கூகுளின் 28-வது பிறந்தநாள்! முதல் டூடுல் உடன் கொண்டாடிய கூகுள்!
கூகுள் நிறுவனம் இன்று தனது 28-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.
கூகுள் நிறுவனம் (செப். 27) இன்று தனது 28-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக ஒரு சிறப்பு டூடுலை கூகுள் தேடு தளம் இன்று வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மாணவர்களாக இருந்த லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரால் செப் 4, 1998 அன்று அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.
கூகுள், ஒரு தேடுபொறி தளமாகத் தொடங்கி ஜிமெயில், யூடியூப், கூகுள் மேப்ஸ், ஆண்ட்ராய்ட் மற்றும் பிக்ஸல் ஸ்மார்ட்போன்கள் என உலகளவில் வலிமைமிக்க தொழில்நுட்ப ஜாம்பவானாக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
ஜெமினி ஏஐ மூலம் செயற்கை நுண்ணறிவு துறையிலும் நுழைந்து தனக்கென முத்திரையை பதித்துள்ளது.
இந்த நிலையில், 28-வது பிறந்தநாளான இன்று, ஆரம்பகாலத்தில் பயன்படுத்திய முதல் டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செப் 27 அன்று கூகுள் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவது ஏன் தெரியுமா?
அதற்கு ஒரு விளையாட்டுத்தனமான வரலாறு உள்ளது. கூகுள் முதன்முதலாக தனது பிறந்தநாள் டூடுலை 2002 ஆம் ஆண்டு செப். 27 அன்று அதன் முகப்புப் பக்கத்தில் வெளியிட்டது.
அதேபோல, ஆரம்ப காலங்களில் (2002 முதல் 2005 வரை) கூகுள் தனது பிறந்தநாளை செப்டம்பர் 7, செப்டம்பர் 8, செப்டம்பர் 26 என வெவ்வேறு நாட்களில் கொண்டாடியது.
அதேநேரம், மற்றொரு காரணமும் குறிப்பிட்டு சொல்லப்படுவது உண்டு. கூகுள் தனது தேடுபொறியில் எத்தனை இணைய பக்கங்கள் பட்டியலிட்டுள்ளது (Indexed) என்பதை செப். 27 அன்றே உலகிற்கு பெருமையுடன் காட்டியது.
அந்தக் காலத்தில் கூகுளின் முக்கிய போட்டியாளராக இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 'MSN' என்ற தேடு தளத்தை வைத்திருந்தது. அதைவிட, அதிக இணைய பக்கங்களை கூகுள் பட்டியலிட்டது அந்த சமயத்தில் பெருமையாகப் பார்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்தே, 2006-ம் ஆண்டு முதல் டூடுல் வெளியிட்ட நாளையும், இணைய பக்கங்களை பட்டியலிட்ட நாளையும் கணக்கில் கொண்டு செப்டம்பர் 27 அன்று அதிகாரப்பூர்வமாக கூகுளின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
கூகுள் நிறுவனத்திற்குள்ளேயே இது தொடர்பான குழப்பங்கள் பலமுறை எழுந்துள்ளதாக ஜெமினி ஏஐ பதிலளித்துள்ளது. செப். 4 அன்று பிறந்தநாளைக் கொண்டாடலாமா என நிறுவனர்கள் நினைத்தாலும், செப். 27 உலக பயனர்களிடையே கூகுள் பிறந்தநாளாகப் பிரபலமாகிவிட்டதால் அதையே பிறந்தநாளாக அவர்களும் கொண்டாடி வருகின்றனர்.
Google's 28th Birthday! Google Celebrates with Its First Doodle!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.