ஈழம்-நட்பும் உறவும்...
ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் இறை, இலக்கியம் தொடங்கி அரசியல் வரை தொடர்பு உண்டு.
ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் இறை, இலக்கியம் தொடங்கி அரசியல் வரை தொடர்பு உண்டு. ஈழத்துப் பூதன்தேவனார் என்ற புலவரின் ஏழு பாடல்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. அனைத்தும் அகத்திணைப் பாடல்களாக அமைந்துள்ளன.
புலவர்கள் அக்கால அரசர்கள் பற்றிப் பாடுவது இயல்பானது. ஆனால், ஈழத்துப் பூதன்தேவனார் எந்தத் தமிழ் மன்னரைப் பற்றியும் பாடவில்லை. இதனால், இவர் ஈழத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வாழ வந்தவர் என்பதைவிட, ஈழத்தில் வாழ்ந்தவர் என்று கொள்வதற்கு அதிகம் இடம் இருக்கிறது.
அதே நேரத்தில் ஈழத்திலிருந்து தமிழகம் வந்து வாழ்ந்த மக்களும் ஏராளமாக இருந்தனர் என்பதை பட்டினப்பாலை பதிவு செய்கிறது.
Advertisement
Advertisement
கரிகாலன் ஆட்சிக் காலத்தில், புகார் நகரத்து தெருக்களில் குவிக்கப்பட்டிருந்த செல்வ வளங்களில் ஈழத்து உணவும் இடம்பெற்றிருந்தது என்பதை,
தென் கடல் முத்தும், குண கடல் துகிரும், / கங்கை வாரிதியும், காவிரிப் பயனும், / ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும் / அரியவும், பெரியவும் நெரிய ஈண்டி,'
வரிகள் காட்டுகின்றன.
ஈழம் என்ற சொல் சங்ககாலம் தொடங்கிப் பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் வழங்கி வந்ததை
முத்தொள்ளாயிரம் சொல்கிறது,
கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால் / தத்துநீர்த் தண்ணுஞ்சை / தான்மிதியாப்-பிற்றையும் / ஈழம் ஒருகால் மிதியா வருமேநங் / கோழியர்கோக் கிள்ளி களிறு!'
(முத்தொள்ளாயிரம்)
கிள்ளிவளவன் என்ற சோழ மன்னனின் யானை ஒரு கால் காஞ்சியிலும் ஒரு கால் தஞ்சையிலும் மூன்றாவது கால் ஈழத்தில் நிற்கும் என்று சோழ நாட்டின் எல்லை கடலுக்கு அப்
பாலும் விரிந்திருந்தது என்பதை சொல்வதற்கு ஈழத்தைக் குறிப்பிடுகிறது.
சிறுபாணாற்றுப்படை, தொன்மாவிலங்கை' என ஈழ நாட்டைக் குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரம் தொல் இலங்கை' என்கிறது. ஈழத்து மன்னன் கயவாகு சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் கட்டி விழா நடத்திய போது அந்த விழாவில் கலந்து கொண்டதை,
கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் / எம் நாட்டு ஆங்கண் இமயவரம்பனின் / நன்னாள் செய்த நாளணி வேள்வியில் / வந்தீகு என்றே' வணங்கினர் வேண்டத் / தந்தேன் வரம்' என்று எழுந்தது ஒருகுரல்
(சிலப்பதிகாரம் 30 வரந்தரு காதை)
என்றும்,
அதே நம்பிக்கையுடன் கண்ணகிக்கு தன்னுடைய நாட்டிலும் கோயில் கட்டித் திருவிழா நடத்தினான் என்பதை, அதுகேட்டுக் கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகை...
(சிலப்பதிகாரம், உரைபெறு கட்டுரை) என்று சிலப்பதிகாரம் காட்டுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.