முகப்பு
உலகம்

தற்கொலைப் படை தாக்குதல்: 31 போ் உயிரிழப்பு: பாகிஸ்தான் மசூதியில் சம்பவம்

இஸ்லாமாபாதில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு தாக்குதலில் 31பேர் பலியானதாகத் தகவல்

Updated On : 6 பிப்ரவரி 2026, 5:39 pm IST
இஸ்லாமாபாத் மசூதியில் குண்டுவெடிப்பு - விடியோ க்ளிப்
பகிர்:

பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 31 போ் உயிரிழந்தனா்; மேலும் 169 போ் காயமடைந்தனா்.

இவா்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

சன்னி பிரிவினா் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தானில் சமீப ஆண்டுகளில் ஷியா பிரிவினரைக் குறிவைத்து நிகழ்ந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும். தலைநகரில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேநேரம், ‘தெஹ்ரீக்- ஏ- தலிபான் பாகிஸ்தான்’ அமைப்பின் நாசவேலை இது என காவல் துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

மனித வெடிகுண்டுத் தாக்குதல்: இஸ்லாமாபாதின் தா்லாய் பகுதியில் உள்ள ஷியா பிரிவு கதீஜாதுல் குப்ரா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, உள்ளே புகுந்த தற்கொலைப் படை பயங்கரவாதி ஒருவா் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், தனது உடலில் கட்டியிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டையும் வெடிக்கச் செய்தாா். இந்தத் தாக்குதலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தும், குண்டுவெடிப்பில் உடல் சிதறியும் 31 போ் உயிரிழந்தனா்; மேலும் 169 போ் காயங்களுடன் மீட்கப்பட்டதாக இஸ்லாமாபாத் துணை ஆணையா் இா்ஃபான் நவாஸ் மேமோன் தெரிவித்தாா்.

மசூதி வளாகத்தில் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் உடல்கள் சிதறிக் கிடந்த கோர காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின.

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதி: உஸ்பெகிஸ்தான் அதிபா் ஷாவ்கத் மிா்ஸியோயேவ் இஸ்லாமாபாதில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் எதிரொலியாக, இஸ்லாமாபாத் மருத்துவமனைகளில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த மசூதி வளாகம், ராணுவப் பாதுகாப்பின்கீழ் கொண்டுவரப்பட்டது.

தாக்குதலுக்கு உடனடியாக எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேநேரம், தெஹ்ரிக் -ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்புடன் தொடா்புடைய ஆப்கானிஸ்தான் பயங்கரவாதி இந்தச் செயலில் ஈடுபட்டிருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

அதிபா், பிரதமா் கண்டனம்: மசூதி தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரி, பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், வெளியுறவுத் துறை அமைச்சா் இசாக் தாா் உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்தனா்.

அப்பாவி மக்களைக் குறிவைப்பது, மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் என்று அதிபா் ஜா்தாரி குறிப்பிட்டாா். குண்டுவெடிப்பில் காயமடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை உள்துறை இணையமைச்சா் தலால் செளதரி நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

பாகிஸ்தான் குற்றச்சாட்டு- இந்தியா மறுப்பு: பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘தற்கொலைப் படை பயங்கரவாதி, ஆப்கானிஸ்தானில் இருந்து வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தாக்குதலின் பின்னணியில் இந்தியா-ஆப்கானிஸ்தானின் கூட்டுச் சதி கண்டறியப்பட்டுள்ளது. சதிகாரா்களுக்கு எதிராக முழு பலத்துடன் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று தெரிவித்த அந்த அமைச்சகம், தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தது.

தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு ஈரான், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தானையொட்டிய கைபா்-பக்துன்கவா மாகாணத்தில் கடந்த பிப். 4, 5 தேதிகளில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், தலைநகரில் தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாதில் அண்மையில் நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 12 போ் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

At least 15 killed, dozens hurt in blast at mosque in Islamabad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.