பட்டாம்பூச்சி ஆய்வில் 10 வயது சிறுவன்
வண்ணத்துப்பூச்சி அல்லது பட்டாம்பூச்சி இலைகளுக்கு அடியில் முட்டையிடுகிறது.
ஆர்.எஸ்.
வண்ணத்துப்பூச்சி அல்லது பட்டாம்பூச்சி இலைகளுக்கு அடியில் முட்டையிடுகிறது. அந்த முட்டை புழுவாகி, அது தன்னைச் சுற்றிலும் ஒரு கூடு அமைத்து, வளர்சிதை மாற்றம் அடைந்து, வண்ணத்துப்பூச்சியாக வெளிப்படுகிறது.
இந்த மாற்றத்தின்போது அதற்கு அனுபவங்கள் உண்டா? அந்த அனுபவம் அது வண்ணத்துப் பூச்சியாக மாறியவுடன் தொடருமா? இந்தக் கேள்விக்கு இதுநாள் வரை சொல்லப்பட்ட பதில், கிடையாது என்பதுதான்.
Advertisement
Advertisement
ஆனால், இப்போது ஜப்பானைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன் சொல்கிறார் - புழுவாக இருந்தபோது அதற்கு ஏற்பட்ட அனுபவங்கள் வண்ணத்துப்பூச்சியாக வளர்சிதை மாற்றம் அடைந்த பிறகும் தொடர்கிறது.
உலகமே இப்போது அவரை வியந்து பார்க்கிறது. இந்த ஆய்வை அந்தச் சிறுவன் மிக எளிய சோதனைகளைச் செய்து , இந்த உண்மைகளைக் கண்டறிந்துள்ளார்.
ஜப்பானைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன் ஜோ நகாய், தன் வீட்டுத் தோட்டத்தில் பட்டுப்புழுக்களை வளர்த்து, அது கூடு கட்டி, பின்னர் வண்ணத்துப்பூச்சிகளாக மாறும் வரை வளர்த்தார். தினமும் தொட்டுப் பார்த்து, அது எப்போது பட்டாம்பூச்சியாக வெளிவரும் என்று ஆர்வமாகக் கவனித்து வந்தார். வெளியே வந்த பட்டாம்பூச்சி பறந்து செல்லாமல் அவர் கைகளின் மீது வந்து அமர்ந்தது. ஆனால், மற்ற பட்டாம்பூச்சிகள் அவர் நெருங்கி வந்தாலே பறந்தன. அது அவருக்கு புதுவிதமான ஆர்வத்தைத் தூண்டியது.
ஆகவே அவர் பட்டாம்பூச்சி அனுபவ பதிவு அல்லது நினைவாற்றல் இருக்கிறதா என்பதைச் சோதிக்க முடிவு செய்தார். புழு கூடு கட்டும் நேரத்தில் கருவிகள் மூலம் அதிர்வுகள் ஏற்படுத்தினார். அதே நேரத்தில் லெவாண்டர் வாசனை தைலத்தையும் அதன் அருகே வைத்தார். அதிர்வின் அசவுகரியமும் இந்த சென்ட் மணமும் ஒரே நேரத்தில் அமைந்தன.
அந்தப் புழுக்கள் கூடுகளை உடைத்துக்கொண்டு பட்டாம்பூச்சியாக வெளிப்படும் நேரத்தில், அந்த அறையில் ஆங்கில எழுத்து ஒய் வடிவில் இரண்டு வாயில்களை ஏற்படுத்தினார். ஒன்றில் லெவாண்டர் வாசனைத் தைலம் வைத்தார். கூடுகளில் இருந்து வெளிப்பட்ட பட்டாம்பூச்சிகளில் 80 சதவீதம் லெவாண்டர் வாசனை தைலம் இருந்த பகுதியை தவிர்த்தன. வேறுவாசல் வழியாகப் பறந்தன. புழுக்களாக இருந்தபோது அதிர்வுகளால் ஏற்பட்ட அசவுகரியம் மற்றும் லெவாண்டர் வாசம் இரண்டும் அவற்றின் நினைவுகளில் பதிவாகி இருப்பதால்தான் அவை அந்த வழியைத் தவிர்த்தன என்று இந்தச் சிறுவன் கூறியுள்ளார்.
இந்த ஆய்வில் மேலும் விரிவான ஆதாரபூர்வமான உள்ளீடுகள் தேவை என்று கூறும் விஞ்ஞானிகள், இந்தச் சிறுவனின் ஆர்வத்தையும் உழைப்பையும் பாராட்டி வருகின்றனர். ஜப்பானின் அறிவியல் மாநாடுகளின் இந்தச் சிறுவனின் அறிவியல் ஆர்வம் பேசப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.