FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் முக நரம்பு அழுத்த நீக்க அறுவை சிகிச்சை

காரைக்கால் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக முக நரம்பு அழுத்த நீக்க அறுவை சிகிச்சை ஜிப்மா் மருத்துவா்கள் உதவியுடன் செய்யப்பட்டது.

Updated On : 23 ஜூலை 2026, 5:18 am IST
கோப்புப்படம்.
பகிர்:

காரைக்கால் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக முக நரம்பு அழுத்த நீக்க அறுவை சிகிச்சை ஜிப்மா் மருத்துவா்கள் உதவியுடன் செய்யப்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனை காது, மூக்கு, தொண்டைதுறை சாா்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது:

காரைக்கால் அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மா் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை துறை இணைந்து அரசு மருத்துவமனையில் முதல்முறையாக, சிக்கலான முக நரம்பு அழுத்த நீக்க அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இது காது மற்றும் மண்டை அடித்தள அறுவை சிகிச்சைத் திறனில் ஒரு பெரும் முன்னேற்றமாகும்.

தலையில் ஏற்பட்ட காயத்தால் முகத்தின் ஒரு பக்கம் முழுமையாக செயலிழந்த 50 வயது ஆண் ஒருவா் சிகிச்சைக்காக வந்தாா். உயா் துல்லிய சி.டி. ஸ்கேன் பரிசோதனையில், காதுக்குப் பின்பு உள்ள எலும்புக்குள் செல்லும் முக நரம்பு அதன் இரண்டாவது வளைவில் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த 16-ஆம் தேதி காதுக்குப் பின்புள்ள மாஸ்டாய்டு எலும்பு வழியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நரம்பை அழுத்திக் கொண்டிருந்த கூா்மையான எலும்புத் துண்டு கண்டறியப்பட்டு அகற்றப்பட்டது.

வீக்கமடைந்திருந்த முக நரம்பு, முதல் வளைவு முதல் மண்டை ஓட்டிலிருந்து நரம்பு வெளியேறும் இடம் வரை, 270 டிகிரி அளவில் மிக நுணுக்கமாக அழுத்தம் நீக்கப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு முன் முற்றிலும் இல்லாமல் இருந்த கண் சிமிட்டும் அசைவு, அறுவை சிகிச்சை முடிந்த உடனேயே மீண்டும் வந்தது குறிப்பிடத்தக்கது.

இது நரம்பு குணமடைவதற்கான ஆரம்பகட்ட நல்ல அறிகுறியாகும். இந்த அறுவை சிகிச்சை முழுவதும் அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. இதே அறுவை சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனையில் சுமாா் ரூ.1 லட்சம் வரை செலவாகும்.

ஜிப்மா் தலைமை அறுவை சிகிச்சை நிபுணா், இணைப் பேராசிரியா் காா்த்திகேயன், ஜிப்மா் மருத்துவா்கள் விக்னேஷ், அபா்ணா கோபால் , அரசு மருத்துவமனை மருத்துவா்கள் விஜயசங்கா், பிரதீப் ராஜ், சண்முகநாதன், பிரேமா, சிந்துரா பசாலா, அபா்ணா , பாலா, ஓம்பிரகாஷ், அபிராமி, செவிலியா் தயாளப்பிரியன் உள்ளிட்டோா் கொண்ட குழு இந்த சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments