FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பரணில் கிடைத்த வாழ்க்கை!

ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சேர்ந்த ஐம்பது வயதான செ.ராமேஸ்வரி, பிளஸ் 2 படித்துள்ளார்.

பகிர்:

ஆர். மாணிக்கம்

ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சேர்ந்த ஐம்பது வயதான செ.ராமேஸ்வரி, பிளஸ் 2 படித்துள்ளார். இவரது கணவர் செந்தில் விவசாயத்துடன் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றிவந்தார். கடலூரில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணியை மேற்பார்வையிட 2018-ஆம் ஆண்டு சென்ற செந்திலுக்கு நீர் ஒவ்வாமையால் உடலில் தோல் நோய் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளினால் தீர்க்க முடியாத நோயை, பரணில் கிடைத்த நூலில் இருந்த பாட்டி வைத்திய முறையில் குணப்படுத்திய ராமேஸ்வரி அதில் கிடைத்த அனுபவத்தை மூலதனமாக்கி தொழில்முனைவோராக மாறி உள்ளார்.

இதுகுறித்து ராமேஸ்வரியிடம் பேசியபோது:

Advertisement

Advertisement

'தோல் நோய்க்காக எனது கணவர் செந்தில் புகழ்பெற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெறச் சென்றபோது, அங்கு அளிக்கப்பட்ட மருந்துகள் பகல்பொழுதிலேயே ஆழ்ந்த தூக்கத்துக்கு அழைத்துச் சென்றது. வாகனங்களை இயக்கிச் சென்றபோது பலமுறை விபத்துகளிலிருந்து அவர் தப்பி உள்ளார்.

'கணவரின் கஷ்டத்தை தீர்க்க என்ன வழி?' என்று எண்ணிக் கொண்டிருந்தபோது, எங்கள் வீட்டின் பரணில் கிடந்த பழைய புத்தகம் ஒன்றைப் பார்த்தேன். அதில் பாட்டி வைத்தியக் குறிப்புகள் இருந்துள்ளன. அதில் குறிப்பிட்டுள்ள மருத்துவக் குறிப்புகளைக் கொண்டு எளிய மூலிகைகளின் சாறு கொண்டு இயற்கை முறையிலான குளியல் சோப்பைத் தயாரித்தேன். அதை பயன்படுத்திய கணவருக்கு ஆச்சரியப்படத்தக்க முறையில் குறைந்த கால அவகாசத்திலேயே தோல் நோய் அகன்றது.

பல லட்சம் ரூபாய் செலவழித்தும் தீராத தோல் நோய் பாட்டி வைத்தியக் குறிப்பில் குணமானது. அன்றிலிருந்து இயற்கை முறையில் குளியல் சோப்புகளைத் தயாரித்து அக்கம்பக்கத்தினருக்கு அளித்தேன். அதைப் பயன்படுத்திய பலர் தோல் உபாதைகள் நீங்கியதாக சொல்லியதுடன், 'நீங்கள் ஏன் இதைத் தொழிலாக மாற்றக்கூடாது' என்று கேட்டனர். அதன் பின்னர், கடந்த 8 ஆண்டுகளாக இந்தத் தொழிலை மேற்கொண்டுவருகிறோம். வீட்டில் இருந்துகொண்டு செய்யும் தொழிலாக உள்ளதால் அதிக முதலீடு இல்லை.

சோப்புக்கு உறை தயாரிக்க சிவகாசியில் உள்ள அச்சகத்துக்குச் சென்றபோது அங்கு அவரை சோப்பின் 'பிராண்ட் நேம்' என்ன? என்று கேட்டனர். எனது மனதில் கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் நினைவுக்கு வரவே அவரது பெயரில் உள்ள 'மகுடம்' என்ற பெயரை வைத்தேன். வர்த்தகம் விரிவடைய கணவரும் கட்டுமான நிறுவன மேலாளர் பணியை ராஜிநாமா செய்துவிட்டு மனைவியின் சோப் வர்த்தகத்தில் இணைந்தார்.

ஆவாரம் பூ, ஹெர்பல், பப்பாளி சோப்புகள், 54 மூலிகைகளைக் கொண்டு உருவாக்கிய ஹெர்பல் ஷாம்பூ, மூலிகை தலைமுடி தைலம், சீயக்காய் ஷாம்பூ, ஹேர்டை, நலங்குமாவு பவுடர் போன்றவற்றைத் தயாரித்துவருகிறோம்.

இதற்குப் பயன்படுத்தப்படும் மூலிகைகளைத் தங்களது விளைநிலத்திலேயே பயிரிடுகிறோம். இந்தத் தயாரிப்புகளை ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் விற்பனைக்கு கொண்டு செல்கிறோம்.

இந்தத் தயாரிப்புகள் குறித்து கேள்விப்பட்ட ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி எனது வீட்டுக்கு நேரில் வந்து வாழ்த்தினார்' என்கிறார் ராமேஸ்வரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments