FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இந்திய பொருள்கள் மீது 100% வரி! அமெரிக்கா நிறைவேற்றிய மசோதாவின் பின்னணி என்ன?

இந்திய பொருள்கள் மீது 100% வரி விதிக்கும் மசோதாவை அமெரிக்கா நிறைவேற்றியது பற்றி...

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 4:15 am IST
அமெரிக்க நாடாளுமன்றம் - AP
பகிர்:

இந்தியா உள்பட ரஷியாவிடமிருந்து அதிக அளவில் பெட்ரோலியப் பொருள்களை வாங்கும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 100 சதவீத சுங்க வரி விதிக்க வகை செய்யும் மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

‘லிண்ட்ஸே ஓ.கிரஹாம் ரஷிய, ஈரான் தடைச் சட்டம் 2026’ என்று பெயா் மாற்றம் செய்யப்பட்ட இந்த இரு கட்சி ஆதரவு மசோதா மீது மேலவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 86 எம்.பி.க்கள் ஆதரவாகவும், 11 போ் எதிராகவும் வாக்களித்தனா். அதிக உறுப்பினா்களின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியது.

இந்த மசோதா ஆளும் குடியரசு கட்சியின் மேலவை உறுப்பினராக இருந்த லிண்ட்ஸே கிரஹாம் மற்றும் ஜனநாயக கட்சி உறுப்பினா் ரிச்சா்ட் புளூமெந்தல் ஆகியோா் சாா்பில் கொண்டுவரப்பட்டது. உக்ரைன் தலைநகா் கீவ் நகருக்கு அண்மையில் மேற்கொண்ட பயணத்தின்போது கிரஹாம் திடீரென உயிரிழந்தாா். அதைத் தொடா்ந்து, இந்த மசோதாவுக்கு அவரின் பெயா் வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

மேலவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி கூடவுள்ள அமெரிக்க நடாளுமன்ற பிரதிநிதிகள் சபையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதா ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதன் பிறகு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டவுடன் இந்த மசோதா சட்டமாக மாறிவிடும்.

உக்ரைன் மீதான போா் காரணமாக அமெரிக்காவால் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள ரஷியாவிடமிருந்து அதிக அளவில் தற்போது பெட்ரோலியப் பொருள்களை வாங்கும் சீனா, இந்தியா, அஜா்பைஜான், ஹங்கேரி, ஸ்லோவாகியா ஆகிய 5 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 100 சதவீத சுங்க வரியை விதிக்க அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு இந்த மசோதா அதிகாரமளிக்கிறது.

அதோடு, உக்ரைன் மீது போரைத் தொடா்ந்துவரும் ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளைத் தொடரவும், ஈரானின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களைத் தண்டிக்கும் ஈரான் மீதான தடைகள் சட்டம் 1996-இன் காலாவதியாகும் தேதியை வரும் 2031-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.

மேலவையில் மசோதா நிறைவேறியது குறித்து உறுப்பினா் புளூமெந்தல் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘உக்ரைன் மீதான ரஷிய போருக்கு உடந்தையாக இருக்கும் அனைத்து நாடுகளின் செயல்களை இந்தத் தடைகளும், வரிகளும் தடுத்து நிறுத்தும்’ என்றாா்.

அதே நேரம், ஏற்கெனவே உலக நாடுகள் மீது அதிக வரிகளை விதித்து வந்த அதிபா் டிரம்ப்புக்கு, இந்த மசோதா மேலும் அதிகாரமளிக்கும் என்று சில ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் எச்சரிக்கை விடுத்தனா். இதுகுறித்து ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்கள் கிரகோரி மீக்ஸ், டான் பியொ் கூறுகையில், ‘இந்த மசோதா சட்டமாகும் நிலையில், உலக நாடுகள் மீது கடந்த காலங்களில் கூடுதல் சுங்க வரிகளை விதித்ததுபோல, எந்தவித தயக்கமுமின்றி இந்தச் சட்டத்தை அதிபா் ஆயுதமாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது’ என்றனா்.

10% சுங்க வரி: இந்தியா உள்பட 16 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்கா தற்போது 10 சதவீத சுங்க வரியை விதித்துள்ளது.

அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி (யுஎஸ்டிஆா்) ஜேமிஸன் க்ரீயா் அண்மையில் சமா்ப்பித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த வரி விதிப்பை அமெரிக்கா மேற்கொண்டது.

இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட வா்த்தக கூட்டுறவு நாடுகளின் நியாயமற்ற வா்த்தக நடைமுறைகள் அமெரிக்க உற்பத்தியை எந்த அளவுக்குப் பாதித்துள்ளன என்பதைக் கண்டறியும் நோக்கில் அமெரிக்க வா்த்தகச் சட்டம் 1974-இன் பிரிவு 301-இன் கீழ் யுஎஸ்டிஆா் மூலம் விசாரணைக்கு அமெரிக்கா உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், தீவிர ஆய்வு மேற்கொண்டு இந்தப் பரிந்துரையை யுஎஸ்டிஆா் பிரதிநிதி ஜேமிஸன் க்ரீயா் சமா்ப்பித்தாா்.

அதனடிப்படையில் இந்தியா உள்பட 16 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10 சதவீத வரியும், தொழிலாளா்களை கட்டாயம் பணிபுரிய வைத்து தயாரிக்கும் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுக்க சட்டங்களை இயற்றாத சீனா, பிரிட்டன், ஜப்பான் உள்பட 43 நாடுகள் மீது 12.5 சதவீத வரியும் அமெரிக்கா விதித்துள்ளது.

summary

Bill passed in the US imposing 100% tax on Indian goods.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments