சிறுவர்மணி

சுதந்திர தினம்

சுதந்திர தினம். பள்ளி மைதானம் விழாக் கோலம் பூண்டிருந்தது. மாணவர்கள் சீருடை அணிந்து தேசியக் கொடிகளைக் கட்டிக்கொண்டிருந்தனர்.

இடைமருதூர் கி.மஞ்சுளா

சுதந்திர தினம். பள்ளி மைதானம் விழாக் கோலம் பூண்டிருந்தது. மாணவர்கள் சீருடை அணிந்து தேசியக் கொடிகளைக் கட்டிக்கொண்டிருந்தனர். மாணவிகள் சிலர் ஆங்காங்கே வண்ணக்  கோலங்களை வரைந்து கொண்டிருந்தனர். சிலர் அலங்காரத் தட்டுகளில் சாக்லேட்டுகளைப் பிரித்துக் கொட்டிக் கொண்டிருந்தனர். மாணவர்கள் சிலர் கண்ணில் படுவோருக்கெல்லாம் தேசியக் கொடியும், குண்டூசியும் கொடுத்து அவர்கள் சட்டையில் குத்திக்கொள்ளச் சொன்னார்கள்.

அன்று தேசியக் கொடியை ஏற்றப் போகிறவருக்காகப் பள்ளி மைதானத்தில் எல்லோரும் ஆவலாகக் காத்துக்கொண்டிருந்தனர். சென்ற ஆண்டு அகில இந்திய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அந்தப் பள்ளிக்குப் பெருமை சேர்த்த ஜெயபாரத் என்ற மாணவன்தான் அவன். அவன்தான் பன்னிரண்டாம் வகுப்பு லீடரும்கூட. அவனுடைய தாத்தா ஒரு முன்னாள் சுதந்திரப் போராளி, தியாகி. அதனால் கொடி ஏற்ற அவனைத் தேர்ந்தெடுத்திருந்தார் பள்ளித் தலைமை ஆசிரியர். கூடவே, ஜெயபாரத் கொடி ஏற்றியவுடன் சுதந்திரத் தியாகிகள் நால்வரைப் பற்றிப் பேசவும் சொல்லியிருந்தார்.

கொடி ஏற்றும் நேரம் வந்ததும் எல்லா மாணவர்களும் முகக் கவசம் அணிந்து வரிசையாக அணிவகுத்து நின்றனர். தேசியக் கொடியில் பலவண்ணப் பூக்கள் வைத்து முடிக்கப்பட்டு, அது கொடிக் கம்பத்தின் ஊச்சியில் பட்டொளி வீசிப் பறக்கத் தயாராகக் காத்துக் கொண்டிருந்தது.

தலைமை ஆசிரியரும், ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் கைக் கடிகாரத்தைப் பார்த்தபடி இருந்தனர். மைக்கின் முன்பு முகக் கவசம் அணிந்த மாணவிகள் நான்கு பேர் தேசியக் கொடி நிறத்தில் உடை அணிந்து, தேசியக்கொடி ஏற்றியவுடன் கொடி வணக்கப் பாடல் பாடத் தயாராக நின்றிருந்தனர்.

திடீரென்று தலைமை ஆசிரியர் செல்போனுக்கு ஒரு செய்தி வந்தது. தன் சட்டைப் பையில் அதிர்வு நிலையில் (வைப்ரேஷன்) வைத்திருந்த செல்போன் அதிரவும், உடனே அதை எடுத்துப் பார்த்தார்.

ஜெயபாரத் அனுப்பி இருந்த செய்திதான் அது. "மூன்று நாள்களுக்கு முன்பு எடுத்த கரோனா பரிசோதனையில் தனக்கு பாசிட்டிவ் இருப்பதாக நேற்று இரவு செய்தி வந்ததாகவும், உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், தகவல் தரமுடியாமைக்கு வருந்துவதாகவும்' செய்தி அனுப்பியிருந்தான்.

அதைப் பார்த்த தலைமை ஆசிரியர் உடனே தமிழ் ஆசிரியர் தமிழ்ச் செல்வனை அழைத்து கொடி ஏற்ற வைத்தார். கொடி ஏற்றி, தேசிய கீதம் பாடி, தலைமை ஆசிரியர் பேசத் தொடங்கி, தன் பேச்சை நிறைவு செய்யும்போது மீண்டும் அவரது செல்போன் அதிர்ந்தது. ஜெயபாரத்திடமிருந்து ஒரு செய்தியும் வந்தது. 

"நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசமுடியவில்லை என்றாலும், கரோனா சிகிச்சையில் தனிமையில் இருப்பதால் அந்தத் தனிமையைப் பயன்படுத்தி, நான் மேடையில் பேச வேண்டியதை ஒலிச் செய்தியாக அனுப்பியுள்ளேன். இதைத் தாங்கள் எல்லோரும் கேட்குமாறு செய்ய வேண்டுகிறேன்' என்று கூறி, சுதந்திரப் போராட்ட வீரர்கள், தியாகிகள் நால்வரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் பற்றிய வீர வரலாற்றை சுருக்கமாக செல்போனில் பேசி அனுப்பியிருந்தான்.

தன் செல்போனை எடுத்து மைக்கின் முன்பு வைத்து, ஜெயபாரத் பேசி அனுப்பியிருந்த அந்தப் பேச்சை எல்லோரும் கேட்கும்படி செய்தார் தலைமை ஆசிரியர்.

சுதந்திர தின நிகழ்ச்சி எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. ஜெயபாரத் இல்லாத குறையை அந்தப் பேச்சு நிறைவு செய்தது. எல்லோரும் ஜெயபாரத்தின் செயலைப் பாராட்டி, அவன் விரைவில் குணமாக வேண்டும் என்று தேசியக் கொடியை அண்ணாந்து பார்த்து பிராத்தனை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT