ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா சாதனையாளர்கள் சொல்கிறார்கள்!
'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும்.
பொ.ஜெயச்சந்திரன்
'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும். மகாபாரதத்தில் கீதாஉபதேசத்திலும், கபில முனிவரின் சாம்கிய தத்துவத்திலும் யோகா குறித்த விவரங்கள் உள்ளன. சீரிய யோகா பயிற்சிகளான கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் ஆகிய மூன்று யோக நிலைகளை 'ராஜயோகம்', 'அஷ்டாங்க யோகம்' என்றெல்லாம் சொல்வர்.
2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-இல் நடைபெற்ற ஐ.நா. சபையின் 69-ஆவது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, 'ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடவேண்டும்' என்று முன்மொழிந்தார். அதே ஆண்டு டிசம்பர் 11-இல் 193 நாட்டு உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. இந்த முன்மொழிவை ஏற்று, 177 இணை ஆதரவு நாடுகளிடம் பெறப்பட்ட ஒருமித்தக் கருத்தின் அடிப்படையில் ஒப்புதல் அளித்தது. இதன்படி யோகா தினம் உற்சாகமாய் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இந்தத் தினம் குறித்து சிலரிடம் கேட்டபோது:
ஆச்சார்யா ஸ்ரீவித்யதுர்கா சி, யோகா பயிற்சியாளர், கோவை:
உடல், மனம், ஒழுக்கம், உணர்ச்சி நிலைகள், ஆன்மிகக் கூறுகள் ஆகியவற்றை உள்ளடக்கியதே யோகா. மன அழுத்தம், தன்னிச்சையாக இயங்கும் நரம்பு மண்டலத்தின் சமச்சீர் நிலையைக் குலைக்கிறது.
இணைப் பிரிவு நரம்பு மண்டலச் செயல்பாடுகளைக் குறைப்பதாலும், பிரிவு நரம்பு மண்டல அமைப்பின் செயல்பாடுகளை அதிகப்படுத்துவதாலும் இந்த சமச்சீர் குலைவானது ஏற்படுகிறது. யோகாவானது இணைப் பிரிவு நரம்பு மண்டலத்தைத் தூண்டுவதன் மூலம் தன்னியக்க நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமான சமச்சீர் நிலைமைக்கு மீண்டும் கொண்டு வருகிறது.
சமச்சீரான உணவும், முறையான பயிற்சியுடன் ஆசனங்களும், மூச்சுப் பயிற்சிகளும் இணைந்த யோகா உடல் பருமனுக்குச் சரியான தீர்வாகும். மூட்டுவலியால் சிரமப்படுவோருக்கும் பயனுடையது. உருவத்தால் மனிதர், உணர்வால் அலைக்கழிக்கப்படும் மனிதர், அறிவார்ந்த மனிதர் என்று மனிதர்களை மூன்று வகைகளாகப் பிரிப்பார்கள் அறிஞர்கள்.
அத்தகைய மனிதர்களை பூரண மனிதர்களாக மாற்றும் பெரும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. வலுவான உடலும், தெளிவான கட்டுப்பாட்டுடன் இயங்குகின்ற மனமும் உடையவனை பரிபூரண மனிதன் என்ற தத்துவத்துக்கு இலக்கணமாக, யோக முறைகள் அமைந்துள்ளன.
ஆ.செ.சிவச்சுடர், யோகா சாதனையாளர், தஞ்சாவூர்:
யோகா என்பது ஒரு முழுமையான வாழ்க்கை முறையாகும். இதன் வேர்கள் இந்தியப் பண்பாட்டிலும், பாரம்பரியத்திலும் ஆழமாக வேரூன்றி இருக்கின்றன. ரிஷிகள், முனிவர்களால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வளர்த்தெடுக்கப்பட்டது.
வேதங்களில் யோகா பற்றிய பதிவுகள் உள்ளன. தினமும் சிறிது நேரமாவது யோகா செய்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். கவனிக்கும் திறன் அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும். நினைவாற்றல் வளரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்.
வே.வர்ஷினி, யோகா சாதனையாளர், மதுரை:
ஆரோக்கியமான வாழ்க்கைக்கான கலையாகவும், அறிவியலாகவும் யோகா பார்க்கப்படுகிறது. நோய்களில் இருந்து விலகி இருக்க விரும்பும் அனைவருக்குமானது யோகா. உள்ளாந்த திறன்களையும், தன்னம்பிக்கையையும் பெருக்கிக் கொள்வதற்கு யோகா சிறந்த வழியாகும்.
இது வாழ்க்கை முறையில் செய்து கொள்ளப்படும் ஒரு மாற்றம். கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சவால்களை எதிர்கொள்வோருக்கு யோகா நிச்சயமாக ஒரு மடைமாற்றமாக இருக்கும். ஆரோக்கியமான வாழ்க்கையை மனிதர்கள் வாழ ஒரு மணி நேரம் யோகா பயிற்சி செய்தாலே போதுமானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.