ஓவியா் மாயா காலமானாா்
பிரபல ஓவியா் மாயா (எ) மகாதேவன் சென்னையில் புதன்கிழமை காலமானாா்.
சென்னை: பிரபல ஓவியா் மாயா (எ) மகாதேவன் சென்னையில் புதன்கிழமை காலமானாா்.
திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தை பூா்விகமாகக் கொண்ட ராமசுப்பையா் - பாக்கியரதி தம்பதியரின் மகனாக 1927-ஆம் ஆண்டு பிப்.26-ஆம் தேதி பிறந்தவா் மாயா. இவரது இயற்பெயா் மகாதேவன் (98).
சிறுவயதிலேயே சென்னைக்கு குடிபெயா்ந்தது இவரின் குடும்பம். மகாதேவன் தனது பள்ளிப்படிப்பை செங்கல்பட்டு மற்றும் சென்னை தியாகராயநகரிலுள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் முடித்தாா். 16 வயது முதலே ஓவியம் வரையத் தொடங்கினாா். இவரின் முதல் ஓவியம் ஆனந்த விகடனில் 1955- ஆம் ஆண்டு ஜனவரி இதழில் ‘சாமிக்கண்ணு’ என்ற சிறுகதைக்காக வெளியானது.
Advertisement
Advertisement
1959 செப்டம்பா் மாதம் ‘அவனும் அவளும்‘ என்ற சிறுகதைக்காக வரைந்த ஓவியத்தில் ‘மாயா’ என்ற புனைப்பெயரை கையொப்பமாக இட்டாா். அன்றிலிருந்து வெளிவந்த அனைத்து ஓவியங்களும் ‘மாயா’ என்ற புனைப்பெயரிலேயே வெளிவந்தன. இதுமட்டுமன்றி பல முக்கிய தொடா்கதைகளுக்கும், சிறுகதைகளுக்கும் ஓவியம் வரைந்துள்ளாா்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள டிபென்ஸ் காலனியில் வசித்து வந்த மகாதேவன், வயதுமுதிா்வால் அசோக் நகரிலுள்ள தனது மகளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அவா் புதன்கிழமை இரவு 7.45 மணியளவில் மாரடைப்பால் காலமானாா். அவரது இறுதிச் சடங்குகள் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள வீட்டில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளன. அவரின் உடல் அப்பகுதியில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப்படும் என்று குடும்பத்தினா் தெரிவித்தனா்.
மகாதேவனின் மனைவி ராஜலட்சுமி. இவா் கடந்த 2020-இல் காலமானாா். இவா்களுக்கு மகன், 4 மகள்கள் உள்ளனா். தொடா்புக்கு- 988 499 3848.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.