அமெரிக்கா: ஃபிளாரன்ஸ்' புயல் கடக்கும் பாதையை கணிக்க முடியாததால் பொதுமக்கள் பீதி
அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள சக்தி வாய்ந்த ஃபிளாரன்ஸ்' புயல், அமெரிக்கக் கடலோரப் பகுதிகளைக் கடக்கும் பாதையை துல்லியமாக கணிக்க முடியாததால், அந்தப் பகுதிகளில்
அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள சக்தி வாய்ந்த ஃபிளாரன்ஸ்' புயல், அமெரிக்கக் கடலோரப் பகுதிகளைக் கடக்கும் பாதையை துல்லியமாக கணிக்க முடியாததால், அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பீதியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே கூறப்பட்ட பாதைக்கு பதிலாக, அந்தப் புயல் தெற்கு திசை நோக்கி அதிகமாக நகரும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வர்ஜீனியா, வட மற்றும் தென் கரோலினா மாகாணங்களுக்கு அடுத்தபடியாக, தற்போது ஜார்ஜியா மாகாணமும் அவசர நிலையை அறிவித்துள்ளது.
முன்னதாக, அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள ஃபிளாரன்ஸ்' புயல் கிழக்குக் கடலோரப் பகுதிகளை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து, ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை அதிகாரிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தினர்.
இந்தச் சூழலில், வானிலை முன்னறிவிப்புகளில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவதால், மக்களை அப்புறப்படுத்தும், மற்றும் எச்சரிக்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், பல ஆண்டுகள் கழித்து கிழக்குக் கடலோரப் பகுதியைத் தாக்கவிருக்கும் மிக மோசமான புயல் இது' என்று குறிப்பிட்டிருந்தார்.
ஃபிளாரன்ஸ்' புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 220 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.