FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மனப்புண் மறைய ஒரு நெகிழ்ச்சிப் பயணம்!

ஒரு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த பதினெட்டு வயதுப் பெண், தோழியுடன் ஏற்பட்ட சிறிய தவறான புரிதலால் பலத்த காயமடைகிறாள்.

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 4:01 am IST
பகிர்:

ஒரு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த பதினெட்டு வயதுப் பெண், தோழியுடன் ஏற்பட்ட சிறிய தவறான புரிதலால் பலத்த காயமடைகிறாள். அழுதுகொண்டே வீட்டுக்கு ஓடி வருகிறாள். வீட்டில் குறைகளைக் கேட்க யாருமில்லை என்ற ஏக்கம் அவளது கைகளில் பேப்பர் கட்டரைக் கொடுக்கிறது; தனது உடலையே காயப்படுத்திக் கொள்கிறாள்.

இது ஏதோ ஒரு நாள் நடந்த சம்பவமல்ல; பலமுறை கட்டடத்தின் மேலிருந்து குதிக்கத் துணிந்ததும், அதிவேக வாகனங்களுக்கு முன்னால் ஓடியதுமான தொடர் போராட்டத்தின் ஒரு பகுதிதான். அவர்தான் செஹர் ஹாஷ்மி. 'பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிஸார்டர்' (பிபிடி) எனும் தீவிர மனநலக் குறைபாட்டுடன் பிறந்து, அதைத் தன் உறுதியால் வென்று, இன்று இரு சக்கர மோட்டார் பைக்கில் இந்தியா முழுமைக்கும் நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கும் மனநலத் தூதர்.

'என் காயங்களை நான் சுமை என்று நினைத்திருந்தால் முடங்கியிருப்பேன். ஆனால், அவற்றை மற்றவர்களின் கண்ணீரைத் துடைக்கும் வெளிச்சமாக மாற்றியிருக்கிறேன்!' என்கிறார் செஹர் ஹாஷ்மி. இவர் பிரபல சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி- அறிவியல் எழுத்தாளர் டாக்டர் கோஹர் ரஸாவின் வளர்ப்பு மகள்.

Advertisement

Advertisement

தூக்கியெறியப்பட்ட குழந்தையும்... கரம்பற்றிய பெற்றோரும்!

பிறந்து 9-ஆவது மாதத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் விடப்பட்ட பெண் குழந்தை செஹர். 'மூன்றாவதும் பெண் குழந்தையா?' என்ற சமூகத்தின் குறுகிய மனப்பான்மையால் கைவிடப்பட்ட அந்தப் பிஞ்சுப் பூவை, சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி - அறிவியல் எழுத்தாளர் கோஹர் ரஸா தம்பதியினர் தத்தெடுத்து அன்பால் வளர்த்தனர்.

பள்ளிப் பருவத்தில், 'தத்தெடுக்கப்பட்டவள்' என்று சக மாணவர்களால் எள்ளலுக்கு ஆளானபோது, செஹரின் பிஞ்சு மனதில் ஏற்பட்ட காயங்கள் ஆழமானவை.

பள்ளி மாற்றங்கள், தூக்கமில்லாத இரவுகள், கட்டுக்கடங்காத கோபம், தற்கொலை முயற்சிகள் என செஹரின் வாழ்க்கை இருண்டு கொண்டே சென்றது. 'இவளை மனநலக் காப்பகத்தின் இருட்டறையில் பூட்டி மருந்து கொடுத்து தூங்க வையுங்கள்' என்று பலர் அறிவுறுத்தியபோதும், செஹரின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டனர் இவரது வளர்ப்புப் பெற்றோர். மகளுக்காக உச்சநீதிமன்றம்வரை சென்று தத்தெடுப்பு உரிமைகளுக்காகப் போராடினர்.

தில்லி என்.ஐ.எஃப்.டி.-இல் ஃபேஷன் ஸ்டைலிங் பயின்ற செஹர், ஓவியங்கள் வரைவதன் மூலமும், கவிதைகள் எழுதுவதன் மூலமும் தன் மன அழுத்தத்துக்கு வடிகால் அமைத்தார். தான் கடந்துவந்த பாதையை ஒளிவுமறைவின்றி சமூக ஊடங்களில் பேசத் தொடங்கியபோது, அங்கே அற்புதங்கள் நிகழத் தொடங்கின.

கரோனா காலத்தில், பாலின அடையாளம் குறித்த அச்சத்தால் பெற்றோருக்கு உண்மையைச் சொல்ல முடியாமல் தற்கொலை விளிம்பில் நின்ற ஒரு பெண், செஹரின் முகநூல் நேரலையைப் பார்த்துவிட்டுத் துணிவு பெற்று தன் வாழ்க்கையை மீட்டெடுத்தார்.

காஷ்மீரின் கும்ரியால் கிராமத்தில் மூன்று முறை தற்கொலைக்கு முயன்று, கால்கள் செயலிழந்து முடங்கிக் கிடந்த ஷதாப் என்பவரை சந்தித்த செஹர், அவருக்கு இணையவழி மனநல ஆலோசனைகளை ஏற்பாடு செய்தார்.

ஐந்து மாத சிகிச்சைக்குப் பின், 'நான் வாழ விரும்புகிறேன், உழைக்க விரும்புகிறேன்' என்று ஷதாப் கூறியபோது, செஹர் அமைப்பொன்றின் மூலம் ரூ. 1.70 லட்சம் நிதி திரட்டி, அவருக்குச் சிறப்பு மூன்று சக்கர இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொடுத்து, அவரது வாழ்க்கையில் புது ஒளியேற்றினார்!

பைக்கில் தொடரும் நம்பிக்கைப் பயணம்

தன்னைப் போன்ற மனநலப் போராட்ட சந்திப்பாளர்களுக்குச் சமூகம் தரும் அவப்பெயரை உடைக்க, தனது ராயல் என்ஃபீல்ட் பைக்கை ஆயுதமாக்கினார் செஹர்.

தில்லியிலிருந்து காஷ்மீர் வரை நிலச்சரிவு, மேகவெடிப்பு ஆபத்துகளையும் பொருள்படுத்தாது பயணித்து, வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்களிடம் மனநல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

இப்போது, தில்லி - கன்னியாகுமரி - தில்லி வரையிலான சுமார் 7 ஆயிரம் கி.மீ. தூரம் பயணிக்கும் பிரம்மாண்ட பேரணியை கையில் எடுத்துள்ளார். இவருடன் வெவ்வேறு துறைகளில் பரிணமித்து வரும் இளைஞர் தன்னார்வலர்களாக இணைகின்றனர்.

தில்லியில் இருந்து ஆகஸ்ட் 20-இல் புறப்படும் இவர், கேரளம் வழியாக தமிழ்நாட்டின் நாகர்கோவிலுக்கு செப்டம்பர் 18,19, கன்னியாகுமரிக்கு செப்டம்பர் 20, 21, திருநெல்வேலியில் செப்டம்பர் 21, 22, மதுரையில் செப்டம்பர் 22, 23, திண்டுக்கல்லில் 23, 24, திருச்சியில் செப்டம்பர் 24, 25, சேலத்தில் செப்டம்பர் 25, 26 ஆகிய நாள்களில் முகாமிடுகிறார்.

ஒவ்வொரு இடத்திலும் தங்கி மறுதினம் தன்னார்வலர்களுடன் சேர்ந்து மனநலக் குறைபாடு தொடர்புடைய பயிற்சிப்பட்டறைகள், கலந்துரையாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த செஹர் திட்டமிட்டுள்ளார்.

உடலில் உள்ள வடுக்களை மறைக்காமல், அவற்றின் மேல் வெள்ளியால் செய்யப்பட்ட வளையல்களையும் டாட்டூக்களையும் அலங்கரித்து, கம்பீரமாக வலம்வரும் செஹர் ஹாஷ்மி, துன்பங்களில் மூழ்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான மனிதர்களுக்குச் சொல்லும் ஒரே செய்தி இதுதான்:

'இருள் எவ்வளவு அடர்ந்ததாக இருந்தாலும், விடியல் உங்களைத் தேடி வந்தே தீரும். மனநலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் காலை 9 முதல் மாலை 5 மணிவரையிலான நேர பணிகளைச் செய்வது மிகவும் கடினம். சமூகம் அவர்களுக்கு நெகிழ்வுத்தன்மை கொண்ட பணிச்சூழலை உருவாக்க வேண்டும். மனநலச் சிகிச்சை என்பது சாதாரண உடல்நலக் கோளாறுக்கான சிகிச்சையைப் போன்றதே!' என்கிறார் செஹர் ஹாஷ்மி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments