பிரிக்ஸ் மாநாடு வந்த சீன அதிபருக்கு பக்கவாதம்? ஆபத்தான நிலையில் அறுவைச் சிகிச்சை?
தில்லி வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாக வெளியாகும் தகவல் பற்றி...
தில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு வந்திருந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு பக்கவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.
தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த செப். 12, 13 ஆகிய தேதிகளில் 18-ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையிலான சீனக் குழுவினரும் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
தில்லிக்கு சனிக்கிழமை வந்த ஷி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால், அதன்பிறகு பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் அவர் கலந்துகொள்ளவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாள் மாநாடு நிகழ்வில் பங்கேற்ற பிறகு அவர் சீனா திரும்பினார்.
பக்கவாதத்தால் பாதிப்பு?
இந்த நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபர் ஷி ஜின்பிங், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, மயங்கி விழுந்ததாக சீன அரசால் தடை செய்யப்பட்ட சீன ஜனநாயகக் கட்சியின் தலைவர் வான் ஜுன் ஷி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“பிரிக்ஸ் உச்சிமாநாட்டின்போது ஷி ஜின்பிங் மயங்கி விழுந்ததாக வதந்திகள் பரவின. அவருடன் சென்ற மருத்துவக் குழுவினர் அவசர சிகிச்சையளித்ததைத் தொடர்ந்து, அவர் தனது இந்தியப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு சிறப்பு விமானம் மூலம் சீனா திரும்பினார்.
பெய்ஜிங் விமான நிலையத்திற்கு விமானம் வந்தடைந்தபோது, அவரை வரவேற்க அதிகாரிகள் குழுவோ அல்லது வரவேற்பு விழாவோ விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்படவில்லை. மாறாக, அவசர சிகிச்சைக்காக ஷி ஜின்பிங்கை நேரடியாக பெய்ஜிங்கில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவர்கள் பரிசோதனையில் ஷி ஜின்பிங் கடுமையான 'இஸ்கிமிக் ஸ்ட்ரோக்' எனப்படும் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதால் ஏற்படும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தனது உடல்நிலை குறித்த தகவல்கள் இந்தியாவுக்கு தெரிந்துவிடும் என்பதால், இந்திய மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற அவர் மறுத்துவிட்டார். விமானப் பயணத்தின்போது அறுவை சிகிச்சைக்கான வசதிகள் இல்லாததால், மருத்துவக் குழுவினரால் அவரது உயிரைக் காப்பதற்கான அடிப்படைச் சிகிச்சைகளை மட்டுமே அளிக்க முடிந்தது. இதன் விளைவாக, அவசர சிகிச்சைக்கான மிக முக்கியமான கால அவகாசத்தை அவர் தவறவிட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டாலும், அதனால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், ”மருத்துவமனைக்கு ஷி ஜின்பிங் அழைத்துச் செல்லும்போதே கோமா நிலையை அடைந்துவிட்டார். அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை பகுதியில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவே அவர் அபாயக் கட்டத்தில் இருக்கிறார் என்பதை காட்டுகிறது. மருத்துவக் குழுவினரை வீட்டுக்கு அனுப்பாமல், வெளியுலகத்தை துண்டித்துள்ளனர்” என்று வான் ஜுன் ஷி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென தனது பேச்சை நிறுத்தி, ஜின்பிங்கை நோக்கி, “எல்லாம் சரியாக இருக்கிறதா?” எனக் கேட்டது பேசுபொருளாகியுள்ளது.
ஆனால், மொழிபெயர்பு ஹெட்போனில் ஏற்பட்ட பிரச்னை குறித்தே மோடி கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் ஷி ஜின்பிங் உடல்நிலைப் பற்றி சீனா அல்லது இந்திய அரசு தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை பகிரப்படவில்லை.
Did the Chinese President suffer a stroke upon arriving for the BRICS summit? Surgery performed while in critical condition?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.