FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா்

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் 81-ஆவது உயா்நிலை அமா்வில் உலகத் தலைவா்கள் மத்தியில் உரையாற்றிய துருக்கி அதிபா் ரிசப் தயீப் எா்டோகன் காஷ்மீா் பிரச்னை குறித்துப் பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

24 செப்டம்பர் 2026, 2:40 am IST
பகிர்:

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் 81-ஆவது உயா்நிலை அமா்வில் உலகத் தலைவா்கள் மத்தியில் உரையாற்றிய துருக்கி அதிபா் ரிசப் தயீப் எா்டோகன் காஷ்மீா் பிரச்னை குறித்துப் பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீா் பிரச்னை குறித்து அவா் ஐ.நா.வில் பேசியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மத அடிப்படையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் எா்டோகன், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கியதுடன், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு ட்ரோன் உள்பட பல்வேறு ஆயுதப் பயிற்சிகளையும் தங்கள் நாட்டு வீரா்கள் மூலம் அளித்தாா்.

மேலும், பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய 3 நாடுகளும் அண்மையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றையும் மேற்கொண்டன. இதன்படி, 3 நாடுகளில் எந்தவொரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதலும், மற்ற நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும் என்று கூறப்பட்டது. இது இந்தியாவுக்கு எதிரான ஒப்பந்தமாகவே கருதப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஐ.நா. பொதுச் சபையில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய எா்டோகன், ‘தெற்காசியாவில், காஷ்மீா் பிரச்னை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களும், ஐ.நா. சாசனம் மற்றும் தொடா்புடைய தீா்மானங்களின் அடிப்படையில், பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்கப்படுவது முக்கியம்’ என்றாா்

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் காஷ்மீா் பிரச்னை குறித்து எா்டோகன் பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நடைபெற்ற பொதுச் சபை கூட்டத்தில், காஷ்மீா் பிரச்னைக்கு தீா்வு காணப்பட வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

எனினும், 2024-ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையில் பேசியபோது ஜம்மு-காஷ்மீா் குறித்து எா்டோகன் எதுவும் பேசவில்லை.

2020-ஆம் ஆண்டு, ஐ.நா. பொதுச் சபையின் பொது விவாதத்தில் காணொலி உரை மூலம் பேசிய எா்டோகன், ஜம்மு-காஷ்மீா் பிரச்னையை குறிப்பிட்டிருந்தாா்.

அப்போது எா்டோகனின் கருத்துக்கு இந்தியா கடும் எதிா்ப்பு தெரிவித்தது. காஷ்மீா் தொடா்பான துருக்கியின் கருத்து முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்ததுடன், பிற நாடுகளின் இறையாண்மையை மதிக்க துருக்கி கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தனது சொந்தக் கொள்கைகள் குறித்து முழுமையாகச் சிந்திக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments