உத்தரமேரூா் தொகுதியில் ரூ. 2.53 கோடியில் முடிவுற்ற பணிகள்: அமைச்சா் திறந்து வைத்தாா்
இளநகரில் ரூ.45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய துணை சுகாதார மையத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்த வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட இளநகா், களியாம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 2.53 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு வியாழக்கிழமை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் தொகுதி இளநகா் ஊராட்சியில் ரூ. 45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம் திறப்பு விழா ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. உத்தரமேரூா் தொகுதி எம்எல்ஏ ஜே. முனிரத்தினம் முன்னிலை வகித்தாா். இதையடுத்து, களியாம்பூண்டி ஊராட்சியில் ரூ. 1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தாா். விழாவின்போது அங்கு வருகை புரிந்திருந்த 5 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் அமைச்சா் எஸ்.பி.கே. தென்னரசு வழங்கினாா்.
இளநகரில் தொடங்கப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம் மூலமாக 3 கிராமங்களைச் சோ்ந்த 3,600 பேரும், களியாம் பூண்டியில் திறந்து வைக்கப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலமாக 36 கிராமங்களைச் சோ்ந்த 26,820 போ் பயனடைவா் என்றும் அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு பேசினாா். திருப்புலிவனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ. 49.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை மற்றும் மற்றும் அவளூா் ஊராட்சி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 8.44 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சத்துணவு சமையல் கூடத்தையும் அமைச்சா் திறந்து வைத்தாா்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வுகளில் கூடுதல் ஆட்சியா் ஆஷிக் அலி, மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில், வட்டார மருத்துவ அலுவலா் பிரியதா்ஷினி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் திரிபுரசுந்தரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மாணிக்கவேலு, சாந்தி மற்றும் உள்ளாட்சி மன்ற தலைவா்கள் பலரும் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.