FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பொருள்செயல்வகையும் பாரதியின் நிலையும்...

திருவள்ளுவர் அறச்செல்வம் வளர்த்த அருட்செல்வர். ஆயினும், பொருட்செல்வத்தைத் புறந்தள்ளினாரில்லை.

6 செப்டம்பர் 2026, 6:43 pm IST
பகிர்:

திருவள்ளுவர் அறச்செல்வம் வளர்த்த அருட்செல்வர். ஆயினும், பொருட்செல்வத்தைத் புறந்தள்ளினாரில்லை. அதன் இன்றியமையாமையைப் பொருள் செயல்வகை (76) அதிகாரத்தில் எடுத்துரைத்தார்.

அன்பென்னும் தாய் பெற்ற அருளென்னும் குழந்தை பொருளென்னும் செவிலித்தாயால் வளர்க்கப்படும் (757) என்றார். 'செய்க பொருளை' என்று கட்டளையிட்டு, அதுதான் பகைவரின் செருக்கை அறுக்கும். அவ்வாறு அறுப்பதற்கு அதைவிடக் கூரிய ஆயுதம் வேறில்லை என்று இயம்பினார் (759).

பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும், பொருளல்லது இல்லை பொருள் (751) என்ற குறட்பாவில் ஒரு பொருளாக மதிக்கப்படாத ஒருவரை, மதிப்புமிக்க பொருளாகச் செய்யவல்ல செல்வத்தைத் தவிர வேறுபொருள் இல்லை என்று ஆய்ந்துரைத்தார்.

Advertisement

Advertisement

பொருளாதாரத்தின் தந்தையாக இலங்கி, திறனறிந்து தீதின்றி வந்த பொருள்தான் அறத்தையும் இன்பத்தையும் கொடுக்கும் (754). இல்லையெனில் அவ்விரண்டையும் கெடுக்கும் என்று பொருள் செய்ய வேண்டிய முறைமையைக் கற்பித்தார்.

செல்வர்க்கே எல்லாரும் செய்வர் சிறப்பு (752),

செல்வமே என்றும் பொய்யா விளக்கு (753) என்ற உண்மைகளை உலகுக்கு விளம்பினார்.

தந்தையின் மறைவுக்குப் பிறகு சிறுவன் பாரதியை ஏழ்மையும் வறுமையும் இன்னலுறச் செய்தன. பிற்காலத்தில் 'உப்பு, புளி, மிளகாய்க்கெல்லாம் என்னைக் கவலைப்பட வைத்தால் நான் நாத்திகன் ஆகிவிடுவேன்' என்று காளியிடம் பாரதி எச்சரிக்கை செய்துள்ளார். அவர் தமது சுயசரிதையில் 'பொருட்பெருமை' என்னும் பகுதியில்,

பொருளி லார்க்கிலை இவ்வுல கென்றநம்

புலவர் தம்மொழி பொய்ம்மொழி அன்றுகாண்,

பொருளி லார்க்கின மில்லை, துணையிலை,

பொழு தெலாமிடர் வெள்ளம்வந் தெற்றுமால்

பொருளிலார் பொருள் செய்தல் முதற்கடன்;

போற்றிக் காசினுக் கேங்கி உயிர்விடும்

மருளர் தம்மிசை யேபழி கூறுவன்

மாம கட்கிங்கொர் ஊன முரைத்திலன்.

என்று வருந்திப் பாடியுள்ளார். இப்பாடல் வள்ளுவப் பேராசான் அருளுடைமை அதிகாரத்தில் (25) இயற்றிய,

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை;

பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு (247)

என்ற குறட்பாவை வழிமொழிந்து எழுதப்பட்டுள்ளது. 'நம் புலவர்' என்று திருவள்ளுவரைக் குறிப்பிட்டு அவர்தம் 'மொழி பொய்ம்மொழி அன்றுகாண்' என வியந்துள்ளார்.

அத்துடன் பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்னும் வள்ளுவரின் கருத்தை மேலும் விரித்து உற்றாராகிய உறவுகளும் இல்லை; நட்பாகிய துணையுமில்லை; பொழுதெல்லாம் இடராகிய பெருவெள்ளம் வந்து எட்டி உதைக்குமே என்று வருந்திப் பாடியுள்ளார்.

'வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்' என்று பாடிய பாரதிக்கே பல பொழுதுகள் சோறின்றிக் கழிந்தன. பொழுதெல்லாம் நாட்டையும் பாட்டையும் நேசித்த அவன் தன் வீட்டை நேசிக்க மறந்தான். ஏழைமையைத் தோழமையாகக் கொண்டு தொழிலாற்ற முடியாமல் முப்பத்து ஒன்பதே முக்கால் அகவையில் முடிந்து போனான். வற்றாத சீவநதியாகிய அவன் வறண்டு போனதற்குப் பொருள்செயல்வகை தெரியாமையே காரணமாம். ஆகவேதான், விநாயகர் நான்மணி மாலையில்

எனக்கு வேண்டும் வரங்களை

இசைப்பேன் கேளாய் கணபதி!

மனத்திற் சலன மில்லாமல்

மதியில் இருளே தோன்றாமல்

நினைக்கும் பொழுது நின்மவுன

நிலைவந் திடநீ செயல்வேண்டும்

கனக்குஞ் செல்வம் நூறுவயது

இவையும் தரநீ கடவாயே!

என்ற பாடலில் கனக்கும் செல்வம் எனக்குத் தருவாயென்று விநாயகனிடம் வேண்டுகோள் வைத்துள்ளான்.

வேண்டியபோது மெளனநிலை கிட்டிய

பாரதிக்குக் கனக்கும் செல்வமோ நூறு வயதோ

புதுச்சேரி மணக்குள விநாயகன் தரவில்லையென்பதுதான் வரலாற்றுச் சோகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments