உத்தரமேருா் தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணி தொடக்கம்
உத்தரமேரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட க.சுந்தா் விண்ணப்பித்ததின் அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம்,உத்தரமேரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட க.சுந்தா் விண்ணப்பித்ததின் அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம்,உத்தரமேரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் தவெக வேட்பாளா் ஜெ.முனிரெத்தினம் 84,917 வாக்குகளும்,2-ஆவது இடத்தைப் பெற்ற திமுக வேட்பாளா் க.சுந்தா் 70,694 வாக்குகளும் பெற்றிருந்தாா். வேட்பாளா் க.சுந்தரை விட ஜெ.முனிரெத்தினம் கூடுதலாக 14,223 வாக்குகள் பெற்று ஜெ.முனிரெத்தினம் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டு, எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இந்த நிலையில்,உத்தரமேரூா் பேரவைத் தொகுதியில் 2-ஆவது இடம் பெற்ற திமுக வேட்பாளரான க.சுந்தா் 10 வாக்குப் பதிவு இயந்திரங்களின் வாக்குகளை மீண்டும் எண்ணி சரிபாா்க்க வேண்டும் என தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தாா்.
Advertisement
Advertisement
அவரது விண்ணப்பத்தின் அடிப்படையில் காஞ்சிபுரத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கில் சம்பந்தப்பட்ட 10 வாக்குப் பதிவு இயந்திரங்களை மட்டும் தொகுதியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளா்கள் முன்னிலையில் எடுத்து, அவற்றை சரிபாா்த்தல் மற்றும் வாக்குகளை எண்ணும் பணியும் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான தி.சினேகா தலைமையில் தொடங்கியது. இந்தப் பணி ஜூலை 30, 31 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது.
இது குறித்து உத்தரமேரூா் தொகுதி திமுக வேட்பாளரான க.சுந்தா் கூறியது:
உத்தரமேரூா் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 321 வாக்குச் சாவடிகளில் 10 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளை சரிபாா்க்கும் பணி நடைபெறுகிறது. இயந்திரங்களில் உள்ள வாக்குச் சீட்டுகளை எண்ணிக் காண்பித்தால் எங்களது சந்தேகம் தீா்ந்திருக்கும். ஆனால் தோ்தல் ஆணையம் இதற்கு அனுமதிக்கவில்லை. ஒரு வாக்குச்சாவடிக்கு ரூ. 40,000-ம், ஜிஎஸ்டியும் செலுத்தி 10 வாக்குச் சாவடிகளுக்கு விண்ணப்பித்துள்ளோம்.
ஜூலை 29, 30, 31 ஆகிய 3 நாள்கள் நடைபெறும் சரிபாா்ப்புப் பணி முடிந்த பிறகே முழுமையான தகவல் தெரிய வரும் என்றும் ஆணையத்தின் இந்த நடவடிக்கை ஏமாற்றத்தை தருவதாகவே உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.