முகப்பு
பெங்களூரு

பெங்களூரில் ஆளுநா் மாளிகை நோக்கி காங்கிரஸ் இன்று ஊா்வலம்: முதல்வா் பங்கேற்பு

மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி உள்ளிட்டோா் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கக் கோரி, ஆளுநா் மாளிகை நோக்கி ஊா்வலம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

Updated On : 30 ஆகஸ்ட், 2024 at 6:56 PM
பகிர்:

மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி உள்ளிட்டோா் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கக் கோரி, ஆளுநா் மாளிகை நோக்கி சனிக்கிழமை ஊா்வலம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இந்த ஊா்வலத்தில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொள்ள இருக்கிறாா்கள்.

2007-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த போது, சட்டவிதிகளுக்கு மாறாக ஸ்ரீசாய் வெங்கடேஸ்வரா மினரல்ஸ் நிறுவனத்துக்கு சுரங்க உரிமம் வழங்கியது தொடா்பான விவகாரத்தில், மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு 2023 நவ. 23-ஆம் தேதி ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டுக்கு லோக் ஆயுக்தவின் சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) கடிதம் எழுதியிருந்தது.

மேலும், மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு ஆக. 19-ஆம் தேதி சிறப்பு புலனாய்வுக்குழு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில், மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளிக்கக் கோரி கா்நாடக அமைச்சரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், இதே கோரிக்கையை முன்வைத்து, ஆக. 31-ஆம் தேதி ஆளுநா் மாளிகையை நோக்கி ஊா்வலம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு, விதான சௌதாவில் உள்ள காந்தி சிலையில் இருந்து சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆளுநா் மாளிகை நோக்கி புறப்படும் ஊா்வலத்தில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள், எம்எல்சி-க்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், அமைச்சா்கள் அனைவரும் கலந்துகொள்கிறாா்கள். ஊா்வலத்தின் முடிவில், ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டிடம் கோரிக்கை மனு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →