வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா..!
வாழ்க்கையில் அனைத்தையும் இழந்த ராம்கோபால் கோத்தாரி, விரக்தியின் விளிம்பில் இருந்தார்.
வாழ்க்கையில் அனைத்தையும் இழந்த ராம்கோபால் கோத்தாரி, விரக்தியின் விளிம்பில் இருந்தார். அவர் ஒருமுறை கொல்கத்தா மெட்ரோ நிலையத்தில் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவோடு சென்றபோது, 'இன்னும் ஒரு தடவை முயற்சிப்போம்' என்ற எண்ணம் ஏற்பட்டது. முடிவில் அவர் வட துருவத்தில், அதாவது 90 டிகிரி வடக்கு அட்ச ரேகையில் மிதக்கும் பனிக்கட்டிப் பரப்பின் மீது 42.2 கி.மீ. தூரம் ஓடி, மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்த முதல் இந்தியராக மாறியிருக்கிறார்.
'எபிக் அஷ்யூரன்ஸ் சர்வீசஸ் எல்.எல்.பி.' நிறுவனத்தை நடத்தி வரும் நாற்பத்து நான்கு வயதான ராம் கோபால் கோத்தாரி கூறியது:
'நான் 1981-இல் பிறந்தேன். கொல்கத்தாவின் புர்ரா பஜாரில் சாதாரண வீட்டில் வளர்ந்தேன். அப்பா துணிக்கடையில் வேலை செய்துவந்தார். அம்மா குடும்பத்தைப் பார்த்துக்கொண்டார். என் குடும்பத்தில் பட்டப் படிப்பை முடித்த முதல் நபர் நான்தான்.
Advertisement
Advertisement
2002-இல் விமான நிலையங்கள், மெட்ரோ நிலையங்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் போன்ற பணிகளைச் செய்தேன். 2008-இல் உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, வேலையை இழந்தேன். ரூ.4 லட்சம் கடன் பெற்று சிறிய ஆடை உற்பத்தித் தொழிலைத் தொடங்கினேன். மேற்கு வங்கத்தைத் தாக்கிய ஐலா புயலால் நான் முதலீடு செய்திருந்த துணிகள் அனைத்தும் நனைந்து பயன்படாத நிலைக்குத் தள்ளப்பட்டன.
பின்னர் உறவினர் ஒருவர் உதவியுடன் பொதுக் காப்பீட்டுத் துறையில் வேலையில் சேர்ந்தேன். எனது துரதிர்ஷ்டம் குறுகிய காலத்திலேயே திடீரென வேலையிலிருந்து நீக்கப்பட்டேன். கடும் மன அழுத்தத்தால் நிலைகுலைந்தேன். உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்துடன் மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் சென்றேன். அடுத்த கணத்தில் மனைவி செல்போனில் அழைத்து, 'நாம் ஒன்றாக எல்லாவற்றையும் எதிர்கொள்வோம். சங்கடங்களிலிருந்து மீண்டு வருவோம்' என்றார். அனைத்தையும் முதலிலிருந்தே தொடங்கினேன். இணைய மையங்களில் பணியாற்றினேன்.
2012-ஆம் ஆண்டு மே 22 -இல் 'எபிக் அஷ்யூரன்ஸ் சர்வீசஸ் எல்எல்பி' என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன். தொழில் வளர்ந்தவுடன் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யத் தொடங்கினேன். 2013-இல் துபைக்கு மேற்கொண்ட பயணம் எனது வாழ்க்கையின் கண்ணோட்டத்தை மாற்றியது.
பயணங்கள் பொழுதுபோக்காக இல்லாமல், புவியியல், காலநிலை, மனித அனுபவங்களின் பல்வேறு பரிமாணங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பாக மாறின. 79 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளேன். கிளிமஞ்சாரோ, எல்ப்ரஸ் போன்ற மலைச்சிகரங்களில் ஏறியுள்ளேன்.
2018-இல் 'டாடா மும்பை மராத்தான்' போட்டியில் முதலில் பங்கேற்று ஓடத் தொடங்கினேன். தொடர்ந்து முறையான பயிற்சியோ அல்லது நிபுணர்களின் வழிகாட்டுதலோ இல்லாமலேயே மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றேன். அண்டார்டிகாவுக்குச் சென்றவுடன் வட துருவத்தை அடைய சிந்திக்கத் தொடங்கினேன். 90 டிகிரி வடக்கு அட்சரேகையில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்க முடிவு செய்தேன். 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் அவர் அதற்கான முயற்சியை மேற்கொண்டபோது, வெளிப்புறச் சூழல், பயண ஏற்பாடுகளால் போட்டி ரத்து செய்யப்பட்டது.
2025 ஜூலையில் பனிக்கட்டிகளை உடைத்துச் செல்லும் கப்பல் பயணத்தின் ஒரு பகுதியாக நான் ஸ்வால்பார்ட் வழியாகப் பயணம் செய்தேன். ஜூலை 13-இல் நான் புவியியல் ரீதியான வட துருவத்தில் கால் பதித்தேன். அந்தச் சூழலில் தொடர்ச்சியான ஓட்டப் பாதையை அமைப்பது சாத்தியமற்றது என்பதால், மிதக்கும் பனிக்கட்டிகள் மீது, குறிக்கப்பட்ட ஒரு பாதையைச் சுற்றி மீண்டும் மீண்டும் ஓடும் வகையில் மாரத்தான் நடத்தப்பட்டது.
பனிக்கட்டிகள் நிலையற்றதாக இருந்தன; ஓட்டம் தொடங்கியபோது, வெப்பநிலை மைனஸ் 8 டிகிரி செல்சியஸாக இருந்தது. கடும் குளிர், காற்று, ஈரப்பதம், ஓட்டப்பந்தய வீரர்களின் காலடியில் தொடர்ந்து மாறிக்கொண்டிருந்த நிலையற்ற பனிப் படலங்கள் போன்றவை பெரும் சவாலாக இருந்தது. நேரம் செல்லச் செல்ல, ஆர்க்டிக் பகுதியின் மேற்பரப்பில் சூரிய ஒளியால் பனிக்கட்டிகள் உருகத் தொடங்கின. சில பகுதிகளில் நீர் தேங்கத் தொடங்கியது. ஓட்டப் பாதையின் சில பகுதிகள் பனிக்கூழாகியது.
கடினமான பனிப்பகுதிக்கும், கால்கள் உள்ளே புதையும் மென்மையான பகுதிக்கும் இடையே தரைப்பகுதி மாறிக்கொண்டே இருந்ததால், ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டியிருந்தது. என் காலணிகளுக்குள் பனிக்கட்டி கலந்த நீர் புகுந்தது. ஒருகட்டத்தில் என் கால்கள் மரத்துப் போனது. பின்னர் குளிரின் தாக்கம் மாறியபோது திடீரென கடுமையான வலி ஏற்பட்டது. 26-ஆவது கி.மீ. கடந்தபோது, அங்கே சூழல் கணிசமாக மாறியிருந்தது.
பயண ஆதரவு பகுதிக்கு அருகிலுள்ள பாதை நிலையற்றதாக மாறியிருந்தது. பனி மெலிந்து கொண்டிருந்த பகுதிகளை வீரர்கள் கவனமாகத் தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சில பங்கேற்பாளர்கள் வழுக்கி விழுந்தனர். மற்றவர்கள் கணிசமாக வேகம் குறைத்தனர். கீழே இருந்த தரை எதிர்பாராதவிதமாக விரிசல் விட்டதாலோ அல்லது நகர்ந்ததாலோ, சமநிலையை மீண்டும் பெறுவதற்காக நான் சிறிது நேரம் நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
42-ஆவது சுற்றின்போது, சோர்வு முக்கியப் பிரச்னையாக இருக்கவில்லை. ஆனால், தொடர்ச்சியான தசைப்பிடிப்புகளால் ஏற்பட்ட வலியும், முன்னறிவிப்பின்றி மாறிக்கொண்டே இருந்த சூழ்நிலைகளில் தொடர்ந்து செல்வதால் ஏற்பட்ட மன அழுத்தமும்தான் பிரச்னையாக இருந்தது. ஒருகட்டத்தில் நிறுத்தலாமா என்று தோன்றியது. மீதமுள்ள தூரத்தைப் பற்றி சிந்திக்காமல், ஒவ்வொரு சுற்றிலும் முன்னோக்கி நகர்ந்தேன். 50 சுற்றுகளுக்குப் பின்னர் மாரத்தானை, சுமார் 2 மணி 45 நிமிடங்களில் நிறைவு செய்தேன்'' என்கிறார் ராம் கோபால் கோத்தாரி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.