"தமிழ்நாட்டின் துவிஜேந்திர லால் ராய்!'
கணபதியை நோக்கிக் "கனக்கும் செல்வம், நூறு வயது'' தனக்குத் தரக் கேட்டார் பாரதி. இரண்டுமே அவருக்கு வாய்க்கவில்லை. ஆனால் நமக்குப் பாரதிதான் "கனக்கும் செல்வம்!'. அவரது எழுத்துகளுக்கு வயதோ பல்லாயிரம் ஆண்டுகள்!
நமக்கு வரமாக வந்து வாய்த்தவர் பாரதி. "தமிழகம், தமிழுக்குத் தகுந்த உயர்வை அளிக்கும் தலைவனின் வரவுக்காகத் தவம்கிடந்தது; தவப்பயனாக வந்துதோன்றினார் பாரதி!' - இது புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் எண்ணமும் எழுத்தும்!
தமிழகத்திற்கு, தமிழர்களுக்கு, தமிழுக்கு வரமாக வாய்த்தவருக்கு ஒரு வழக்கம்; தீராத வழக்கம். வரங்கள் கேட்பதவர் வழக்கம்!
காளியை நோக்கி "நின்னைச் சில வரங்கள் கேட்பேன்!'' என்றார். "துன்பம் தொடர்ந்தால் உயிர்தரிக்க மாட்டேன்; என் இயல்பு அறியாயோ' என உரிமையோடு பேசினார். சில வரங்கள் எனக் கூறிவிட்டுக் கேட்ட பல வரங்களில் ஒன்று: ""வையத் தலைமை எனக்கு அருள்வாய்!'' என்பது. அந்த ஒரு வரம் மட்டும் பலித்தது! இருபதாம் நூற்றாண்டுமுதல் தமிழ்க் கவிதையுலகத்தின் தலைமை இடம் பாரதிக்குத்தானே! சில வரங்கள் எனச் சொல்லிவிட்டுப் பல வரங்கள் கேட்கலாமா? வாழ்வில் துன்பம் தொடர்ந்தது. பாரதியின் உயிர்தரிக்கவில்லை.
Advertisement
Advertisement
கணபதியை நோக்கிக் "கனக்கும் செல்வம், நூறு வயது'' தனக்குத் தரக் கேட்டார் பாரதி. இரண்டுமே அவருக்கு வாய்க்கவில்லை. ஆனால் நமக்குப் பாரதிதான் "கனக்கும் செல்வம்!'. அவரது எழுத்துகளுக்கு வயதோ பல்லாயிரம் ஆண்டுகள்!
சாதாரண மனிதனில்லையே பாரதி! மகாமனிதனின் -மகாகவிஞனின் - வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கச் செப்டம்பர் பதினொன்றாம் நாளின் அடர்ந்த இரவே கருமையாக வந்து கவிந்தது.
பாரதியின் மறைவுக்கு அடுத்த நாளே "சுதேசமித்திரன்', "இந்து' நாளிதழ்கள் பாரதியின் மறைவு குறித்துத் துணைத் தலையங்கங்கள் தீட்டின.
வார ஏடான திரு.வி.க.வின் "நவ சக்தி' செப்டம்பர் பதினாறாம் நாள் இரங்கல் உரை எழுதியிருந்தது. பதினாறாம் தேதி செட்டிநாட்டிலிருந்து வெளிவந்த வார இதழான சொ. முருகப்பாவின் "தனவைசிய ஊழியன்' இதழும் விரிவாக இரங்கல் உரையை வடித்திருந்தது. அந்த உரை கவிஞர், விடுதலைப் போராட்ட மறவர் என்பதுடன் ஞானி என்னும் பாரதியின் பரிமாணத்தையும் விதந்து பேசியிருந்தது. சேலத்திலிருந்து பதினெட்டாம் தேதி வெளிவந்த வரதராஜுலு நாயுடுவின் "தமிழ்நாடு' வார இதழ் பாரதியின் மறைவு குறித்த துணைத் தலையங்கத்தையும் இருபத்தைந்தாம் தேதி பாரதியைப் போற்றும் குறிப்பையும் வெளியிட்டிருந்தது.
இவ்வாறு தமிழ்மண்ணின் முதன்மையான நாளிதழ்களும் வார ஏடுகளும் பாரதியின் மறைவுக்கு உணர்வுபொங்க இரங்கல் உரைகளை வெளியிட்டிருந்தன.
பாரதி தமிழ் மண்ணின் மாபெரும் கவிஞர்! அதே வேளையில் இந்தியாவின் முன்னோடியான விடுதலைப் போராட்ட வீரர்; தலைவர்! இத்தகைய பெருமைக்குரிய பாரதியின் இறப்பு குறித்த செய்தி தமிழ் மண்ணுக்கு அப்பால் எந்த நாளிதழிலேனும் வார இதழிலேனும் அக்காலத்தில் வெளிவந்ததா? தேட வேண்டும்! தொடர்ந்து தேடவேண்டும்!
ஆங்கில நாளிதழான "இந்து' ஒட்டுமொத்த இந்தியாவிற்கான இதழ்தான்! எனினும் தமிழ் மண்ணிலிருந்து வெளிவந்ததல்லவா!
பாரதி காலத்துத் தீவிர இந்திய அரசியலில் முன்னணியில் இருந்த இரண்டு இதழ்கள் கல்கத்தாவிலிருந்து வெளிவந்த "வந்தே மாதரம்' இதழும், புணே நகரிலிருந்து வெளிவந்த "மராட்டா' இதழும்! இரண்டும் ஆங்கில இதழ்கள். "வந்தே மாதரம்' நாளிதழ் விபின சந்திர பாலரால் தோற்றுவிக்கப்பட்டது. அரவிந்தரும் இதன் ஆசிரியராக இருந்துள்ளார். பாரதி வாழ்ந்த காலத்தில் அந்த நாளிதழின் முதல் பக்கத்தில் பாரதி பற்றிய செய்திகள் வெளிவந்திருக்கின்றன. பாரதியின் காலத்திலேயே இதழ் வெளிவருவது நின்றுவிட்டது.
"மராட்டா' இதழ் பால கங்காதர திலகரால் தோற்றுவிக்கப்பட்டதாகும். திலகருடன் நெருங்கிப் பழகிய என்.சி. கேல்கர் குறிப்பிடத்தக்க காலம் இதன் ஆசிரியராக விளங்கினார். திலகரின் மறைவுக்குப் பின்னரும் வெளிவந்த இதழாகும் இது. தனது அரசியல் வாழ்வில் தலைவராகக் கொண்ட திலகர் மறைந்த ஓராண்டிலேயே பாரதியும் காலமாகின்றார்.
மகாகவி பாரதியின் அரசியல் குருநாதரும், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் காந்தி யுகத்திற்கு முந்தைய அரசியல் யுகத்தின் நாயகருமாகிய திலகர் தோற்றுவித்த "மராட்டா' ஆங்கில வார இதழில் பாரதியின் இறப்புச் செய்தி தனித்தன்மையுடன் பாரதி மறைந்த இரண்டு வாரங்களில் வெளிவந்திருக்கின்றது. இந்த அரிய செய்தியைக் கடந்த டிசம்பர் மாதம் பத்து நாள்கள் புணே நகரிலுள்ள திலகர் அருங்காட்சியகத்தில் நான் மேற்கொண்ட தேடலில் கண்டறியும் பேறுபெற்றேன்.
இந்த அருங்காட்சியகத் தொடர்புடைய ஓர் அரிய செய்தியைப் பாரதி அன்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். புணேவிலிருந்த பால கங்காதர திலகருக்கு "அன்பார்ந்த குருஜி' என அழைத்துப் பாரதியார் 1908 மே 29-ஆம் நாள் எழுதிய கடிதம் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. கடித நகல் மக்கள் பார்வைக்காகக் கண்ணாடிப் பேழையிலும் வைக்கப்பட்டுள்ளது. 1966-ஆம் ஆண்டு பேராசிரியர் ந. சஞ்சீவி புணே சென்றிருந்தபோது இதைக் கண்டறிந்து "கலைமகள்' இதழ்வழி வெளியிட்டார். பின்னர் ரா.அ. பத்மநாபன் "கேசரி-மராட்டா' அலுவலகத்திலிருந்து பெற்றுப் பாரதியின் கடிதங்கள் நூலில் வெளியிட்டார். பாரதியார் இந்தக் கடிதத்தில் திலகருக்கு ""எங்கள் சங்கத்துடன் கடிதத் தொடர்பு கொள்ளும்படி ஸ்ரீ கேல்கரிடம் கூறுங்கள்'' என எழுதியிருந்தார். இந்தக் கேல்கர் தான் "மராட்டா' இதழுக்கு முக்கியமான கட்டங்களில் ஆசிரியராக இருந்த பெருமைக்குரியவர்.
திலகர் நடத்திய "மராட்டா' இதழுக்கும் பாரதியாருக்கும் 1907-ஆம் ஆண்டளவில் எத்தகைய நெருக்கமான தொடர்பு இருந்தது என்பதைக் காட்டும் ஒரு நிகழ்ச்சி! பாரதியாரே இதை "இந்தியா' இதழில் எழுதியிருக்கின்றார்.
திலகருடைய "கேசரி' பத்திரிகையின் நிருபரொருவர், புணே சர்வ ஜன சபையின் பழைய ஆவணச் சேகரத்திலிருந்து ஒரு முக்கியமான ஆவணத்தைக் கண்டெடுத்திருந்தாராம். அது, 1894-இல் கோகலே கையொப்பமிட்ட "அந்நியத் துணிகளைப் பகிஷ்கரிப்பது, சுதேசீயத் துணிகளையே பயன்படுத்துவது' எனும் தீர்மானப் பிரதியாம். இந்த அரிய ஆவணத்தின் பிரதியை "மராட்டா' இதழின் ஆசிரியர் தாங்கள் வெளியிடுவதற்கு முன்னதாகவே பாரதியாருக்கு - இந்தியா இதழுக்கு அனுப்பி வைத்திருந்தாராம்.
இதைப் பாரதியார் "மேற்படி விஷயத்தைப் புனாவிலே பிரசுரமாகும் "மராடா' பத்திராதிபர் அவ் விஷயம் தமது பத்திரிகையில் பிரசுரமடையும் முன்பாகவே நமக்கோர் அட்வான்ஸ் பிரதி அனுப்பியதன் பொருட்டு அவருக்கு நன்றி செலுத்துகிறோம்'' என 9.2.1907-இல் தாம் ஆசிரியராக இருந்து நடத்திய "இந்தியா' இதழில் எழுதியிருந்தார்.
இத்தகைய தொடர்பை ஒரு காலத்தில் கொண்டிருந்த "மராட்டா' (தி மராட்டா) ஆங்கில வார இதழின் 1921 செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியீட்டில்தான் ""காலஞ்சென்ற சுப்பிரமணிய பாரதி'' என்னும் பொருளிலான தலைப்பில் (லேட் சுப்பிரமணிய பாரதி) பாரதியின் இறப்புச் செய்தி கவனம் பெறும் வகையில் வெளியிடப்பட்டிருந்தது.
"மராட்டா' வார இதழின் சென்னை மாகாணத்தின் -சென்னை நகரத்தின் பிரதிநிதியாகச் செயல்பட்ட ஒருவர், இயற்பெயரைக் குறிப்பிட்டுக்கொள்ளாமல் ""திலக் - சிஷ்யா'' என்னும் பெயரில் தொடர்ந்து "சென்னைக் கடிதம்' (மெட்ராஸ் லெட்டர்) என்னும் தலைப்பில் சென்னை மாகாணச் செய்திகளை எழுதி வந்தார். இச்செய்திப் பகுதி "மராட்டா' இதழில் முக்கியத்துவம் தந்து வெளியிடப்பட்டு வந்தது.
இந்தப் பகுதியில்தான் ""திலக் - சிஷ்யா'' என்னும் அந்தச் செய்தியாளர், "மராட்டா' இதழின் வாசகர்களுக்கு "வரகவி சுப்பிரமணிய பாரதி காலமான செய்தியை உங்களுக்குத் தெரிவிப்பது எனது வருந்தத்தக்க கடமையாகும்' எனத் தொடங்கிப் பாரதி குறித்த செய்திகளை வெளியிட்டிருந்தார்.
"பிரபலமான மெட்டுகளில் அமைந்து உணர்வைத் தூண்டும் பாரதியாருடைய தேசபக்திப் பாடல்கள் தமிழ்நாடெங்கும் பாடப்பட்டு வருகின்றன. அவ்வாறு பாடப்படும் பாரதியாரின் பாடல்கள் தமிழ்நாடெங்கும் விடுதலை உணர்வை, தியாக உணர்வை, தேசபக்தி உணர்வை மக்களிடையே ஊட்டிவருகின்றன' என அந்த இரங்கல் குறிப்பு எடுத்துரைத்திருந்தது.
"பாரதி அபூர்வமான ஆற்றல்கொண்ட ஒரு கலைஞர்' எனக் குறிப்பிட்ட இரங்கல் செய்தி, அதனைத் தொடர்ந்து பாரதியைக் குறித்து வரலாற்றில் இதுவரை ஒப்பிட்டுக் கூறப்படாத மிகமுக்கியமான கருத்தொன்றினை வெளிப்படுத்தியுள்ளது.
"ஒருவகையில் பாரதியாரைத் தமிழ் மண்ணின் (திராவிட தேசத்தின்) துவிஜேந்திர லால் ராய் என்று குறிப்பிடலாம்' என்பதே அந்தக் கருத்தாகும்.
பாரதியார் தன்னைத் தொடக்க காலத்தில் "ஆங்கிலப் புரட்சிக் கவிஞன் ஷெல்லியின் அன்பன்' எனப் பொருள்படும் வகையில் ""ஷெல்லிதாஸ்'' என அழைத்துக்கொண்டார் என்பதனை நாமறிவோம். தம் "சக்ரவர்த்தினி' இதழில் ""துளஸீ பாயி என்ற ரஜ புத்ர கன்னிகையின் சரித்திரம்'' என்னும் சிறுகதையை அவர் இப்புனைபெயரில்தான் எழுதினார். பாரதியின் கவித்துவம் பெருகப் பெருகப் பாரதி வாழ்ந்த காலத்திலேயே வங்கம் தந்த பெருங்கவிஞர் இரவீந்திரநாத் தாகூருடன் ஒப்பிடத் தொடங்கியது இலக்கிய உலகம்.
1917-ஆம் ஆண்டு பாரதியாரின் "கண்ணன் பாட்டு'' நூலை வெளியிட்ட பரலி சு. நெல்லையப்பர் "இவர் தமிழ்நாட்டு இரவீந்திரநாதர்'' என முகவுரையில் பாரதியாரைப் போற்றி எழுதினார்.
1917-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-இல் வெளிவந்த நீதிக் கட்சியின் "திராவிடன்'' நாளிதழ் ""கண்ணன் பாட்டு'' நூலுக்கு எழுதிய மதிப்புரையில் ""இச்சிறு நூலின் ஆசிரியரைத் தமிழகம் நன்கறியும். தமிழ்நாட்டு ரவீந்திரநாதர் என்பதற்கு இவர் பாட்டுக்களே சான்று'' எனப் பரலி சு. நெல்லையப்பரின் கூற்றை வழிமொழிந்தும் உறுதிசெய்தும் எழுதியிருந்தது. பாரதி உயிர்வாழ்ந்த இறுதி ஆண்டில், 1921-இல் மதுரகவி பாஸ்கரதாஸ் தமது "இந்து தேசாபிமானிகள் செந்தமிழ்த் திலகம்- இரண்டாம் பாகம்'' நூலில் "இந்தியாவில் இரண்டு கவிச் சக்கரவர்த்திகள், ஒருவர் வட இந்தியக் கவிச்சக்கரவர்த்தி இரவீந்திரநாத தாகூர், மற்றவர் தென் இந்தியாவின் கவிச்சக்கரவர்த்தி சுப்பிரமணிய பாரதி'' எனப் பாடியிருந்தார்.
பாரதி மறைந்ததும் செப்டம்பர் பதினேழாம் தேதி "சுதேசமித்திரன்' இதழுக்கு எழுதிய இரங்கல் கட்டுரையில் தீரர் சத்தியமூர்த்தி "வங்காள கவி சிரேஷ்டர் ரவீந்த்ரநாதருக்கு அவர் சமமானவர். நான் மிகைபடப் பேசுவதாக நினைக்கக்கூடாது. ஸ்ரீ பாரதியாரை அறிந்தவர்களுக்கே நான் சொல்வதன் உண்மை செம்மையாகப் புலப்படும்'' என எழுதியிருந்தார். முன்னதாகப் பதினான்காம் தேதி இந்து நாளிதழுக்கு எழுதிய உரையிலும் இதே கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். பின்னாள்களில் பாரதியையும் தாகூரையும் இணைத்து எண்ணுவதும் ஒப்பிடுவதும் பெருவழக்கானதை அனைவரும் அறிவர். இந்த வரலாற்றில் தொ.மு.சி. இரகுநாதனின் ""கங்கையும் காவிரியும்'', க. கைலாசபதியின் "இரு மகாகவிகள்'' நூல்களும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன.
பாரதியை இந்தியக் கவிஞர்களுள் தாகூரோடு ஒப்பிட்டு எழுதுவதை, பேசுவதை, ஆராய்வதைத்தான் இதுவரை நாம் மிகுதியாகக் கண்டிருக்கிறோம். ஆனால், பாரதியியல் வரலாற்றில் நாம் முதன்முறையாகத் "துவிஜேந்திரலால் ராய்'' என்னும் பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறோம்: அறிகிறோம்! ஒரு வகையில் பாரதியைத் தமிழ் மண்ணின் "துவிஜேந்திர லால் ராய்'' எனக் கூறலாம் என்கிறது இரங்கல் குறிப்பு.
எந்த வகையில்? யார் அந்தத் துவிஜேந்திரலால் ராய்?
வங்கத்தின் இலக்கியப் பேராளுமைகளில் ஒருவர் அவர். 1863-இல் பிறந்த அவர் 1913-இல் காலமானார். வங்க நாடகத் துறையிலும், இசைப்பாடல்கள்- கீதங்கள் இயற்றும் துறையிலும், கவிதைத் துறையிலும் மிகச் சிறந்த விற்பன்னர். தாகூரின் சமகாலத்தவர். இருவரும் நட்புப் பூண்டு இணைந்திருந்ததும், பிரிந்து விலகிச் சென்றதும் என்னும் நிலைகளை வரலாறு காட்டுகின்றது.
பாரதியார் புதுவை வாழ்க்கையில் நாடகம் நடிக்க முயன்றதைப் பாரதிதாசன்
எழுதியிருக்கின்றார். இரண்டு மூன்று நாடகங்களுக்கு மேல் பாரதி எழுதிவிடவும் இல்லை. இருவரையும் நாடகப் பங்களிப்பு சார்ந்து ஒப்பிட வாய்ப்பில்லை.
டி.எல். ராய் எனவும் அழைக்கப்படும் துவிஜேந்திர லால் ராய் இயற்றிய பாடல்கள், கீதங்கள் மக்களிடையே பரவலாகப் பாடப்பட்ட பெருஞ்சிறப்புக்கு உரியவை; மக்களை ஈர்த்து எழுச்சிகொள்ளச் செய்தவை! தேசபக்திக் கனலை வங்கத்தில் ஓங்கச் செய்தவை! ""தன தான்ய புஷ்ப பாரா'', ""பங்கா அமர் ஜனனி அமர்'' முதலிய இவர் படைத்த தேசபக்திப் பாடல்கள் காலங்
களைக் கடந்து இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. பெண்ணுரிமை, சமயச் சீர்திருத்தம் முதலிய களங்களிலும் செயல்பட்டவர். வங்க மகாகவி எனவும் அவர் போற்றப்படுகிறார். இவரது பாடல்கள் சிலவற்றை அரவிந்தர் மொழிபெயர்த்துப் போற்றியிருக்கிறார்.
மக்களிடையே செல்வாக்கோடு பாடப்படும் தேசபக்திப் பாடல்களைப் படைத்தவர் என்னும் கோணத்தில்தான் பாரதியைத் தமிழ்நாட்டின் துவிஜேந்திர லால் ராய் என இரங்கல் குறிப்பு ஒப்பிட்டுப் பேசியிருக்கிறது.
பாரதியின் குயில்பாட்டு, பாஞ்சாலி சபதத்தின் இரண்டாம் பாகம், காட்சிகள் முதலிய பாரதியின் ஒப்பற்ற இலக்கியச் செல்வங்கள் பலவும் வெளிப்படாத அக்காலத்தில் பாரதியின் தேசபக்திக் கீதங்களின் செல்வாக்கே, பாடல்கள் ஏற்படுத்திய எழுச்சியே இரங்கல் குறிப்பைப் படைத்தவருக்கு முதன்மையாகத் தோன்றியிருக்கக்கூடும். அத்தகையோருக்குத் தமிழ் மண்ணின் "துவிஜேந்திர லால் ராயாகப்' பாரதி காட்சி தந்திருக்கிறார். பாரதியின் எத்தனை எத்தனையோ பரிமாணங்களில் இந்த ஒப்பீட்டுப் பரிமாணத்தை நாம் இப்போதுதான் அறிகிறோம்.
ஒரு வியப்பூட்டும் செய்தி. 1937-ஆம் ஆண்டு ""மீவார வீழ்ச்சி'' என்னும் நாடகமொன்று தமிழில் வெளிவந்தது. இந்நாடகம் ""வங்க மகாகவி பாபு துவிஜேந்திரலால் ராயின்'' நாடக மொழிபெயர்ப்பு என்னும் குறிப்புடன் வெளிவந்தது. இந்நாடகத்தில் இடையிடையே பாரதியின் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. 1921-இன் ஒப்பீட்டை அறியாமலேயே இருவரையும் நாடக மொழிபெயர்ப்பாளர் இணைத்து வைத்திருக்கிறார். மேலும் இந்த இரங்கல் குறிப்பு, "இந்து' நாளிதழில் வெளிவந்த இரங்கல் செய்தியை மேற்கோள் காட்டிப்
"பாரதியார் தீவிர தேசீயவாதி, சீரிய சிந்தனையாளர், எழுச்சியூட்டும் பேச்சாளர், சக்திவாய்ந்த எழுத்தாளர்', "தனது தேசியப் பாடல்களை அவரே பாடும்போது கேட்பவர் நெஞ்சங்களில் உண்மையான தேசபக்தி உருவாகிவிடும்' என்னும் கருத்துகளை அப்படியே எடுத்தளித்திருந்தது.
மேலும் "சுதந்திர உணர்வைத் தட்டியெழுப்பும் அவருடைய சொற்பொழிவுகள், ஆட்சி செலுத்தும் கடவுள்களுக்கு உகந்ததாக இல்லாததால் பல இந்திய தேசபக்தர்களைப் போல அவரும் சில ஆண்டுகள் புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்து வாழ வேண்டியிருந்தது' என்னும் கருத்தையும் "இந்து'விலிருந்து எடுத்தளித்திருந்தது.
தமிழ் மண் எனக் குறிப்பிடும்போது அடைப்புக்குறிக்குள் திராவிட தேசம் எனச் சுட்டியுள்ளமை ஒட்டுமொத்தத் தென்னகத்தையும் மனங்கொண்டிருக்கலாம் எனவும் தோன்றுகிறது.
மகாகவி பாரதியின் பாடல்கள் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பரவலாகப் பாடப்பட்டுத் தேசபக்தி உணர்வை, விடுதலை ஆவேசத்தை எழுப்பிய வகையில் தமிழ் மண்ணின் துவிஜேந்திர லால் ராயாகவும், அக்காலத்தில் வெளிவந்திருந்த "பாஞ்சாலி சபதம் (முதற்
பாகம்)'', "கண்ணன் பாட்டு'', "கனவு'' "புதிய ஆத்திசூடி'', "ஸ்வதேச கீதங்கள்'', "நாட்டுப் பாட்டு'' முதலியவற்றின் இலக்கியப் பேரழகால் தமிழ்நாட்டின் இரவீந்திரநாத் தாகூராகவும் காண்பவர்களின் நோக்கிற்கேற்ப அவர் காட்சி தந்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் தாகூர், தமிழ்நாட்டின் துவிஜேந்திர லால் ராய் என்பனவெல்லாம் ஒவ்வொரு காலத்தில், ஒவ்வொரு கோணத்தில் முக்கியமான சிலர் முன்வைத்த மதிப்பீடுகள்; ஒப்பீடுகள்! இவற்றைத் தாண்டிய பேராளுமையாகத் திகழ்பவர் பாரதி!
தமிழ் மண்ணிற்கு அப்பால், திலகர் தோற்றுவித்த ஆங்கில இதழின் வாயிலாக, மராட்டிய மண்ணிலிருந்து ஒட்டுமொத்த இந்திய விடுதலை இயக்க அரசியல் உலகிற்கும் பாரதியின் மறைவுச் செய்தியும் மகத்தான பெருமையும் திலகரின் சீடரொருவராலேயே சென்று சேர்ந்திருக்கிறது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அருஞ்செய்தியாகும்!
கட்டுரையாளர்:
முன்னைத் தலைவர்,
தமிழ்மொழித் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.