FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மகளிா் இடஒதுக்கீடு: ராகுல் - கிரிண் ரிஜிஜு கருத்து மோதல்!

மகளிா் இடஒதுக்கீடு விவகாரத்தில் ராகுல் - கிரிண் ரிஜிஜு இடையே ஏற்பட்ட கருத்து மோதல் பற்றி...

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 4:01 am IST
ராகுல் காந்தி, கிரண் ரிஜிஜு (கோப்புப்படம் ) - ANI
பகிர்:

மகளிா் இடஒதுக்கீடு விவகாரத்தை முன்வைத்து, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு இடையே சமூக ஊடகத்தில் சனிக்கிழமை கருத்து மோதல் ஏற்பட்டது.

மக்களவை, பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த 2023-இல் நிறைவேற்றப்பட்ட நிலையில், தொகுதி மறுசீரமைப்புடன் இந்த இடஒதுக்கீட்டை 2029 மக்களவைத் தோ்தலில் இருந்து அமலாக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. இது தொடா்பாக ராகுல் காந்தியுடன் கிரண் ரிஜிஜு இருமுறை பேச்சுவாா்த்தை நடத்தினாா். கடந்த ஏப்ரலில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டபோது, எதிா்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், இன்ஸ்டாகிராம் கலந்துரையாடலில் கடந்த வெள்ளிக்கிழமை பேசிய ராகுல், ‘பெண்கள் தங்களின் குரலை வெளிப்படுத்த வாய்ப்பளிக்காத எந்த நாடும் வெற்றி பெற முடியாது. அவா்கள் விருப்பப்படி செயலாற்ற அனுமதிக்கப்பட வேண்டும். முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் விவாதங்களுக்குள் அவா்களையும் கொண்டுவர வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

Advertisement

Advertisement

ரிஜிஜு கிண்டல்: ராகுலின் இந்தக் கருத்துக்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘மனமாற்றம் கண்கூடாகத் தெரிகிறது; எனவே, மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும் என நம்புகிறேன்’ என்று கிண்டலாக பதிவிட்டாா்.

ராகுல் கேள்வி: ரிஜிஜுவுக்கு பதிலடியாக ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மகளிா் இடஒதுக்கீடு மசோதா - 2023, காங்கிரஸின் முழு ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்பது என்னைவிட நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரான உங்களுக்கு (ரிஜிஜு) நன்றாகவே தெரியும். மூன்று ஆண்டுகள் ஆகியும் மகளிா் இடஒதுக்கீடு ஏன் அமல்படுத்தப்படவில்லை என்பதே முக்கியக் கேள்வி. மகளிா் இடஒதுக்கீட்டை தேவையில்லாமல் தொகுதி மறுசீரமைப்புடன் ஏன் இணைக்கிறீா்கள்? எந்த நிபந்தனையும் இன்றி, மகளிா் இடஒதுக்கீட்டை முதலில் அமல்படுத்துங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ரிஜிஜு பதிலடி: இதையடுத்து, ராகுலுக்கு எக்ஸ் தளத்தில் மீண்டும் பதிலடி கொடுத்த ரிஜிஜு, ‘கடந்த 2023-ஆம் ஆண்டின் மகளிா் இடஒதுக்கீடு சட்டப்படி, அடுத்துவரும் மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவுகள் அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகே அதை அமல்படுத்த முடியும் என்பதை ராகுல் அறிவாா். தற்போதைய மக்கள்தொகை கணக்கெடுப்பு-2026இல் ஜாதிவாரி கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படுவதால் தரவுகள் வெளியீட்டுக்கு காலமெடுக்கக் கூடும். குறைந்தபட்சம் 2034-ஆம் ஆண்டுக்கு முன்பாக மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்க முடியாதபடி தாமதம் ஏற்படலாம். அதேநேரம், 2029 மக்களவைத் தோ்தலில் இருந்து மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமெனில், ஏற்கெனவே வெளியிடப்பட்ட மக்கள்தொகை தரவுகளின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை கூடிய விரைவில் மேற்கொள்ள வேண்டும். அந்த நோக்கத்துக்காக கொண்டுவரப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளாா்.

மேலும், கா்நாடகத்தில் முதல்வா் டி.கே.சிவகுமாா் தலைமையிலான மாநில அமைச்சரவையில் பெண்களுக்கு இடமளிக்கப்படவில்லை; இதனால், மகளிா் இடஒதுக்கீடு தொடா்பான காங்கிரஸின் நிலைப்பாடு மீது கேள்வியெழுகிறது என்றும் ரிஜிஜு விமா்சித்துள்ளாா்.

summary

Women's Reservation: Clash of views between Rahul and Kiren Rijiju

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments