வள்ளுவரைப் போற்றும் வெண்பா
பெரும்புலவரின் திருக்குறள் விருத்தம் - நீதியின் நெறிபாடல்
பெரும்புலவர் அரசஞ்சண்முகனார் மதுரைக்கருகிலுள்ள சோழவந்தான் எனும் ஊரில் பிறந்தவர். இவர் இலக்கண இலக்கிய ஆராய்ச்சியிலும் உரைநடை எழுதுவதிலும், சித்திரக்கவி யாப்பதிலும் ஆற்றல் மிக்கவர்.
திருக்குறள் சண்முக விருத்தி தொல்காப்பியப் பாயிரவிருத்தி முதலிய நூல்களும் ஏகபாத நூற்றந்தாதி முதலிய பிரபந்தங்களும் இவர் இயற்றியவையே. இவர் இயற்றிய திருக்குறள் நேரிசை வெண்பா நூல் புகழ் மிக்கது.
திருக்குறள் நேரிசை வெண்பாவில் வரிசையாகக் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு திருக்குறளையும் பின்னிரண்டடியாக வைத்து அக்குறள் நீதிக்கியைந்த ஒரு நிகழ்வு அல்லது நீதி அடங்குமாறு பாடிய அடிகள் இரண்டை முன்னிரண்டடியாக அமைத்து இரண்டாம் அடியின் மூன்றாம் சீரில் வள்ளுவரே எனத் தெய்வப்புலவரை முன்னிலையாக்கித் தனிசொல்லோடு நேரிசை வெண்பா வடிவில் இயற்றப்பெற்றதால் இது திருக்குறள் நேரிசை வெண்பா எனப்பெயர் பெற்றது.
Advertisement
Advertisement
திருக்குறளுக்கு இவ்வாறு இயற்றப்பெற்ற நூல்களுள் இதுவொன்றே வள்ளுவரை முன்னிறுத்தி எழுதிய நூல் என்பது திருக்குறளுக்கும் வள்ளுவப்பெருந்தகைக்கும் பெருமை தருவது.
எடுத்துக்காட்டாக இரு திருக்குறள் நேரிசை வெண்பாக்கள்:
சாயா இரணியனும்சாய, அவன்
இளஞ் சேய்
மாயாநல் வாழ்வுறலென்
வள்ளுவரே - ஆயின்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்
நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
பெய்யமழை இந்திரன்பாற்
பெட்டான் பொருநை யொடு
வையையுடை யானுமென்னோ
வள்ளுவரே - உய்யவே
நீரின்று அமையாது உலகுஎனின்
யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.