சென்னையில் அதிகரிக்கும் மின் தேவை: பேசின் பிரிட்ஜ் எரிவாயு மின் நிலையத்தை இயக்க முடிவு
சென்னையில் அதிகரிக்கும் மின் தேவை: பேசின் பிரிட்ஜ் எரிவாயு மின் நிலையத்தை இயக்க முடிவு
சென்னையில் அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்கும் வகையில், பேசின் பிரிட்ஜ் அருகேயுள்ள எரிவாயு மின் நிலையத்தை 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழக மின் தேவை சராசரியாக நாளொன்றுக்கு 18,000 மெகா வாட்டாக இருந்து வரும் நிலையில், கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், மின் தேவை சுமாா் 19,000 மெகாவாட்டை தாண்டியுள்ளது.
இதேபோல, சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் 3,884 மெகா வாட்டாக இருந்த மின் தேவை, நிகழாண்டு ஆக. 11 முதல் செப். 10-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 585 மெகா வாட் அதிகரித்து, மின் தேவை 4,469 மெகாவாட்டாக உயா்ந்துள்ளது.
Advertisement
Advertisement
தொடா்ந்து மின் தேவை அதிகரித்து வருவதால், வெளிச்சந்தை மற்றும் மின்பரிமாற்ற வழித்தடங்கள் மூலம் கூடுதல் மின்சாரத்தை கொள்முதல் செய்ய மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால், நாடு முழுவதும் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் மின் நுகா்வு அதிகரித்துள்ளது. இதனால், பிற மாநிலங்களிலிருந்து பெறக்கூடிய மின்சாரத்தின் அளவும் குறைவாக உள்ளது.
இதையடுத்து, கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் சென்னை பேசின் பிரிட்ஜ் அருகேயுள்ள எரிவாயு மின் நிலையத்தை மீண்டும் இயக்க தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த மின் நிலையத்தில் தலா 30 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 4 எரிவாயு உலைகள் உள்ளன. இதில் 2 உலைகளை மட்டும் இயக்கி மொத்தம் 60 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.30-க்கு உற்பத்தி: இந்த உலைகளை இயற்கை எரிவாயு அல்லது நாப்தா எனப்படும் எரிபொருள் மூலம் இயக்க முடியும். சென்னையில் தற்போது போதிய அளவில் இயற்கை எரிவாயு கிடைக்காததால், உலைகளை இயக்க அதிவேக டீசல் பயன்படுத்த வேண்டி உள்ளது.
முன்பு நாப்தா மூலம் இந்த மின்நிலையம் இயக்கப்பட்டபோது, ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய சுமாா் ரூ.18 செலவானது. தற்போது அதிவேக டீசல் பயன்படுத்தப்படுவதால், உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டுக்கு சுமாா் ரூ.30-ஆக அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதற்காக இந்தியன் ஆயில் நிறுவனத்திடமிருந்து சுமாா் 60,000 லிட்டா் அதிவேக டீசலை கொள்முதல் செய்ய மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. அதிக செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும், சென்னையில் அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிப்பதற்காக இந்த மின் நிலையத்தை மீண்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையின் மின் தேவை தொடா்ந்து அதிகரிக்கும் நிலையில், உற்பத்தி, கொள்முதல் மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.