என்கிறார் அலெக்ஸ்.

படம் : எஸ். அருண்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments