பஞ்சத்தைப் போக்கிய பரமன்!
காசியில் ஏற்பட்ட பஞ்சத்தைப்போக்க பார்வதி தேவி அன்னபூரணியாக சிவபெருமானின் பிட்சைப் பாத்திரத்தில் உணவு இட்ட நாள் அட்சய திருதியை.
காசியில் ஏற்பட்ட பஞ்சத்தைப்போக்க பார்வதி தேவி அன்னபூரணியாக சிவபெருமானின் பிட்சைப் பாத்திரத்தில் உணவு இட்ட நாள் அட்சய திருதியை. இத்தினத்தில் அன்னபூரணியை வழிபட்டால் உணவுக்குப் பஞ்சம் ஏற்படாது. இது காசி தலத்துப் புராண வரலாறு.
ஆனால், அருளாளன் என்னும் மறையவன் பஞ்சத்தினால் பசியால் வருந்துகின்றபோது, பெருமான் அம்மறையவனுக்கு எடுக்க எடுக்கக் குறையாத அட்சய பாத்திரம் வழங்கி அவனது பசிப்பிணியை நீக்கியருளியது மட்டுமில்லாமல் அவன் மூலம் ஊர் மக்களுக்கும் உணவு வழங்கி, பஞ்சத்தைப் போக்கிய பரமன் வீற்றிருக்கும் தலம் தென்னகத்தில் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு அருகே "திருச்சோற்றுத்துறை' என்ற பெயருடன் திகழ்கிறது.
தேவாரப்பதிகம் பெற்ற இத்தலம் 13ஆவது ஆகும். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் அருளிய பதிகங்கள் பெற்றது.
Advertisement
Advertisement
ஈசன் வழங்கிய அந்தப் பாத்திரத்துக்கு "உலவா சோற்றுக்கலம்' என்று பெயர். அள்ள அள்ளக் குறையாமல் வழங்கிய பேரருளாளரான பெருமானுக்கு அருள்மிகு தொலையாச் செல்வர் என்றும், அவருக்குள் பாதியாகி பூரண அருள் கடாட்சிக்கும் அம்மைக்கு அருள்மிகு அன்னபூரணி என்றும் இத்தலத்து அம்மையப்பனின் திருநாமங்கள்.
ஓதவனேஸ்வரர் சோற்றுதுறை நாதர் என்ற பெயரும் இறைவனுக்கு உண்டு. பழந்தமிழில் "ஓதம்' என்ற சொல்லுக்கு ஈரம், கடல், அலை, வெள்ளம், குளிர்ச்சி ஆகிய பிற பொருள்களோடு உணவு, சோறு ஆகிய பொருள்களும் காணப்படுகின்றன. திருவையாற்றைத் தலைமைத் தலமாகக்கொண்டு நிகழும் சப்தஸ்தான தலங்களில் மூன்றாவது தலமாக விளங்குகிறது.
இத்தலத்தில் உள்ள அனைத்து இறைமூர்த்தங்களும் விசேஷமானவை. இந்திரன், சூரியன், கௌதமர் ஆகியோர் வழிபட்ட தலம் இறைவன் அட்சய பாத்திரம் நல்கி அடியவர்களின் பசிபோக்கி நல்ல மழை பொய்விக்கச் செய்து நெல் அமோகமாக விளையச் செய்வித்தான் என்றால், அம்பிகையோ தன் பங்கிற்கு அந்நெல்மணிகளைச் சோறாகவே விளையுமாறு அருள் செய்தாள் என்பது தலவரலாறு. எனவே இறைவி "அன்னபூரணி' எனப் போற்றப்படுகிறாள். இத்தலத்து இறைவனையும், இறைவியையும் வணங்குபவர்களுக்கு பசிப்பிணி நீங்குவதோடு பிறவிப்பிணியும் தீர்க்கப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை.
இத்திருத்தலத்தில் மே 2 அட்சய திருதியை அன்று காலை 10 மணிக்கு சிறப்பு ஆராதனையும், மாலையில் கண்ணாடிப் பல்லக்கு வெள்ளோட்டமும் நடைபெறுகிறது.
அமைவிடம்: தஞ்சை - திருவையாறு வழியில் கண்டியூருக்குக் கிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சோற்றுத்துறை.
தகவல்களுக்கு: 94435 86453
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.