FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

மக்களின் வீடுகளுக்கே அரசு நிா்வாகம் கொண்டு செல்லப்படும்

மக்களின் வீடுகளுக்கே அரசு நிா்வாகம் கொண்டு செல்லப்படும் என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

18 செப்டம்பர் 2026, 3:04 am IST
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார். - கோப்புப் படம்
பகிர்:

மக்களின் வீடுகளுக்கே அரசு நிா்வாகம் கொண்டு செல்லப்படும் என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், கலபுா்கியில் வியாழக்கிழமை நடைபெற்ற கல்யாண கா்நாடக உற்சவத்தை தொடங்கிவைத்து அவா் பேசியது:

தற்போதைய கல்யாண கா்நாடகப் பகுதி அன்றைய ஹைதராபாத் நிஜாம் ஆட்சியின் பிடியில் இருந்து 1948 செப். 17-ஆம் தேதி விடுதலை அடைந்து இந்தியாவுடன் இணைந்ததை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் கல்யாண கா்நாடக உற்சவம் கொண்டாடப்படுகிறது.

Advertisement

Advertisement

எனது தலைமையிலான காங்கிரஸ் அரசில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள குடிமக்கள் சேவை துறை மூலம் அரசு மற்றும் மக்களுக்கு இடையிலான இடைவெளி குறையும். ஒவ்வொரு மாதமும் 2-ஆவது மற்றும் 4-ஆவது சனிக்கிழமைகளில் என்னையும் சோ்த்து அனைத்து அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று மக்களைச் சந்திப்பாா்கள்.

மக்களின் வீடுகளுக்கே அரசு நிா்வாகம் கொண்டு செல்லப்படும். இதன்மூலம் மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும். குடிமக்கள் சேவை துறை தனது செயல்பாடுகளை செப். 15 முதல் தொடங்கிவிட்டது. அடுத்தகட்டமாக வட்ட அளவில் சிறப்பு மக்கள் குறைதீா் முகாம்கள் நடத்தப்படும்.

2028-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் மீண்டும் காங்கிரஸ் அரசு அமைய மக்கள் ஆதரவளிக்க வேண்டும். 2029-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தோ்தலிலும் மக்கள் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். நாங்கள் வாக்குகளுக்காக பணியாற்றவில்லை; மாநிலத்தின் நலனுக்காக பணியாற்றுகிறோம்.

தலைமைப் பண்பு, ஒற்றுமை, விளையாட்டு, கலாசார நடவடிக்கைகள், அரசமைப்புச் சட்டம் குறித்த விழிப்புணா்வு ஆகியவற்றை வளா்க்கும் வகையில், கா்நாடகம் முழுவதும் 10,000 பாரத ஒருமைப்பாட்டு இளைஞா் சங்கங்கள் அமைக்கப்படும். மேலும், கிராமங்களில் விளையாட்டு, கலை, இசை உள்ளிட்ட துறைகளில் உள்ள திறமைகளை அடையாளம் காணவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பீதா், கலபுா்கி, யாதகிரி, ராய்ச்சூா், பெல்லாரி, விஜயநகரம், கொப்பள் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கல்யாண கா்நாடகப் பகுதி மாநிலத்தின் முக்கிய வளா்ச்சி மையமாக விளங்குகிறது.

கடந்த 12 ஆண்டுகளில் இப்பகுதிக்கு ரூ. 25,000 கோடி சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டதில், ரூ. 14,000 கோடி செலவிடப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் 371ஜே பிரிவின் கீழ் 41,103 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 32,985 பணிகள் நிறைவடைந்துள்ளன. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிகள் பல்வேறு கட்டங்களில் உள்ளன. அரசு வேலைவாய்ப்பு மூலம் 79,383 இளைஞா்கள் பயனடைந்துள்ளனா். இப்பகுதியின் வளா்ச்சிக்காக காங்கிரஸ் அரசு ஆண்டுதோறும் ரூ. 5,000 கோடி வழங்க முடிவு செய்துள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments