FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஏழு சகோதரிகள் நீர்வீழ்ச்சி

மேகாலயா மாநிலத்தில் உள்ள மிகச் சிறந்த நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான "நோஸ்ங்கிதியாங்' ஏழு பிரிவுகளைக் கொண்டதாகும்.

Updated On : 26 ஜூலை 2026, 4:05 am IST
நீர்வீழ்ச்சி
பகிர்:

மேகாலயா மாநிலத்தில் உள்ள மிகச் சிறந்த நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான "நோஸ்ங்கிதியாங்' ஏழு பிரிவுகளைக் கொண்டதாகும். இது செங்குத்தான பாறை முகட்டிலிருந்து கீழே உள்ள ஆழமான பள்ளத்தாக்கை நோக்கிப் பாய்ந்து, கண்கவர் நீரோட்டத்தை உருவாக்குகிறது. இது "செவன் சிஸ்டர்ஸ்' (ஏழு சகோதரிகள்) நீர்வீழ்ச்சி என்ற பெயரிலேயே அறியப்படுகிறது. இதன் அழகைக் கண்டு ரசிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வருகை தருகின்றனர்.

நோஸ்ங்கிதியாங் நீர்வீழ்ச்சியானது ஏழு தனித்தனி நீர்வீழ்ச்சிகளைக் கொண்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்தையும் ஒரு குடும்பத்தின் சகோதரிகள் எனக் கருதுவதால் இந்த நீர்வீழ்ச்சியை "ஏழு சகோதரிகள் நீர்வீழ்ச்சி' என்ற பெயரால் அழைக்கின்றனர். நாட்டின் நான்காவது மிக உயரமான நீர்வீழ்ச்சியாக இது கருதப்படுகிறது.

மேகாலயாவின் பசுமையான மலைப்பகுதிகள் வழியாகப் பாயும் மழைநீரும் மலை ஓடைகளுமே இந்த நீர்வீழ்ச்சியை உயிர்ப்புடன் வைத்து, ஆண்டு முழுவதும் தடையற்ற நீரோட்டத்தை உறுதி செய்கின்றன. இதன் புவியியல் அமைப்பானது, இந்தப் பகுதியில் பல மில்லியன் ஆண்டுகள் புவியியல் வரலாற்றால் உருவான கரடுமுரடான நிலப்பரப்பையும் மாறுபட்ட நிலத்தோற்றத்தையும் கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

பாசி படர்ந்த பாறைகள், அடர்ந்த தாவரங்கள் நிறைந்த இதன் சுற்றுப்புறம், ஓர் அழகான ஓவியம் போன்ற அமைதியான சூழலை உருவாக்கி, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

மெளஸ்மாய் கிராமத்திலிருந்து ஒரு சிறிய மலையேற்றம் மூலமாகவோ அல்லது மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் பயணித்து வனம், பாறைகள் நிறைந்த பாதைகளில் நிதானமாக நடந்து சென்று இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம்.

நீர்வீழ்ச்சியின் பிரம்மாண்டமான அழகை, பரந்த காட்சிகளை வழங்கும் பார்வை இடங்களில் பார்வையாளர்கள் கண்டால், வியப்பில் ஆழ்வார்கள். அமைதியான இயற்கை நிலப்பரப்புகளுக்கு மத்தியில் புகைப்படம் எடுத்தல், மலையேற்றம், பறவைகளைக் காணுதல், சுற்றுலா போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட இப்பகுதி சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில் நீர்வீழ்ச்சி முழு வேகத்துடனும் மிக அற்புதமான தோற்றத்துடனும் காட்சியளிக்கும். அப்போது வழுக்கும் பாதைகளும், கணிக்க முடியாத வானிலையும் நிலவுவதால் மிகுந்த எச்சரிக்கை அவசியம். அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான வறண்ட காலத்தில், நீர்வீழ்ச்சியைச் சுற்றிப் பார்க்கவும், வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடவும் ஏற்ற நல்ல வானிலை நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments