படை கடக்கும் காலம் காட்டும் படைப்பெருக்கம்
பல மன்னர்களை வென்று, அவர்களின் நிலத்தைத் தன்வசப்படுத்தியவன் சோழன் நலங்கிள்ளி.
பல மன்னர்களை வென்று, அவர்களின் நிலத்தைத் தன்வசப்படுத்தியவன் சோழன் நலங்கிள்ளி. பலம் பொருந்திய படை வீரர்கள் அவனிடம் இருந்ததுதான் அதற்குக் காரணம். அவனுடைய படை, பலம் பொருந்தியது என்பதோடு, பெருக்கத்தில் மிக்கதாகவும் இருந்தது என்பதை,
தலையோர் நுங்கின் தீஞ்சோறு மிசைய
இடையோர் பழத்தின் பைங்கனி
Advertisement
மாந்தக்
கடையோர் விடுவாய்ப் பிசிரொடுசுடு
கிழங்குநுகர
நிலமார் வையத்து வலமுறை வளைஇ
வேந்து பீடழித்த ஏந்துவேல் தானை
(புறம். 225)
என்று ஆலத்தூர் கிழார் கூறுகிறார்.
சோழன் நலங்கிள்ளியின் நாற்படைகளும் இன்னொரு நாட்டின்மீது படையெடுத்து ஆர்ப்பரித்துச் சென்ற காட்சி, புலவரின் கண்ணில் பட்டிருக்க வேண்டும். புலவர் இருந்த ஊர் வழியாகத்தான் படைகள் சென்றிருக்க வேண்டும். அவர் இருந்த இடத்திலிருந்தே அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டுவதாக அவர் விவரிக்கும் காட்சி அமைந்துள்ளது.
அது பனைமரங்கள் அடர்ந்த பகுதி. அதனால், 'முதலில் சென்ற படைவீரர்கள் அங்கு கிடைக்கும் பனை நுங்கைத் தின்கிறார்கள். இடையில் வரும் வீரர்கள் பனம்பழத்தைச் சுவைத்து உண்கிறார்கள். கடைசியில் வரும் வீரர்கள் முற்றி வெடித்த தோலுடைய சுட்ட பனங்கிழங்கைத் தின்றுகொண்டு போகிறார்கள். அதாவது, பனையில் நுங்கு கிடைக்கும் காலத்தில் முன்னணி வீரர்கள் அந்த இடத்தைக் கடக்கத் தொடங்குகிறார்கள்.
இடையில் வரும் வீரர்கள் அந்த இடத்திற்கு வரும்போது நுங்கு பனம்பழம் ஆகிவிடுகிறது. இறுதியாக வரும் வீரர்கள் அந்த இடத்திற்கு வரும்போது பனம்பழம் கிழங்காகிவிடுகிறது... இப்படி நுங்கு கிடைத்த காலத்தில் தொடங்கி, அது பழமாகிக் கிழங்காகும் வரை படைவீரர்கள் தொடர்ந்து சென்றுகொண்டே இருப்பதாகப் புலவர் கூறுகிறார்.
நுங்கு பனங்காயாகிப் பழமாவதற்கு மூன்றுமாதங்களாகும். அந்தப் பனம்பழம் விதையாகப் போட்டு முளைத்து, பக்குவமான கிழங்கு ஆவதற்கு மூன்று மாதங்களாகும். இப்படிப் பார்த்தால் அந்தப் படை ஓரிடத்தைக் கடப்பதற்கு ஆறு மாதங்கள் எடுத்துள்ளது. சோழன் நலங்கிள்ளியின் படைப்பெருக்கத்தைப் பனையின் நுங்கு, பழம்,கிழங்கு ஆகியவை கிடைக்கும் காலத்தைக் கணக்கில் கொண்டு காட்டும் புலவரின் கற்பனைத்திறம் சிறப்புக்குரியது.