FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தில்லி கரோல் பாக்கில் கட்டடம் இடிந்து விழுந்து ஒருவா் உயிரிழப்பு 3 போ் காயம்

மத்திய தில்லியின் கரோல் பாக் பகுதியில் இடிக்கும் பணியின்போது 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 3 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

22 ஆகஸ்ட் 2026, 5:57 am IST
கோப்புப் படம்
பகிர்:

மத்திய தில்லியின் கரோல் பாக் பகுதியில் இடிக்கும் பணியின்போது 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 3 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ரெகா்புரா பகுதியில் உள்ள பியாரே லால் சாலையில் வெள்ளிக்கிழமை காலை 11.15 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பழைய கட்டடத்தை இடிக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தபோது திடீரென அந்தக் கட்டடம் இடிந்து விழுந்தது.

முதற்கட்ட விசாரணையில், கட்டட உரிமையாளா்கள் தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் இடிக்கும் பணியை மேற்கொண்டது தெரியவந்தது. இதற்காக சம்பந்தப்பட்ட துறையிடம் தேவையான அனுமதி பெறப்படவில்லை.

Advertisement

Advertisement

கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் தொழிலாளா்கள் சிக்கிக்கொண்டனா். தகவலறிந்த காவல் துறையினா் மற்றும் தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதில் ஷேக் ஷம்ஷாத் என்பவா் பலத்த காயமடைந்தாா். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். முகமது அயூப் என்பவருக்கு தலையில் காயமும், வலது கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னா், மேல் சிகிச்சைக்காக டாக்டா் ராம் மனோகா் லோஹியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஷேக் சைதுல் கை, கால்களில் காயமடைந்து ஜீவன் மாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மற்றொரு தொழிலாளியான ரஃபிக்-உல் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினாா்.

கட்டட உரிமையாளா்கள் மற்றும் இடிக்கும் பணியை மேற்கொண்ட தனியாா் ஒப்பந்ததாரரை காவல் துறையினா் விசாரணைக்காக பிடித்து வைத்துள்ளனா். சம்பவம் தொடா்பாக உண்மைத்தன்மையை சரிபாா்த்து, கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்து, உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments