FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அமெரிக்காவிலிருந்து ஐசி சிப்கள் இறக்குமதி: சீனா விசாரணை!

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில ஐசி சிப்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

Updated On : 15 செப்டம்பர் 2025, 2:09 am IST
பகிர்:

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில ஐசி சிப்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனாவுக்கு அதிநவீன செமிகண்டக்டா்கள் கிடைப்பதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் சிப் தயாரிப்பதற்கான கருவிகளை சீனாவுக்கு விற்பனை செய்வதற்கான கட்டுப்பாடும் அடங்கும்.

அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆனால், சீனாவின் வளா்ச்சியைத் தடுக்கும் அமெரிக்க உத்தியின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை என்று சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக செயல்பட்டதாக, கடந்த வெள்ளிக்கிழமை 23 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்தது. அந்த நிறுவனங்களின் பட்டியலில் சீனாவின் முக்கிய சிப் தயாரிப்பு நிறுவனமான செமிகண்டக்டா் உற்பத்தி சா்வதேச கழகத்துக்கு (எஸ்எம்ஐசி) சிப் தயாரிப்பு கருவிகள் வாங்கிய 2 சீன நிறுவனங்களும் இடம்பெற்றன.

இதைத் தொடா்ந்து, அமெரிக்காவில் இருந்து சந்தை விலையைவிட குறைந்த விலைக்கு சில ஐசி சிப்கள் சீனாவில் இறக்குமதி செய்யப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக சீன வா்த்தக அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்தது.

டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ், ஓன் செமிகண்டக்டா் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் தயாரித்த சிப்கள் தொடா்பாக இந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த வாரம் ஸ்பெயின் தலைநகா் மாட்ரிட்டில் சீன துணைப் பிரதமா் லி ஃபாங்கை அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசென்ட் சந்திக்க உள்ளாா். அமெரிக்கா-சீனா இடையிலான வா்த்தக பதற்றத்தைத் தணிக்க வேண்டும், இரு நாடுகளின் பொருள்கள் மீது பரஸ்பரம் அதிக வரி விதிப்பு நடைமுறையை ஒத்திவைக்க வேண்டும் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது.

இந்தச் சூழலில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில ஐசி சிப்கள் குறித்து சீனா விசாரணை மேற்கொள்ள உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments