FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்திய, இலங்கை பிராந்திய பாதுகாப்புக்கு முன்னுரிமை: அனுர - ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயகவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நடத்திய பேச்சுவார்த்தை பற்றி...

10 செப்டம்பர் 2026, 5:26 am IST
பகிர்:

நமது சிறப்பு நிருபர்

இந்திய, இலங்கை பிராந்திய பாதுகாப்புக்கு இரு தரப்பும் கூட்டாக முன்னுரிமை வழங்க கொழும்பில் புதன்கிழமை இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயகவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

"இலங்கைக்கு கடந்த 38 ஆண்டுகளில் முதல் முறையாக வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்' என்ற பெருமையுடன் ராஜ்நாத் சிங் கொழும்பில் தனது இரண்டாம் நாள் பயணத்தை புதன்கிழமை மேற்கொண்டார். இதையொட்டி, இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக, பிரதமர் ஹரிணி சூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கை பாதுகாப்பு செயலர் மற்றும் முப்படை தளபதிகளை அவர் வெவ்வேறு நிகழ்விடங்களில் சந்தித்துப் பேசினார்.

Advertisement

Advertisement

அதிபர் அனுர குமார திசாநாயகவை சந்தித்தபோது, இலங்கை அரசு வெற்றிகரமாக 2 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இரு தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, நாகரிக இரட்டையர்களாகவும், கடல்சார் கூட்டாளிகளாகவும் திகழும் இரு நாடுகளும் குடிமக்களின் மேம்பாட்டுக்காகவும், இந்திய பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு, அமைதி மற்றும் வளத்துக்காகவும் முன்னுரிமை கொடுத்து இணைந்து செயல்படுவதற்கு பரஸ்பரம் வலியுறுத்தினர்.

அதிபர் திசாநாயக பேசும்போது, "இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராக இலங்கை மண்ணை பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்' என்று உறுதி அளித்தார். "டித்வா' புயலின்போது "ஆபரேஷன் சாகர் பந்து' மூலம் இந்தியா வழங்கிய நிவாரண உதவிகள் மற்றும் மறுசீரமைப்புப் பணி உதவித் தொகுப்புக்காக அவர் நன்றி தெரிவித்தார். அதற்கு ராஜ்நாத் சிங், "இலங்கை நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம் அதில் இருந்து அந்நாடு மீள்வதற்கு உறுதுணையாக இந்தியா என்றும் துணைநிற்கும்' என்று உறுதியளித்தார்.

இந்த பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்வில், இந்திய பாதுகாப்புப் படையினரால் இலங்கையில் அமைக்கப்பட்ட மூன்று "பெய்லி' பாலங்களை (தயார்நிலை பாலங்கள்) இலங்கை அதிபருடன் இணைந்து காணொலி வாயிலாக ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை ராஜ்நாத் சிங் சந்தித்தபோது, பரஸ்பர வளர்ச்சி, ஒத்துழைப்பு, கல்வி மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான பண்பாட்டு உறவுகள் குறித்து பேசினார். பின்னர் இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ராஜ்நாத் சிங் சந்தித்தார்.

முன்னதாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சென்ற ராஜ்நாத் சிங், அங்கு அந்நாட்டின் முப்படை உயரதிகாரிகளுடன் பேசினார். பின்னர், இந்திய அமைதி காப்புப் படை (ஐபிகேஎஃப்) நினைவிடத்துக்குச் சென்ற ராஜ்நாத் சிங், 1987-இல் இலங்கை அமைதிப் பணியின்போது இன்னுயிர் ஈந்த 1,155 இந்திய வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

புதன்கிழமை மாலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க கொழும்பு கங்காராமய பெüத்த ஆலயத்துக்குச் சென்று ராஜ்நாத் சிங் வழிபட்டார். பின்னர் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்த "உதய்கிரி' இந்திய போர்க்கப்பலில் இரவு ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வில் ராஜ்நாத் சிங் பங்கேற்று இரு நாட்டு வீரர்கள் மத்தியில் பேசினார்.

3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இலங்கை அதிபர், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, ராணுவ பயிற்சி மற்றும் கல்வித் துறையை வலுப்படுத்தும் 3 முக்கிய ஒப்பந்தங்கள் புதன்கிழமை கையொப்பாமாகின. அதன் விவரம்:

பாதுகாப்பு ஒத்துழைப்பு: இந்தியாவிடமிருந்து முன்னர் இலங்கை விமானப் படைக்காக வழங்கப்பட்ட "எல்-70' ரக வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை, இந்திய நிதியுதவி மூலம் நவீனமயமாக தரம் உயர்த்தப்படும்.

ராணுவப் பயிற்சி: இந்தியா மற்றும் இலங்கையின் "தேசிய பாதுகாப்பு கல்லூரிகளுக்கு' இடையே கல்வி, ஆராய்ச்சி மற்றும் வியூகம் சார்ந்த தகவல் பகிர்வு மேம்படுத்தப்படும்.

என்சிசி பரிமாற்றத் திட்டம்: இரு நாடுகளின் தேசிய மாணவர் படைகளுக்கு (என்சிசி) இடையேயான கூட்டு ஒத்துழைப்பை முறைப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாட்டு மாணவர்களும் ஆண்டுதோறும் புதுதில்லியில் நடைபெறும் முகாம்கள் மற்றும் கலாசாரப் பரிமாற்ற நிகழ்வுகளில் இணைந்து பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவர்.

"மீனவர் பிரச்னைக்கு சுமுக தீர்வு'

இந்திய, இலங்கை மீனவர் பிரச்னையை மனிதநேய அடிப்படையிலும் வாழ்வாதாரப் பிரச்னையாகவும் கருதி, இரு நாடுகளும் அவற்றின் சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு சுமுகமாகத் தீர்க்க வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

"கடல்சார் பாதுகாப்பு மற்றும் மகாசாகர் தொலைநோக்கு' என்ற தலைப்பில் கொழும்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் "இந்திய - இலங்கை கடல்சார் ஒத்துழைப்பு' என்ற தலைப்பில் ராஜ்நாத் சிங் பேசினார்.

அப்போது அவர், "இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்தல், தடையில்லா கடல்சார் வர்த்தகம் மற்றும் கப்பல்கள் சுதந்திரமாக இயங்குவதை உறுதி செய்தல் ஆகியவையே முதன்மை முன்னுரிமையாகும். சட்டவிரோத மீன்பிடித்தல், போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் ஆகியவற்றைத் தடுக்க இரு நாட்டு கடற்படை மற்றும் கடலோர காவல் படைகள் இடையே நிகழ்நேர தகவல் பரிமாற்ற கட்டமைப்பு அவசியமாகும். பேரிடர் காலங்களில் விரைந்து செயல்பட இருநாடுகளும் இணைந்த "கூட்டு கடல்சார் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண அமைப்பை உருவாக்க வேண்டும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments