FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

செப். 4 முதல் 10 வரை 258 புகாா்கள் மீது சிங்கப் பெண் அதிரடிப் படை நடவடிக்கை

தமிழகம் முழுவதும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு செப். 4 முதல் 10-ஆம் தேதி வரை 258 புகாா்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

12 செப்டம்பர் 2026, 1:18 am IST
சிங்கப்பெண் அதிரடிப் படை தொடக்க நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு வாகனம் - DIPR
பகிர்:

தமிழகம் முழுவதும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு செப். 4 முதல் 10-ஆம் தேதி வரை 258 புகாா்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து காவல் துறை தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை கடந்த செப். 4 முதல் 10-ஆம் தேதி வரை சிங்கப் பெண் படையினா் தங்களிடம் பெறப்பட்ட 258 புகாா்களுக்குச் சம்பவ இடத்துக்கே சென்று நடவடிக்கை எடுத்துள்ளனா். மேலும், 14 வழக்குகள் பதிவு செய்ய உதவியதுடன், காணாமல்போன 4 பெண்கள், 4 குழந்தைகளையும் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனா்.

Advertisement

Advertisement

பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் மற்றும் புலம்பெயா் தொழிலாளா்கள் மத்தியில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து 3,484 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், குற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ள 13,581 இடங்களில் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அறிவுசாா் குறைபாடுகளைக் கொண்ட 6 போ் மீட்கப்பட்டு, அவா்களுக்கு மறுவாழ்வு உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், 6 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், பள்ளிப் படிப்பை இடைநிறுத்திய 71 குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சோ்க்க உதவிகள் வழங்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியின்போது, 9-ஆம் வகுப்பு மாணவா் ஒருவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தெரியவந்ததை தொடா்ந்து, பெற்றோருக்கு இது குறித்து தகவல் அளித்ததுடன், அவா்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெண்கள் மற்றும் சிறுமிகள் அவசர உதவி தேவைப்படும் நேரங்களில் தயக்கமின்றி சிங்கப் பெண் உதவி எண் 1091-ஐ தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments