FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வெள்ளிமணி

எட்டெழுத்து உச்சரித்தால் ஏற்றம் தரும் நரசிம்மர்

ருணம், ரோகம், சத்ரு இவை மூன்றும் மக்களை வாட்டி வதைக்கக் கூடியவை. ருணம் என்றால் கடன் தொல்லை, ரோகம் என்றால் தீராத வியாதி, சத்ரு என்பவர் நம்மை நிம்மதியாக வாழ விடாமல் துன்பம் தரும் எதிரிகள்.

Updated On : 19 செப்டம்பர் 2013, 4:48 pm IST
பகிர்:

ருணம், ரோகம், சத்ரு இவை மூன்றும் மக்களை வாட்டி வதைக்கக் கூடியவை. ருணம் என்றால் கடன் தொல்லை, ரோகம் என்றால் தீராத வியாதி, சத்ரு என்பவர் நம்மை நிம்மதியாக வாழ விடாமல் துன்பம் தரும் எதிரிகள். இவை மூன்றுமே கவலையால் நம்மை நிலைகுலைய வைத்து சீரழிப்பவை. கலிகாலத்தில், இந்த மூன்றிலிருந்தும் நம்மை விடுவித்து நமக்கு வெற்றியையும், சக்தியையும் அளித்து கண்கண்ட பலன்களை அள்ளித் தரும் தெய்வமாக பரிக்கல் திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீலட்சுமி நரசிம்மப் பெருமாள்.

பரிகலா சூரன் என்பவன் குதிரை முகம் கொண்ட அரக்கன். திருவதிகையில் திரிபுர அரக்கர்களை சிவபெருமான் தகனம் செய்தபோது, விண்ணிலோ மண்ணிலோ தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று பிரம்மாவிடம் வரம் பெற்ற இந்த அசுரன், பஞ்ச கிருஷ்ணாரண்யங்களில் ஒன்றான திருமுதுகுன்றம் பகுதியில் மறைந்து தப்பித்துக்கொண்டான். திருமால் நரசிங்கமாக வெளிப்பட்டு பரிகலா சூரனை வதம் செய்த இடம்தான் பரிக்கல் திருத்தலம்.

மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி, பாளையங்கோட்டை வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றோர் இத்தலத்து பெருமாளை வழிபட்டு எதிரிகளை வீழ்த்தி பல வெற்றிகளைப் பெற்றதாக வரலாறு.

Advertisement

Advertisement

விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரத்திற்கு தெற்கில் சுமார் 20 அல்லது 25 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது பரிக்கல் கிராமம். மிகவும் அமைதியான, அழகான கிராமம். கிழக்கு பார்த்த ராஜகோபுரம். கருவறையில் ஸ்ரீலட்சுமி நரசிம்மப் பெருமாள் கம்பீரமாகக் காட்சி கொடுத்து அருளாசி வழங்குகிறார். தாயாரின் திருநாமம் ஸ்ரீகனகவல்லி. கருவறையில் மூலமூர்த்தியின் இடது பக்கத்தில் ஸ்ரீவியாச ராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் திருவுருவச் சிலை இருக்கிறது.

கடன், நோய், எதிரி இவற்றுக்கு பரிக்கல் பரிகாரத் தலமாக விளங்குகிறது. மிகப் பெரிய கடன் தொல்லையிலிருந்து விரைவாகவும், எளிதாகவும் மீளவும், தம்மை வருத்தும் நோய், பிணிகளிலிருந்து விரைவில் குணமடையவும், எதிரிகளால் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஏற்படும் அபாயங்களிலிருந்து மீண்டு எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறவும் பக்தர்கள் இத்தலத்தில் ஸ்ரீநரசிம்மப் பெருமாளை வழிபடுகின்றனர்.

விரதமிருந்து, ஈர ஆடையுடன், "ஓம் நமோ நாராயணா' என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஜபித்த வண்ணம் இந்த ஆலயத்தை 48 முறை வலம் வருகிறார்கள். இவ்வாறு வழிபட நம்முடைய பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments