பாகிஸ்தானில் 200 ஆண்டுகள் பழமையான ஹிந்து கோவிலுக்கு சீல்!
பாகிஸ்தானில் 200 ஆண்டுகள் பழமையான ஹிந்து கோவிலை இடிக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அக்கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் 200 ஆண்டுகள் பழமையான ஹிந்து கோவிலை இடிக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அக்கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில், சுமார் 200 ஆண்டுகள் பழமையான ராம் லீலா ஹிந்து கோவில் அமைந்துள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோவிலை இடித்து வணிக வளாகம் கட்டுவதற்கான முயற்சி அங்கு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியில் உள்ள ஹிந்துக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, ’வெளியேற்றப்பட்டோர் அறக்கட்டளை சொத்து வாரியம்’ தலையீட்டில் அதிகாரிகள் அந்தக் கோவிலுக்கு சீல் வைத்துள்ளனர்.
Advertisement
Advertisement
உள்ளூர் அரசு நிர்வாகம் அக்கோவிலை அதிகாரப்பூர்வமாக தனது கட்டுப்பாட்டில் எடுத்த நிலையில், அந்தக் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தின் மையப்பகுதியில் உள்ள ரஹீம் பஜாரில் இக்கோவில் அமைந்துள்ளது. இங்கு கோவிலை இடிக்கும் பணியில் சிலர் ஈடுபட்ட நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த உள்ளூர் வாசிகள் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்தே, சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் இந்தப் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
வெளியேற்றப்பட்டோர் அறக்கட்டளை சொத்து வாரியம் (ETPB) என்பது பாகிஸ்தான் அரசு அமைப்பாகும். 1947 இந்தியா - பாக். பிரிவினைக்குப் பின் இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்தவர்களால் விட்டுச் செல்லப்பட்ட சொத்துகள் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் அறக்கட்டளைச் சொத்துகளைப் பராமரிக்கும் பொறுப்பு இந்த அமைப்பிற்கு உள்ளது. பல ஹிந்து மற்றும் சீக்கிய தலங்களை இந்த அமைப்பு கண்காணித்து வருகிறது.
தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் இந்த அமைப்பின் கீழ் பண்பாட்டுப் பாரம்பரியச் சொத்துகளாக சுமார் 400 கட்டடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதில், இந்த ராம் லீலா கோவிலும் ஒன்று.
கோவிலை இடிக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்த சமூக ஆர்வலர்கள் மற்றும் ஹிந்து சமூக பிரதிநிதிகள் இணைந்து அந்தக் கோவில் உரிமையியல் விவரங்கள் மற்றும் அங்குக் கட்டப்படுவதாகச் சொல்லப்பட்ட வணிக வளாக கட்டுமானத்தின் சட்டப்பூர்வத் தன்மை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதேநேரம், இப்பிரச்னையை பாக். நாடாளுமன்றத்தில் எழுப்பவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாகாணத்தில் தற்போது ஆளுநர் ஆட்சி அமலில் உள்ள நிலையில், ஹிந்து சமய தலங்களுக்கு சிறப்புப் பாதுகாப்பு கிடைக்கும் என அனைத்துப் பாகிஸ்தான் ஹிந்து உரிமைகள் இயக்கத்தின் தலைவரான ஹாரூன் சராப் டயால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், 2013 முதல் 2026 வரை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அல்லது விற்கப்பட்டதாகக் கூறப்படும் சமயச் சொத்துகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் டயால் கோரிக்கை விடுத்தார்.
ராம் லீலா கோவில் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தின் வரலாற்று பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக உள்ளூர்வாசிகளால் பார்க்கப்படுகிறது. இங்கு வணிக வளாகம் கட்டுவதற்காக முன்னர் எடுக்கப்பட்ட முயற்சியும் இப்பகுதிவாசிகள் தெரிவித்த எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
பாகிஸ்தானின் தொல்லியல் துறையின் கூற்றுப்படி, இந்த மாவட்டமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் 7-ஆம் நூற்றாண்டு முதல் 11-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலம் வரையிலான பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிந்து சமய மற்றும் தொல்பொருள் மையங்களின் இருப்பிடமாக விளங்குகின்றன.
இப்பகுதியில், சிறையிலுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியால் நடத்தப்பட்ட மாகாண அரசு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கத் தவறியதால் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக சீர்குலைந்தது. இதனைச் சுட்டிக்காட்டி அக். 11 முதல் கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஆளுநர் ஆட்சியை பாக். அரசு அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் ETPB அமைப்பின் செயல்பாடுகளில் கூடுதல் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அதேநேரம், அந்த அமைப்பைச் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவம் கொண்டதாக மாற்றுவதற்கான சீர்திருத்தங்களையும் பரிந்துரைத்துள்ளது.
அந்த ஆணையம் சில நாள்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், சிறுபான்மையினர் தங்களின் அடிப்படை உரிமை மீறல்கள், மத நிந்தனைச் சட்டங்களின் தவறான பயன்பாடு, கட்டாயத் திருமணங்கள், மதமாற்றங்கள் மற்றும் பாகுபாடான நடைமுறைகளைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.
’மறுக்கப்பட்ட புகலிடம் : மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் 2025/26’ (Sanctuary Denied: Freedom of Religion or Belief in 2025/26) என்ற தலைப்பிலான அந்த அறிக்கையில், கடத்தல் மற்றும் கட்டாயத் திருமணங்களை எதிர்கொள்ளும் ஹிந்து மற்றும் கிறிஸ்தவப் பெண்களின் அவலநிலை, வேலைவாய்ப்பில் பாகுபாடுகள், புறக்கணிக்கப்படும் சிறுபான்மையினரின் பிரச்ச்னைகள் போன்றவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
A 200-year-old Hindu temple in Pakistan has been sealed following protests over its demolition.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.