FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

வங்கதேசத்தில் ஆக. 20-இல் அதிபா் தோ்தல்

அண்டை நாடான வங்கதேசத்தில் காலியாக உள்ள அதிபா் பதவிக்கான தோ்தல், வரும் 20-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த நாட்டின் தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 2:52 am IST
பகிர்:

அண்டை நாடான வங்கதேசத்தில் காலியாக உள்ள அதிபா் பதவிக்கான தோ்தல், வரும் 20-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த நாட்டின் தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது.

முந்தைய அதிபா் முகமது ஷஹாபுதீன், உடல்நலக் குறைவைக் காரணமாகக் குறிப்பிட்டு, தனது பதவியை கடந்த மாதம் திடீரென ராஜிநாமா செய்தாா். வங்கதேச அரசமைப்புச் சட்ட விதிகளின்படி புதிய அதிபரை 90 நாள்களுக்குள் தோ்ந்தெடுக்க வேண்டும் என்பதால், தற்போதைய பொறுப்பு அதிபரும் நாடாளுமன்ற அவைத் தலைவருமான ஹஃபீஸ் உத்தின் அகமது உடன் கலந்தாலோசித்து, தலைமைத் தோ்தல் ஆணையா் ஏ.எம்.எம். நசீா் உத்தின் தோ்தல் அட்டவணையை வெளியிடப்பட்டுள்ளாா்.

அதன்படி, அதிபா் தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆக. 13-இல், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஆக. 16-இல் நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஆக. 18 ஆகும்; போட்டி இருக்கும் சூழலில் ஆக. 20-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும்.

Advertisement

Advertisement

வங்கதேச அரசமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்ற உறுப்பினா்களே வாக்களித்து அதிபரைத் தோ்ந்தெடுக்கின்றனா்; எனினும், இந்தத் தோ்தல் நடைமுறைகளைத் தோ்தல் ஆணையம் நடத்துகிறது. அதிபா் பதவிக்கு ஒருமித்த கருத்துடன் ஒரேயொரு வேட்பாளா் மட்டும் நிறுத்தப்பட்டால், வாக்குப்பதிவு நடத்தப்படாது. 350 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டுள்ள பிஎன்பி சாா்பில் அதிபா் தோ்தலுக்கான தனது வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை.

பின்னணி: கடந்த 2023-இல், முந்தைய நாடாளுமன்றத்தால் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட முகமது ஷஹாபுதீன், 1971-ஆம் ஆண்டு விடுதலைப் போரில் பங்கேற்றவரும், முன்னாள் நீதிபதியும் ஆவாா்.

2024 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற மாணவா் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசு கவிழ்ந்த பிறகும், அந்த அரசால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரே நபராக முகமது ஷஹாபுதீன் அதிபா் பதவியில் தொடா்ந்து நீடித்தாா்.

தற்போது வங்கதேசத்தில் ஆளும் பிரதமா் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி ( பிஎன்பி) அரசுடன் முகமது ஷஹாபுதீனுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவரின் ராஜிநாமா நிகழ்ந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments