இத்தாலிய கதை
மீனவப் பெண்ணான அகதாவுக்கு ஒரு பெண் குழந்தை- இறந்தே பிறந்தது. மதச் சடங்குகள் ஏதுமின்றி, அகதாவின் கணவன் அதை அருகே இருக்கும் வனப் பகுதியில் புதைத்துவிட்டார்.
கடல் படத்தின் தலைப்பு- ஸ்மால் பாய்
இயக்குநர்- லாரா சமானி
வெளியான ஆண்டு-2021
ஓடும் நேரம்- 89 நிமிடங்கள்
தாயின் பேரன்பைச்
சொல்லும் படம் இது!
மீனவப் பெண்ணான அகதாவுக்கு ஒரு பெண் குழந்தை- இறந்தே பிறந்தது. மதச் சடங்குகள் ஏதுமின்றி, அகதாவின் கணவன் அதை அருகே இருக்கும் வனப் பகுதியில் புதைத்துவிட்டார். மூர்ச்சை அடைந்திருந்த அகதாவுக்கு விழிப்பு வந்ததும், குழந்தை குறித்து கேட்டாள்.
ஞானஸ்தானம் இன்றி குழந்தை புதைக்கப்பட்டது அவளுக்கு கவலையை ஏற்படுத்தியது. பாதிரியாரிடம் குழந்தைக்கு ஞானஸ்தானம் செய்யச் சொன்னாள். அவர் மறுத்துவிட்டார். பின்னர், அகதா வனப் பகுதிக்குச் சென்று குழந்தையின் உடலைத் தோண்டியெடுத்து, அதை ஒரு மரப்பெட்டியில் பத்திரப்படுத்திக் கொண்டாள்.
மரப்பெட்டியை முதுகில் கட்டிக் கொண்டு படகுத் துறைக்கு வந்து ஒரு படகை எடுத்துக் கொண்டு துடுப்புப் போட்டாள். பல கி.மீ.க்கு அப்பால் வடக்குப் பள்ளத்தாக்கில் இருக்கும் ஒரு மாதா ஆலயத்தில் உள்ள பாதிரியார் கருணையுடன் குழந்தைக்கு ஞானஸ்தானம் தருவார் என்று ஒரு முதியவர் அவளுக்குச் சொல்லியிருந்தார்.
படகு கரையை அடைந்ததும் வடக்கு நோக்கி நடந்தாள். லிக்ஸ் என்ற ஒரு இளைஞர் அவளுக்கு வழித்துணையானார். மார்பில் பால் சுரப்பு ஏற்பட்டு மேலாடை நனைந்ததைக் கண்டு செவிலித்தாயாக இருக்க, அவளை சிலர் கடத்திச் சென்றனர்.
வண்டியை வழிப்பறிக் கொள்ளையர் வழிமறித்தனர். வண்டியில் பயணம் செய்தோர் தமது மதிப்பு மிகுந்த உடைமைகளைக் கொள்ளையர்கள் வசம் ஒப்படைத்தனர்.
""முதுகுப் பெட்டியில் என்ன இருக்கிறது?'' என கொள்ளையர் கூட்டத் தலைவி துப்பாக்கியை நீட்டியபடி மிரட்டினார். இருப்பினும், அகதா பெட்டியைக் கொடுக்க மறுத்தார். வலுக்கட்டாயமாகப் பெட்டியைப் பிடிங்கித் திறந்து பார்த்த கொள்ளைக்காரிக்கு மனம் உருகியது. இறந்த குழந்தையைச் சுமந்து செல்லும் தாயைப் பார்த்துக் கண்ணீர் சிந்தினார்.
இளைஞனும் அகதாவும் மறுபடியும் பயணம் தொடர்ந்தனர். கடும் பசி. பாதை ஓரம் முளைத்திருந்த காளான்களை உண்டு பசியாறனர். வழியோர மரம் என்று கொட்டைகளை உதிர்த்து இருந்தது. கொட்டைகளை உடைத்து பருப்பை உண்டனர். நடுவில் இருண்ட குகைப் பகுதி ஒன்று குறுக்கிட்டது. கையில் விளக்குகளை ஏந்திக் கொண்டு இரண்டு மைல் நீளமுள்ள இருட்டுக் குகையை சிரமத்துடன் கடந்தனர்.
வழியில் முள்செடிகள் தொடைப் பகுதியில் கீறி அகதாவுக்கு ரத்தம் வழிந்தது. பிரசவம் நடைபெற்று சில நாள்களே கடந்து இருந்ததால், நிற்காத உதிரப் போக்கு. அந்தக் குக்கிராமத்தில் ஒரு மருத்துவச்சி உதவ முன்வந்தாள்.
""மருத்துவச் செலவுக்குத் தர பணம் இருக்கிறதா?'' என்று மருத்துவச்சி கேட்டாள். அகதாவிடம் பணம் இல்லை.
""உன் நீளமான கூந்தலை வெட்டி எடுத்துக் கொள்கிறேன். அதை விற்றுக் காசாக்கிக் கொள்வேன். ‘‘ என்று மருத்துவச்சி இரக்கம் இன்றிச் சொன்னாள்.
தனது அழகுக்கு அழகு செய்யும் நீள் கூந்தலை வெட்ட முழு மனதுடன் சம்மதம் தந்தாள் அந்தத் தெய்வ மகள்.
மருத்துவச்சி வெந்நீரில் குளிக்க வைத்தாள். தூவாலையால் துடைத்து மருந்து கொடுத்தாள். காயங்களுக்கும் மருந்திட்டாள். அதற்குப் பின்னர் கத்திரிக்கோலால் நீள்குழல் கத்திரிக்கப்பட்டது.
நடுவே ஒரு ஆறு குறுக்கிட்டது. முதுகில் பெட்டியைக் கட்டியபடியே ஆற்றில் குதித்து, தாய் நீந்தினாள்.
கரையை அடைந்து, அகதா ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். மாதா ஆலயத்தை அடைந்தாள். பாதிரியார் மரப்பெட்டியைத் திறந்து பார்த்தார். குழந்தையின் உடலைக் கண்டவுடன் கண்கள் பனித்தன. தாய் அகதாவின் பேரன்பு- அவர் கண்ணீரை மேலும் பெருக்கியது. ஞானஸ்தானம் அளித்தார்.
தாயின் விருப்பப்படியே குழந்தைக்கு "கடல்' என்று பெயரிட்டார் பாதிரியார்.
இனி குழந்தைக்கு சொர்க்கத்தின் கதவுகள் திறந்துவிடும் என்ற மட்டிலா மகிழ்வு கொண்டாள் தெய்வத் தாய்.