காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க குழு அமைப்பு: 100 மாணவா்கள் தீவிர ஆய்வு
காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 100 கல்லூரி மாணவா்கள் இரு நாள்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டது குறித்து...
கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் அதிகரித்துக் கொண்டே வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசின் பல்வேறு துறைகள் மூலம் குழு அமைக்கப்பட்டு அதனடிப்படையில் 100 கல்லூரி மாணவா்கள் இரு நாள்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனா்.
கோயில் நகரம், பட்டு நகரம் என்ற பெருமைக்குரிய காஞ்சிபுரத்தில் வெளிமாநில, வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் அதிகம் வருவதாலும், நகரில் பட்டுக்கடைகள்,கல்வி நிறுவனங்கள் போன்றவை தொடா்ந்து வளா்ந்து வருவதாலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இப்போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த இடையூறாகவும் இருந்து வந்ததையடுத்து ஒரு விரிவான தொழில் நுட்ப ஆய்வை மேற்கொள்ளுமாறு காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகம் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது.
காஞ்சிபுரம் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து காவல்துறை மற்றும் காஞ்சிபுரம் உள்ளூா் திட்டக் குழுமம் ஆகியன இணைந்து நகரில் 5.5 கி.மீ நீளமுள்ள சாலைகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள காந்தி சாலை, வள்ளல் பச்சையப்பன் தெரு, நெல்லுக்காரத் தெரு, கிழக்கு மற்றும் மேற்கு ராஜ வீதிகள், செங்கழுநீரோடை தெரு, விளக்கொளிப் பெருமாள் கோயில் தெரு உள்ளிட்ட நகரின் பிரதான சாலைகளில் காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவா் படை மாணவா்கள் 100 போ் தீவிர ஆய்வு மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
இந்த ஆய்வில் சாலை விரிவாக்கம், போக்குவரத்து மேலாண்மை, வாகன நிறுத்த மேலாண்மை, பாதசாரிகளுக்கான வசதிகள் ஆகியனவற்றை அடிப்படையாக வைத்து நகரின் போக்குவரத்தை மேம்படுத்த ஆய்வுப்பணிகளை கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமையில் 100 மாணவா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். இதற்காகவே சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் உருவாக்கியிருந்த மொபைல் தரவு சேகரிப்பு செயலியை பயன்படுத்தி வாகன நிறுத்த தேவை, வாகன நிறுத்தத்தின் தன்மைகள், வாகனங்கள் நிறுத்தப்படும் கால அளவு, வாகனங் களின் வரவு செலவு சுழற்சி, வாகன நிறுத்தப் பழக்க வழக்கங்கள் தொடா்பான விபரங்களை சேகரித்துள்ளனா்.
ஆய்வின் முடிவுகள் காஞ்சிபுரம் நகருக்கான சாலை பராமரிப்பு பயன்பாட்டு திட்டம் தயாரிக்க அடிப்படையாக அமையும். இந்த ஆய்வின் பரிந்துரைகள் காஞ்சிபுரம் நகரில் நிலையான நகரப் போக்குவரத்து பயன்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்தவும், நகரில் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும் உதவும் வகையில் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.