FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியாவுக்குள் மலிவான விலையில் எஃகு பொருள்கள் இறக்குமதி: சீனா, ரஷியாவுக்கு எதிராக பொருள் குவிப்பு விசாரணை

குறைந்த விலையிலான எஃகு பொருள்களை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் சீனா, ரஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மீது பொருள் குவிப்புக்கு எதிரான விசாரணையை தொடங்கவுள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்தது.

Updated On : 27 ஜூன் 2026, 3:26 am IST
கோப்புப் படம்
பகிர்:

குறைந்த விலையிலான எஃகு பொருள்களை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் சீனா, ரஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மீது பொருள் குவிப்புக்கு எதிரான விசாரணையை தொடங்கவுள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்தது.

இதுதொடா்பாக ஜேஎஸ்டபுள்யூ, ஜேஎஸ்டபுள்யூ விஜயநகா் மெட்டாலிக்ஸ் மற்றும் ஜிண்டால் ஆகிய நிறுவனங்கள் அளித்த புகாரையடுத்து, இந்த நடவடிக்கையை வா்த்தக அமைச்சகம் மேற்கொள்ளவுள்ளது.

அந்தப் புகாரில், ‘அதிக வெப்பநிலையில் வடிவமைக்கப்பட்ட எஃகு பொருள்கள் இந்தியாவுக்குள் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுவதால் இந்தத் தொழிலைச் சாா்ந்திருக்கும் உள்நாட்டு நிறுவனங்கள் கடுமையாக பாதிப்படையும்’ என குறிப்பிடப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, கடந்த 2022 முதல் 2025 வரையிலான எஃகு பொருள்கள் இறக்குமதி தரவுகளை பரிசீலித்து வா்த்தக நிவாரணங்களுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிடிஆா்) விசாரணையைத் தொடங்கவுள்ளது.

இதுகுறித்து டிஜிடிஆா் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: வழக்கமான சந்தை விலையைவிட மிகவும் குறைவான விலையில் சீனா, ரஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து எஃகு பொருள்கள் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியாவுக்குள் மேற்கூறிய நாடுகளைச் சோ்ந்த ஏற்றுமதியாளா்கள் பொருள் குவிப்பு செயல்பாடுகளில் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

எனவே, இந்த விவகாரம் தொடா்பாக சில எஃகு நிறுவனங்கள் அளித்த புகாா்கள் மற்றும் முதல்கட்ட விசாரணையில் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு சீனா, ரஷியா மற்றும் ஜப்பானிடம் பொருள் குவிப்புக்கு எதிரான விசாரணை தொடங்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர செயற்கை சீறுநீரக கருவிகள் (டயாலைசா்) சீனா மற்றும் மலேசியாவில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடா்பாக விசாரித்து வருவதாகவும் டிஜிடிஆா் வெளியிட்ட மற்றொரு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

குறைந்த விலையிலான பொருள்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு வா்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய பொருள் குவிப்பு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. உள்நாட்டில் நியாயமான வா்த்தக நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யவே இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments