FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்த வாரம் கலாரசிகன் - 04-10-2026

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தரும், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான முனைவர் ம. இராசேந்திரனை சந்திக்க, நானும், நண்பர் ராஜ்கண்ணனும் சென்றிருந்தோம்.

4 October 2026, 6:11 pm IST
பகிர்:

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தரும், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான முனைவர் ம. இராசேந்திரனை சந்திக்க, இப்போது ராஜீவ் காந்தி சாலை என்று அழைக்கப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்த கழிப்பட்டூருக்கு நானும், நண்பர் ராஜ்கண்ணனும் கடந்த திங்கள்கிழமை சென்றிருந்தோம்.

எனது சேகரிப்பில் உள்ள புத்தகங்களைப் பாதுகாக்க அதிக இடங்கள் தேவைப்பட்டது. நல்ல காற்றோட்டமான அடுக்குமாடிக் குடியிருப்பு என்பதுடன், காலாற நடைப்பயிற்சி செய்ய சுற்றிலும் விசாலமான சுற்றுப்புறம். இங்கே வந்து விட்டோம்'' என்று தனது கழிப்பட்டூர் இடமாற்றத்துக்கான காரணங்களை விளக்கினார் முனைவர் ம.ரா. வழக்கம்போல எங்களது உரையாடல் நாட்டு நடப்பு, தமிழ் இலக்கியம், மொழி வளர்ச்சி உள்ளிட்டவை குறித்துச் சுற்றிச் சுழன்றது.

புதிதாகத் தமிழுக்கு வார்த்தைகளைத் தேடுவது, தொழில்நுட்பத்தின் உதவியுடன் பழைய நூல்களையும், படைப்புகளையும் புத்தாக்கம் பெறச் செய்வது போன்ற சேவைகளில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பவர் அவர். தொழில்நுட்பத்தில் தன்னை அன்றாடம் புதுப்பித்துக் கொள்வதில் முனைப்புடன் இருப்பவர் முனைவர் ம.ரா. என்பதால், அவரிடம் பேசிக்கொண்டிருந்தால் பல புதிய தகவல்கள் கிடைக்கும்.

Advertisement

Advertisement

அருகிவரும் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்' என்கிற பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட, திராவிடச் சிந்தனையாளர்களில் ஒருவர் என்பதால், எங்களது விவாதங்களும், கலந்துரையாடல்களும் எப்போதும் குறுகிய கண்ணோட்டமில்லாத விசாலமான பரப்பில் இருப்பதில் வியப்பில்லை. அது சங்க இலக்கியமானாலும், சமய இலக்கியமானாலும், பின்-முன் நவீனத்துவப் படைப்புகளானாலும் முனைவர் ம.ரா. வின் பரந்து விரிந்த படிப்பும், புரிதலும் என்னை எப்போதுமே வியப்பில் ஆழ்த்துவதாக இருக்கும்.

எங்கள் உரையாடல், கனடாவின் டொராண்டோ நகரில் இந்த மாதம் 15,16,17 தேதிகளில் நடக்க இருக்கும் உலகச் செம்மொழி மாநாடு குறித்துத் திரும்பியது. ஃபெடரேஷன் ஆஃப் குளோபல் டமில்ஸ்' என்கிற அமைப்பு ஒருங்கிணைக்கும் அந்த மாநாட்டில் உலகளாவிய அளவில் ஆய்வுகள் நடத்தும் பல தமிழறிஞர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இது குறித்து நான் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன்.

அந்த மாநாட்டில் முனைவர் ம.ரா. கலந்து கொள்ள இருக்கிறார். எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது. ஆனால், இன்னும் நுழைவு அனுமதி (விசா) கிடைக்காததால், நான் கலந்துகொள்ள இயலுமா என்று தெரியவில்லை.

1966-இல் தனிநாயகம் அடிகள், கோலாலம்பூரில் ஒருங்கிணைத்த உலகத் தமிழ் மாநாட்டில் அரசியல் மனமாச்சர்யங்களை அகற்றி நிறுத்தி, அன்றைய முதல்வர் எம். பக்தவத்சலமும், எதிர்க்கட்சித் தலைவர் இரா. நெடுஞ்செழியனும், ம.பொ.சி, தெ.பொ.மீ., கி.வா.ஜ. உள்ளிட்ட அரசியல், இலக்கிய ஆளுமைகளும் கலந்து கொண்டார்கள். இப்போது-இன்றைய, முந்தைய ஆட்சியாளர்களிடம் இருந்து வாழ்த்துச் செய்திகூட இன்னும் வழங்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது.

இன்னும் பத்து நாள்கள் இருக்கின்றன. பத்து நிமிட வேலை. மின்னஞ்சலில் ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்பலாம்தானே...? என்கிற வழிகாட்டுக் குழுத் தலைவர் நிமல் விநாயகமூர்த்தியின் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை.

communication@tamilfederation.org, Nimal@tamilfederation.org என்பவை மின்னஞ்சல் முகவரிகள். தமிழ் மீதும், தமிழினத்தின் மீதும் ஆர்வமுள்ள தலைவர்களும், இலக்கிய ஆர்வலர்களும் வாழ்த்துச் செய்தி அனுப்பி, டொராண்டோ மாநாடு வெற்றி பெற வாழ்த்த வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்!.

முனைவர் ம. இராசேந்திரனை நான் சந்தித்துப் பிரியும் ஒவ்வொரு முறையும், அவர் அந்த சந்திப்பின் நினைவாகக் கையொப்பமிட்டு எனக்கு ஒரு புத்தகத்தைத் தருவது வழக்கம். இந்த முறை எனக்கு அவர் தேர்ந்தெடுத்துத் தந்த புத்தகம் முனைவர் மு. இராமசுவாமி எழுதிய நாடகவியல் களஞ்சியம்'.

இதை மீட்டெடுத்த கருவூலம்' என்று முனைவர் ம. இராசேந்திரன் குறிப்பிட்டிருப்பது உண்மையிலும் உண்மை. பேராசிரியர் மு. இராமசுவாமியின் என்னுரை' எடுத்தியம்பும் செய்திகளைப் படித்தபோது திக்பிரமை பிடித்ததுபோல, நான் சமைந்து விட்டேன். அப்போதுதான் புரிந்தது, நாடகவியல் களஞ்சியம்' தொகுப்பது என்பது எத்துணை கடினமான உழைப்பில் உருவாக்கப்படுவது என்று.

அகலமான கண்ணோட்டம், தொன்மையான, நவீன, ஐரோப்பிய மொழி நாடகக் கலைச் சொல் ஆளுமையுள்ள நுணுக்கமான நூலறிவு.

இந்தக் களஞ்சியத்தை அணி செய்கின்றன'' என்கிற எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் அணிந்துரை வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மையிலும் உண்மை. இதற்கு முன்பு செய்யப்பட்டிருக்கும் முயற்சிகள் குறித்தும் பதிவு செய்திருப்பது முனைவர். மு. இராமசுவாமியின் பெருந்தன்மை என்றுதான் கூற வேண்டும்.

1954-இல் பம்மல் சம்பந்த முதலியாரின் 80-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு 33 அறிஞர்களின் நாடகக் கட்டுரைகளின் தொகுப்பு நாடகக் களஞ்சியம்' என்ற பெயரில் வெளியிடப்பட்டது; 1964-இல் அ. பாபநாசம் என்னும் வழக்குரைஞர் தொகுத்த நாடகக் கலைக்களஞ்சியம்' திருநெல்வேலியில் இருந்து வெளியிடப்பட்டிருக்கிறது; 1988-இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாடகக் களஞ்சியத் துறை, மூன்று நாடகக் களஞ்சியத் தொகுப்புகளை வழங்கி இருக்கிறது. அவற்றை எல்லாம் உள்ளடக்கி தனது முக்கால்

நூற்றாண்டுகாலத் தேடல்களையும், ஆய்வுகளையும் இணைத்து உருவாக்கப்பட்டிருப்பதுதான் இப்போது தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டிருக்கும் மு. இராமசுவாமியின் நாடகவியல் களஞ்சியம்'.

1946-இல் அப்போதைய சென்னை மாகாணக் கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கம் செட்டியாரால் தொடங்கப்பட்ட தமிழ் வளர்ச்சிக் கழகம்' இப்போது முனைவர் ம. இராசேந்திரன் தலைமையில் முன்னெடுக்கும் பல தனித்த முயற்சிகளில் முக்கியமானது முனைவர் மு. இராமசுவாமியின் நாடகவியல் களஞ்சியம்'. வருங்கால நாடகவியல் ஆய்வாளர்களின் கலங்கரை விளக்கமாகத் திகழும் இந்த நூல், தமிழ் இலக்கிய வரலாற்றின் தவிர்க்க முடியாத தகவல் பெட்டகம்; ஆவணப் பதிவு.

கவிக்கோ நினைவு ஹைக்கூ போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றிருக்கும் கவிஞர் புதுகை ஆதீரா தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். மூன்று தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. கவிதை, சிறுகதை என்று பயணிக்கும் படைப்பாளி, முற்றத்தில் உறங்கும் முழு நிலவு' என்கிற கவிதைத் தொகுப்பில் இருக்கிறது அவரது இந்தக் கவிதை...

போரில் இழந்த கை

இப்போது வலி தெரிகிறது

கட்டியணைக்கும் மகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments