உக்ரைன்-போலந்து எல்லையில் பயணிகள் ரயில் மீது ரஷியா தாக்குதல்: நூலிழையில் தப்பிய தூதா்கள்
உக்ரைன்-போலந்து எல்லையில் பயணிகள் ரயில் ஒன்றின் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
கீவ் / மாஸ்கோ: உக்ரைன்-போலந்து எல்லையில் பயணிகள் ரயில் ஒன்றின் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. ட்ரோன் நெருங்கியதையடுத்து பயணிகள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.
பிரிட்டன் முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்சன், ஸ்வீடன் முன்னாள் பிரதமா் காரல் பில்ட் உள்ளிட்ட ஐரோப்பிய தூதா்கள் பயணித்த ரயிலுக்கு, சில நிமிடங்களுக்குப் பின் வந்த ரயில் மீது இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
நேட்டோ உறுப்பு நாடான போலந்து எல்லையிலிருந்து வெறும் 2 கி.மீ. தொலைவில் இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. மேலும், உக்ரைன் தலைநகா் கீவிலிருந்து திரும்பும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அதிக அளவில் பயன்படுத்தும் வழித்தடம் இதுவாகும்.
Advertisement
Advertisement
ரஷியப் படைகளின் தொடா் தாக்குதல் அபாயம் காரணமாக ரயில்களின் நேர அட்டவணை நிகழ்நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டது. இதனால், தூதா்கள் பயணித்த ரயில் திட்டமிட்ட நேரத்துக்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்றது. எனவே, ரஷியாவின் உண்மையான இலக்கு, தூதா்களின் ரயிலாகவே இருந்திருக்கலாம் என உக்ரைன் ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இப்பகுதியிலேயே மற்றொரு சரக்கு வாகனமும் தாக்கப்பட்ட நிலையில், நேட்டோ எல்லையில் ரஷியா நடத்தும் இத்தகைய தாக்குதல்கள் ‘அத்துமீறலின் உச்சகட்டம்’ என போலந்து கண்டனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவிலிருந்து வரும் ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் கட்டமைப்புகளை மட்டுமே குறிவைத்ததாக ரஷியா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் கருத்துக்கு ரஷியா வரவேற்பு: இதனிடையே, உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதால், ரஷியாவின் டீசல் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குல்தல்களை உக்ரைன் நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளதை ரஷியா வரவேற்றது.
ரஷிய அதிபா் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘பொதுமக்களின் பொருளாதார உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோரும் எந்தவொரு அழைப்பும் வரவேற்கத்தக்கது’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.