ஒளவையாரம்மனும் ஆடிச் செவ்வாயும்!
புராணச் சிறப்புகள் பெற்ற ஒளவைப் பிராட்டியை பெண்தெய்வமாக பாவித்து வணங்கும் வழக்கம்
புராணச் சிறப்புகள் பெற்ற ஒளவைப் பிராட்டியை பெண்தெய்வமாக பாவித்து வணங்கும் வழக்கம், தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம், மற்றும் நெல்லை மாவட்டத்தின் சில
பகுதிகளில் இருக்கிறது. ஆனால் ஒளவையாருக்காக தனிக்கோயில்கள் இருப்பது குமரி மாவட்டத்தில் மட்டுமே. இம்மாவட்டத்தில் குறத்தியறை, தாழக்குடி, ஆரால்வாய் மொழி ஆகிய மூன்று ஊர்களில்
ஒளவையாருக்கு தனிக்கோயில்கள் உள்ளன. இவற்றுள் நாகர்கோவிலில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள தாழக்குடி ஒளவையாரம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
Advertisement
Advertisement
இத்தலத்தில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஊர்மக்கள் ஒரு நெல்லி மரத்தின் அடியில் ஒளவையாரம்மன் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து சிறு கோயிலையும் அமைத்து வழிபட்டு வந்தனர்.
பிற்காலத்தில் கோயிலை விரிவுபடுத்தி பெரிய கோயிலாக கட்டினர். கருவறையில் ஒளவையாரம்மன் கையில் ஓர் ஊன்றுகோலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அருகில் விநாயகரும் பாலமுருகனும் காட்சி தருகின்றனர். கோயில் வளாகத்தில் நாவல் மரங்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன. கோயிலின் அமைப்பையும் நாவல் மரங்களையும் பார்க்கும்போது ""பாட்டி,
சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?'' என்று சிறுவன் உருவிலிருந்த முருகக் கடவுள் ஒளவையாரிடம் கேட்ட புராணக் கலாத்து நிகழ்வு நினைவுக்கு வரும். இவ்வாலயத்தில் பாலமுருகன் தனிச் சந்நிதி கொண்டு விளங்குகிறார்.
இவ்வாலயத்தில் ஒளவையாரம்மனை வழிபட செவ்வாய்க்கிழமையே உகந்த நாளாக விளங்குகிறது. மாதாந்திர செவ்வாய்க்கிழமைகளில் ஒளவையாரம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
ஆடிமாதம் செவ்வாய்க்கிழமைகளில் வருடாந்திர திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.
ஆடிச் செவ்வாய் திருவிழாவின்போது குமரி மாவட்டம், நெல்லை மாவட்டங்களின் சில பகுதிகளில் இருந்தும் கேரளமாநிலத்தில் இருந்தும் பெண்கள் ஒளவையாரம்மன் கோயிலுக்கு வந்து, கோயில் வளாகத்திலேயே அரிசிமாவு, வெல்லம், தேங்காய், சுக்கு, ஏலக்காய் சேர்த்து கூழும் கொழுக்கட்டையும் செய்து, ஒளவையாரம்மனுக்குப் படைத்து வழிபடுகின்றனர். ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமையில் பெண்கள் கூட்டம் அலைமோதும். திருமணம் வேண்டி இந்த அம்மனை ஆடிச் செவ்வாய்க்கிழமையில் வழிபடுபவர்களுக்கு திருமணம் விரைவில் கைகூடும். திருமணமான பெண்களுக்கு குழந்தைச் செல்வம் கிட்டும் என்பது நம்பிக்கை.
குமரி மாவட்டத்தில் ஆண் குழந்தைகளுக்கு ஒளவையாரப்பன் என்றும் பெண் குழந்தைகளுக்கு ஒளவையார், ஒளவையாரம்மன் என்றும் பெயர் சூட்டுவது வழக்கத்தில் உள்ளது.
- ரமா ராமநாதன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.