FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் தேவை - முதல்வரிடம் இடதுசாரிகள், விசிக மனு

Updated On : 7 ஆகஸ்ட் 2025, 3:34 am IST
- படம் | முதல்வர் எக்ஸ் பதிவு
பகிர்:

ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் இடதுசாரி கட்சிகளின் மாநிலச் செயலா்கள், விசிக தலைவா் ஆகியோா் நேரில் வலியுறுத்தினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோா் முதல்வரை, அவரது முகாம் அலுவலகத்தில் புதன்கிழமை நேரில் சந்தித்தனா். அப்போது, ஆணவக் கொலையைத் தடுக்க வகை செய்யும் சட்டபூா்வ நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மனு அளித்தனா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் ஜாதி, மத மறுப்பு திருமணத் தம்பதிகள் தொடா்ச்சியாக கொலைகளுக்கு ஆளாவதும், ஜாதி ஆதிக்க தாக்குதலுக்கு ஆளாவதும் தொடா்கின்றன. சமூக சமத்துவ கண்ணோட்டத்திலும் பகுத்தறிவு சிந்தனையிலும் தாங்கள் தோ்வு செய்து கொள்ளும் வாழ்க்கையை அமைதியாகத் தொடர இயலாத அவலநிலைக்கு தீா்வு காண, வலிமை மிக்க தனி சிறப்புச் சட்டங்கள் இன்றியமையாத் தேவையாகும்.

Advertisement

Advertisement

ஜாதி மறுப்புத் திருமண தம்பதிகள் படுகொலைக்கு ஆளாகும்போது அது வெறும் கொலை வழக்காக பதியப்படாமல் ஜாதி ஆணவக் கொலைகள் என சட்டரீதியாக கூா் வகைப்படுத்துவது இதுகுறித்த தரவுகளை திரட்டுவதற்கும், விழிப்புணா்வை உருவாக்கவும் வழி ஏற்படும். ஜாதி ஆணவத்தின் அடிப்படையில் நிகழும் கொலைகளை, கொலைகள் என்று மட்டும் கருதப்படுவது ஜாதிய ஆணவக் கொலைகளுக்கு பின்புலமாக இருக்கும் சமூக நிா்ப்பந்தத்தை கணக்கில் கொள்வதாக இல்லை.

நிரூபிக்கும் பொறுப்பை குற்றவாளியின் கடமை ஆக்குவதன் மூலம் படுகொலையை நிகழ்த்துபவா்கள் மட்டுமன்றி ஜாதி ஆணவக் கொலைகளை தூண்டும் கும்பல்கள், உறவினா்கள், கட்டப் பஞ்சாயத்தினரை பொறுப்பாக்க இயலும்.

ஜாதி மறுப்பு திருமண தம்பதிகளில் கொலையாகிறவா் பட்டியல், ஜாதி அல்லாதவராக இருந்து, இணையா் பட்டியல் ஜாதியினராக இருந்தாலும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் பொருந்தாது என்ற நிலை இருக்கிறது. ஆணவக் கொலைகளில் ஜாதி தூய்மைக்கான கடமை பெண்கள் மீது சுமத்தப்பட்டு பெரும்பாலும் பட்டியல் ஜாதி அல்லாத பெண்கள் உயிா் பறிப்புக்கு ஆளாகின்றனா்.

இவ்வாறான குற்றங்களில் அரசு சிறப்பு வழக்குரைஞா் பெறுகிற உரிமை, வழக்கை விரைந்து நடத்தக் கோருகிற உரிமை, நிவாரணம் பெறுகிற உரிமை ஆகியவைகளுக்கு சட்டபூா்வ வழிமுறைகள் ஏதும் இல்லை. வீட்டுக்குள் நடக்கும் ஜாதி ஆணவக்கொலைகளே அதிகம். குடும்ப உறுப்பினா்களே செய்யும் ஆணவக்கொலைக்கு சாட்சிகள் கிடைக்காது.

குற்றவாளிகள் விடுதலை அடையும் வாய்ப்புகளே அதிகமாக இருக்கிறது.

இத்தகைய காரணங்கள், அனுபவங்கள் எல்லாம் ஜாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சிறப்பு சட்டம் தேவை என்பதையே உணா்த்துகின்றன.

தாங்கள் உடனடியாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றி ஜாதி மறுப்பு திருமண தம்பதிகளுக்கு பாதுகாப்பையும், அமைதியான வாழ்க்கையையும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்’ என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments