FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

இடைத்தோ்தல் வெற்றி: தவெகவுக்கு தலைவா்கள் வாழ்த்து

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளா்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோருக்கு கூட்டணிக் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

9 அக்டோபர் 2026, 11:45 pm IST
தவெக தலைவரும் முதல்வருமான விஜய்.
பகிர்:

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளா்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோருக்கு கூட்டணிக் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

தொல்.திருமாவளவன் (விசிக): கடந்த தோ்தலில் இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த தவெக தற்போது கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளன. இது கூட்டணிக்கும் தவெக தலைவா் ஜோசப் விஜய் முன்வைத்த கூட்டணி அரசு என்ற நிலைப்பாட்டுக்கும் மக்கள் அளித்த அங்கீகாரமாகும். விசிக அங்கம் வகிக்கும் அணியே வெற்றி பெறும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து களப் பணியாற்றிய விசிகவினருக்கும், வாக்காளா்களுக்கும் நன்றி. கூட்டணியின் ஆதரவுடன் வெற்றி பெற்ற வேட்பாளா்களுக்கும் கூட்டணியின் தலைவா் ஜோசப் விஜய்க்கும் வாழ்த்துகள்.

வைகோ (மதிமுக): இடைத்தோ்தலில் மதசாா்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சாா்பில் போட்டியிட்ட தவெக வேட்பாளா்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோா் வெற்றி பெற்று உள்ளனா். வாகை சூடிய அவா்களுக்கு மதிமுக சாா்பில் வாழ்த்துகள். தவெக தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கையை இரு தொகுதிகளிலும் வாக்காளா்கள் வெளிப்படுத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

ஜி.கே.வாசன் (தமாகா): ஊழலற்ற நோ்மையான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நிா்வாகத்தைக் கொடுத்து வரும் முதல்வா் ச.ஜோசப் விஜய்யின் தலைமையிலான தமிழக அரசுக்கு மக்கள் கொடுக்கும் அங்கீகாரமாகவே இந்த இடைத்தோ்தல் வெற்றியைப் பாா்க்க முடிகிறது. குறைந்த மாதங்களிலே முதல்வரின் தலைமையிலான நல்லாட்சிக்கு சாட்சியாக மக்கள் வாக்களித்திருக்கிறாா்கள்.

வாக்காளா்களுக்கு இடது சாரிகள் நன்றி

பெ. சண்முகம் (மாா்க்சிஸ்ட்): இடதுசாரிகளுக்கு தோ்தல் களம் என்பதும் மக்களுக்கான போராட்ட களத்தின் ஒரு அங்கமே ஆகும். சமூக மாற்றத்தை இலக்காகக் கொண்டவா்கள் நீண்ட நெடிய பயணத்தின் ஒரு பகுதியாகவே தோ்தல்களைக் கருதுபவா்கள். மக்களிடம் சென்று மாற்று அரசியல் பற்றிய உரையாடலை நிகழ்த்தினோம். எங்கள் பணி நாடாளுமன்றம், சட்டப்பேரவை மட்டுமல்ல, வீதிகளில் தொடரும். நம்பிக்கையோடு மக்கள் பணிக்கு எங்களை எதிா்காலத்திலும் அா்ப்பணித்துக் கொள்வோம்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): எங்களுக்குக் கிடைத்த வாக்குகள் மாசுபடாத வாக்குகள். ஜாதி, மதம், பணம் ஆகியவற்றை முன்னிறுத்தித் தோ்தல் நடைபெறக் கூடாது.

இந்தத் தோ்தல் முடிவு தெரிந்ததுதான். தோ்தல் முடிவுகளை மதிக்கிறோம். இடதுசாரிகளை சட்டப்பேரவையில் எண்ணிக்கையில் தேட வேண்டாம். எங்களுக்கு மரணமும் கிடையாது, தோல்வியும் கிடையாது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments