பாரதியின் கனவை நனவாக்கும் காணி நிலம்!
காணி நிலம் - திருவையாறு இளைஞர் மேம்பாட்டு மையம் பற்றி...
மகாகவி பாரதியார் தனது கவிதையொன்றில் காணி நிலம் வேண்டும், பராசக்தி காணி நிலம் வேண்டும் என பாடியிருப்பார். அதில், தனது கற்பனை ஆசையை வெளிப்படுத்தியிருப்பார். இந்தக் காணி நிலம் என்ற பெயரில் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இளைஞர் மேம்பாட்டு மையத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி பாரதியின் கனவை நனவாக்கி வருகிறது திருவையாறு பாரதி இயக்கத்தின் அங்கமான பாரதி பெளண்டேஷன்.
இந்த மையத்தில் இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராவதற்காக ஏறத்தாழ 6 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. காவிரி ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள இந்த மையம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கு ஏற்ற சிறந்தொரு அமைதியான இடமாகத் திகழ்கிறது.
தேசியக் கவிஞர் பாரதியின் கொள்கைகளின் அடிப்படையில் 48 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் திருவையாறு பாரதி இயக்கம், இலக்கியம் மற்றும் சமூக சேவை அமைப்பாகச் செயல்படுவதுடன், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான ஒரு இடத்தையும் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தது. இதன் விளைவாகவே இந்த மையம் தோற்றுவிக்கப்பட்டது என்கிறார் இம்மையத்தின் இயக்குநரும், பொதுப் பணித் துறையின் ஓய்வு பெற்ற அலுவலருமான குப்பு வீரமணி (77).
Advertisement
Advertisement
வழக்குரைஞரும், இம்மையத்தின் துணைத் தலைவருமான என். பிரேமசாய் கூறுகையில், இந்த மையம் 2019 ஆம் ஆண்டில் திருவையாறு நகரிலுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தொடங்கப்பட்டு, இசை, ஓவியம் உள்பட பல்வேறு திறன்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன. இதையடுத்து, 2021, செப்டம்பரில் பாரதி நூற்றாண்டு நினைவு நாளையொட்டி தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை அறிவித்தது. அப்போது, காணி நிலம் மையத்துக்காக ஒரு கட்டடம் கட்ட விண்ணப்பித்தோம். மாநில அரசு மற்றும் திருவையாறு பேரூராட்சி உயர் அலுவலர்கள் காட்டிய ஆர்வத்தின் காரணமாக, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டடம் கட்டுவதற்கு விரைவான ஒப்புதல் கிடைத்தது.
இந்தத் திட்டத்துக்கு 33 சதவிகிதப் பங்களிப்புத் தொகையான ரூ. 6.67 லட்சத்தைச் செலுத்துமாறு அலுவலர்கள் கேட்டுக்கொண்டபோது, இரு நாட்களுக்குள் இயக்கத்தின் 6 நிர்வாகிகளான மறைந்த ஆர். மோகன், பி. ராஜராஜன் மற்றும் எம். முகமது சாதிக், என். பிரேமசாய், எம். என். ரமேஷ் நல்லு, எஸ். குமணன் ஆகியோர் தங்களுடைய சொந்த நிதி ஆதாரத்தில் திரட்டி அத்தொகையைச் செலுத்தினர்.
இதையடுத்து, 2024 ஜூன் மாதத்தில் செயல்படத் தொடங்கிய காணி நிலம் ஆர்வமுள்ள இளைஞர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் தன் பக்கம் ஈர்த்தது. அதற்கு முன்னதாகவே உறுப்பினர்கள் பல்வேறு நன்கொடையாளர்களிடமிருந்து புத்தகங்களைச் சேகரித்தனர். தற்போது இங்கு 5,000 நூல்கள் பட்டியலிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. மேலும் 1,000-க்கும் அதிகமான நூல்கள் பட்டியலிடப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் நியூ டவுன் ரோட்டரி சங்கம் நூலகத்துக்குத் தேவையான இருக்கை, மேஜை போன்ற தளவாடங்களை வழங்கியது.
இந்த நூலகத்தில் ஒரு இதழ் மன்றம் செயல்படுகிறது. இது போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு பயனுள்ள பல்வேறு இதழ்களை வழங்குகிறது. வாசகர்களுக்கு இலவச வைஃபை வசதி மற்றும் பயன்பாட்டுக்கான கணினிகளும் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு நகல்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதே சமயம் அச்சுப் பிரதிகளுக்கு மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நூலகத்துக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 25 பேர் வருகின்றனர். இந்த எண்ணிக்கை வெள்ளி, சனிக்கிழமைகளில் 40 வரை செல்கிறது. போட்டித் தேர்வுக்குத் தயார் செய்பவர்கள் மட்டுமல்லாமல், ஆராய்ச்சியாளர்களும் இந்த நூலகத்தைப் பயன்படுத்துகின்றனர்.
ஆற்றங்கரையோர நகரங்கள் குறித்த திட்டப்பணியில் ஈடுபட்டுள்ள தேசிய தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த நூலகத்தைப் பார்வையிட்டு, இங்குள்ள புத்தகங்களைப் பயன்படுத்தியது. மையத்தில் உள்ள புத்தகங்களைத் தவிர, தேர்வுக்குத் தயார் செய்பவர்களுக்கு ஏதேனும் குறிப்பிட்ட புத்தகங்கள் தேவைப்பட்டால், அவற்றையும் வாங்கித் தருகிறோம். ஆலோசனை மற்றும் வாசிப்புக்கான இடத்தையும், புத்தகங்களையும் இலவசமாக வழங்குவது மட்டுமல்லாமல், தேர்வுக்குத் தயாராவோர் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக காணி நிலம் வளாகத்தில் உள்ள சொற்பொழிவு அரங்கில் சிறப்புச் சொற்பொழிவுகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
பாரதி இயக்கத்தின் முயற்சிகள் நல்ல பலனைத் தரத் தொடங்கியுள்ளன. இம்மையத்தைப் பயன்படுத்திய 10-க்கும் மேற்பட்டோர் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர் என்கிறார் பிரேமசாயி.
கடந்த 2025-ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற திருவையாறைச் சேர்ந்த எஸ். விக்னேஷ் (23) கூறுகையில், "நான் மையத்தில் உள்ள புத்தகங்களைப் பயன்படுத்தினேன். மேலும், அங்கு படிப்பதற்கு ஏற்ற சூழல் இருந்ததால், எனது சொந்தப் புத்தகங்களையும் எடுத்துச் சென்று படித்தேன் என்கிறார் அவர்.
அரசுப் பணிகளில் சேர விரும்புவோர் மட்டுமல்லாமல், ஏற்கெனவே பணியில் இருப்பவர்களும் அடுத்த கட்டப் பதவிகளுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற இந்த நூலகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். காவலரான வி. கருணாகரன் (25) காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான தயாராக இந்த நூலகத்தையே அணுகுகிறார்.
அரசுப் பணியில் உள்ள ஒரு குரூப் 2 அலுவலர் யு.பி.எஸ்.சி. தேர்வுக்கான தயாரிப்புக்காக இங்குள்ள புத்தகங்களைப் பயன்படுத்தி வருகிறார் என்கிறார் நூலகப் பொறுப்பாளர் பி. பிரின்சி. கேபிள் டிவி மற்றும் இணையச் சேவை வழங்குநரான சைவ. குமணன், திருவையாறைச் சேர்ந்த இளைஞர்கள் யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்று, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக உருவாவதை நாங்கள் காண விரும்புகிறோம் என்கிறார் அவர். பாரதி இயக்கம் மற்றும் காணி நிலம் நிர்வாகிகளின் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் பார்க்கும்போது, அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.
Kaani Nilam—realizing Bharati's dream
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.