முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

விலங்கியல் பூங்காக்களில் சுவாரசியம்!

'நாட்டின் மிகப் பழமையான மிருகக்காட்சி சாலை' என்ற பெயரை மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் விலங்கியல் பூங்கா பெற்றுள்ளது.

Updated On : 24 மே 2026, 12:00 am IST
பகிர்:

'நாட்டின் மிகப் பழமையான மிருகக்காட்சி சாலை' என்ற பெயரை மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் விலங்கியல் பூங்கா பெற்றுள்ளது. இந்தப் பூங்கா கொல்கத்தாவாசிகளின் நிதியுதவியுடனும், அவர்கள் அளித்த விலங்குகளுடனும் 1875-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-இல் தொடங்கப்பட்டது.

அப்போதைய கவர்னல் ஜெனரல் ரிச்சர்ட் வெல்லர்ஸ்லிக்கு விலங்குகள் மீது மிகுந்த பிரியம். பராக்பூரில் இருந்த இவரது கோடை இல்லத்திலேயே விலங்குகள் காட்சியகம் வைத்திருந்தார். 1842-ஆம் ஆண்டிலேயே ஒரு விலங்கியல் பூங்கா அமைக்க முயற்சி தொடங்கினார். தோல்வியில் முடிந்தது. 1873-இல் அன்றைய அரசு இந்தத் திட்டத்துக்கு 46.5 ஏக்கர் நிலம் வழங்கியது. கவர்னர் ஜெனரல் பராமரித்த மிருகங்கள் இதில் சேர்க்கப்பட, 1875-ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

இந்தப் பூங்காவில் ராம் பிரம்ம சன்யாள் என்பவர் முதல் கண்காணிப்பாளராக இருந்தார். ஒவ்வொரு விலங்கையும் எவ்வாறு அணுகுவது என்பதை அறிந்த அவர், 1892-இல் சிறைப்பட்ட விலங்குகளை நிர்வகிப்பதற்காக நூலையும் எழுதினார். அந்த நூல் சர்வதேச அளவில் பிரபலமானது.

Advertisement

Advertisement

'டென்ட்டில் அடைக்கப்பட்ட விலங்குகளை நிர்வகிப்பது எப்படி?' என்பது குறித்த அவரது மற்றொரு நூலும் பிரபலமானதாகும்.

தற்போது இங்கு 1967 விலங்குகளும், 108 இனங்களும் உள்ளன. வங்கப்புலி, ஆசிய சிங்கம், வரிக் குதிரை, ஒட்டகச் சிவிங்கி, சிம்பன்சி, குரைக்கும் மான் உள்ளிட்ட அரிய வகை விலங்குகளும் உள்ளன. 2006-ஆம் ஆண்டு வரை 250 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த ஆமை ஒன்று இங்கிருந்தது.

ஆண்டுதோறும் 30 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். விடுமுறை நாள்களில் அதிக அளவில் கூட்டம் வருகிறது.

2018 ஜூன்1-இல் ஒரே நாளில் அதிகபட்சமாக 1.10 லட்சம் பார்வையாளர்கள் வந்திருந்தனர்.

புலிகள் காப்பகம்:

கர்நாடகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஆழத்தில் அரேபியக் கடற்கரைக்கு இணையாக, அடர்ந்த வெப்ப மண்டல வனப்பகுதிகளால் சூழப்பட்ட பகுதியில் 'முத்தோடி வனவிலங்கு சரணாலயம்' எனும் பத்ரா புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு பல அதிசயங்களும் ரகசியங்களும் உள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது ரயில்வே தண்டவாளங்கள் அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட தேக்கு மர வனப்பகுதிகளில் இதுவும் ஒன்று. இங்குள்ள ஒரு ஒற்றை தேக்கு மரம் நீலவானத்துக்கு எதிராக தன்னை பறைசாற்றிக் கொள்ளும் வகையில் உயர்ந்து நிற்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் வந்த 'அவதார்' படத்தில் வரும் 'ஹோம் ட்ரீ'யை நினைவூட்டும் வகையில் இந்த மரம் உள்ளது. 32 மீட்டர் உயரமும், 5.45 மீட்டர் சுற்றளவும் கொண்ட இந்தத் தேக்குமரத்தின் அடிப்பகுதியை பலரும் ஒன்றுசேர்ந்து கட்டிப்பிடிக்கத் திரண்டனர். இதனால் திகைத்த வனத்துறையினர் தற்போது அதன் வரலாற்றை விவரிக்கும் அறிவிப்புப் பலகையை வைத்ததோடு, சுற்றிலும் வேலியையும் அமைத்துள்ளனர்.

300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தேக்கு மரத்துக்கு தங்கத்துக்கு ஈடான மதிப்பு என்பதால், மரத்துக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு உண்டு. பல முறை ரோந்தும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.