FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வெள்ளிமணி

திருவருட் செயலை யாவரே அறிவர்!

வள்ளிமலையில் படிகள் அமைத்துத் திருப்பணி செய்தேன். வள்ளிமலை, வள்ளிநாயகியார் அவதரித்த திருத்தலம்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 4:32 pm IST
பகிர்:

வள்ளிமலையில் படிகள் அமைத்துத் திருப்பணி செய்தேன். வள்ளிமலை, வள்ளிநாயகியார் அவதரித்த திருத்தலம். முருகப்பெருமானுடைய ஞானமேயாகிய திருவடி பலகாலும் தோய்ந்த ஞானஸ்தலம் வள்ளிமலை.

இத்தலத்தில் அடிவாரத்திலுள்ள ஆறுமுகப்பெருமானுடைய கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டும் பொருட்டுக் கால்கோள் விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தேன். இந்த விழாவுக்கு குடியாத்தம் திருமகள் மில் அதிபர் கா.அ.ஷண்முக முதலியார், திருவண்ணாமலை பஸ் அதிபர் தேவராஜ முதலியார் முதலிய பெரியோர்களை வருமாறு ஏற்பாடு செய்திருந்தேன்.

கால்கோள் விழாவுக்கு முன்தினம் சிதம்பரத்தில் விரிவுரை இருந்தது. சிதம்பரத்தில் நடந்த அந்த விரிவுரைக்கு கடலூர் வருமான வரி ஆபீஸர் ஏ.கே.சுப்ரமணியப் பிள்ளை வந்திருந்தார். விரிவுரை முடிந்தவுடன் அவர் என்னைப் பார்த்து, ""என் காரில் வந்து கடலூரில் ரயில் ஏறுங்கள்'' என்று சொன்னார். அதுபடி அவருடைய காரில் கடலூருக்குச் சென்றேன். அப்பொழுது காற்றும், மழையும், புயலும் வீசிக்கொண்டிருந்தன. அவரை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு, கடலூர் புகைவண்டி நிலையத்தில் தங்கியிருந்தேன். ராமேசுவரம் விரைவு வண்டி இரவில் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தது. விழுப்புரத்தில் காட்பாடி ரயில் கிடைக்காதே என்று வருந்திக்கொண்டிருந்தேன். அந்த வண்டியிலேறி, விடியற்காலை ஐந்தரை மணிக்கு விழுப்புரம் சேர்ந்தேன். காட்பாடி வண்டி குறித்த நேரத்தில் புறப்பட்டுப்போய்விட்டது.

Advertisement

Advertisement

காலை ஒன்பது மணிக்கு வள்ளிமலையில் கால்கோள் விழா. தந்தி கொடுப்பதற்கும் வழியில்லை. காட்பாடி ரயில் கிடைக்காமையினால் நான் தீயில் விழுந்த புழுவைப்போல் துடித்துவிட்டேன்.

விடியற்காலை ஐந்தரை மணிக்கு திருச்சிக்குப் போகும் ரயிலில் முதல் வகுப்பில் ஏறினேன்.

""வள்ளி நாயகி! உன்னுடைய திருப்பணிக்குப் போகும் எனக்கு இத்தகைய இடர்ப்பாடு நேர்ந்ததே! உனக்கு இந்த ஏழை மீது இரக்கம் இல்லையா? என்னை இந்த வேதனைக்கு ஆளாக்கினையே அம்மா! கால்கோள் விழா என்ன ஆகுமோ! அத்திருப்பணிக்கு நான்தானே தலைவன். என்னை நம்பிப் பலரும் வந்திருப்பார்களே! நான் போகவில்லையானால் அவர்கள் என்ன நினைப்பார்களோ? தகவல் கொடுக்கவும் வழியில்லையே என்று புலம்பிக்கொண்டே வண்டியில் பிரயாணம் செய்தேன். திருச்சிக்குப் பகல் பன்னிரண்டு மணிக்கு அந்த வண்டி சேர்ந்தது.

திருச்சியில் முதல் வகுப்புப் பிரயாணிகள் தங்கும் அறையில் நீராடி வழிபாடு செய்தேன். பகல் இரண்டு மணி. உணவுச்சாலை பூட்டியிருந்தது. நான் வழிபாடு செய்வதற்கு முன் தண்ணீரும் பருகுவதில்லை. வெறும் காபி பருகலாம் என்றால், அதற்கும் வழியில்லை. விசனத்தோடு திரும்பினேன். அங்கே ஓர் ஐயர் வந்தார். ""என்ன பார்க்கின்றீர்?'' என்றார். ""ஒன்றுமில்லை. காபி குடிக்கலாமென்று வந்தேன். பூட்டியிருக்கிறது. புறப்படுகின்றேன்'' என்று சொன்னேன்.

""உள்ளே வாருங்கள்'' என்று கூறி, உணவுச் சாலைக்குள் அழைத்துக்கொண்டு போய் பகல் இரண்டரை மணிக்கு இலை போட்டு நெய்யிலே பொரித்த உணவுகளுடன் உணவு படைத்தார். உண்டு உவந்தேன். பணம் கொடுக்கப் போனேன். ""வேண்டாம்'' என்று மறுத்து விட்டார். ""நீங்கள் யார்?'' என்று கேட்டேன்.

""நான்தான் இந்த உணவுச்சாலைக்கு அதிகாரி'' என்றார்.

""உங்கள் பேர் என்ன?'' என்று கேட்டேன்.

""சுப்ரமண்ய ஐயர்'' என்று சொன்னார்.

மாலை மூன்றரைக்கு ரயில் ஏறி, இரவு பத்து மணிக்கு மதுரை சேர்ந்தேன்.

பொழுது புலர்ந்தது. காலை ஏழேகால் மணிக்கு வானொலிச் செய்தியில் அரியலூரில் ரயில் விழுந்து பலர் மாண்டுவிட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

என்னுடைய திட்டத்தின்படி விழுப்புரத்தில் ரயில் கிடைத்து, வள்ளிமலைக்குப் போயிருப்பேனானால் திரும்பி வரும்பொழுது அந்த ரயிலில் வந்து அரியலூரில் நானும் விபத்துக்கு ஆளாகியிருப்பேன். கருணையே வடிவாகிய கந்தப்பெருமான் இன்னும் சில திருப்பணிகளை என்னைக் கொண்டு செய்விக்கும் பொருட்டு இந்த மாறுதலைச் செய்தார்.

விழுப்புரத்தில் ரயில் கிடைக்காத பொழுது தெய்வத்தை நொந்துகொண்டேன். இறைவனுடைய திருவருட் செயலை யாவரே அறிவர்.

நன்றி: குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை - 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments