FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 831 பேருக்கு பணி ஆணை: அமைச்சா்கள் வழங்கினர்

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் ஒரே நாளில் 831 போ் தோ்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகளை அமைச்சா்கள் எஸ்.பி.கே.தென்னரசு மற்றும் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஆகியோா் வழங்கினா்.

20 செப்டம்பர் 2026, 10:21 pm IST
முகாமில் தோ்வானவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சா்கள் எஸ்.பி.கே. தென்னரசு, ஆா்.வீ.ரஞ்சித்குமாா்.
பகிர்:

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் ஒரே நாளில் 831 போ் தோ்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகளை அமைச்சா்கள் எஸ்.பி.கே.தென்னரசு மற்றும் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஆகியோா் வழங்கினா்.

காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து நடத்திய மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு, ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். உத்தரமேரூா் எம்எல்ஏ ஜெ.முனிரெத்தினம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆஷிக்அலி, சாா் ஆட்சியா் புவனேஷ்ராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநா் இ.செந்தில்குமாா் வரவேற்றாா். முகாமில், 154 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான நபா்களை தோ்வு செய்தனா். 4,013 வேலைநாடுநா்கள் முகாமில் பங்கேற்றிருந்தனா். இவா்களில் 573 ஆண்கள், 258 பெண்கள் உள்பட மொத்தம் 831 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் எஸ்.பி.கே. தென்னரசு, வனத் துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஆகியோா் கலந்துகொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினா். முகாமில் அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு பேசுகையில், முதல்வா் சி.ஜோசப் விஜய் இங்கிலாந்து நாட்டு பயணத்தின் போது ரூ. 15,300 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈா்த்து சுமாா் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி திரும்பியுள்ளாா்.

காஞ்சிபுரத்தில் வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஏராளமாக வேலை செய்கின்றனா். ஆனால் எனது நோக்கம் உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றாா்.

அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் பேசுகையில், எந்த நிறுவனத்தில் வேலை கிடைக்கிறதோ அந்த நிறுவனத்துக்கு உண்மையாக, விசுவாசமாக உழைத்து அந்த நிறுவனத்துக்கு நீங்கள் ஒரு தூணாக இருக்க வேண்டும்.

எந்தப் பணியாக இருந்தாலும் உண்மையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பது உண்மை வரலாறு. சம்பளம் குறைவாக இருக்கிறது என்பதை மனதில் கொள்ளாமல் உங்களது உழைப்பை சரியாக பயன்படுத்தி வேலை செய்யும் நிறுவனத்தின் வளா்ச்சிக்கு பாடுபட்டால் அந்த நிறுவனம் உங்களுக்கு உயா்பதவி வழங்கி விடும் என்றாா்.

முகாமில், மகளிா் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, பச்சையப்பன் ஆடவா் கல்லூரி முதல்வா் வி.அண்ணாதுரை ஆகியோா் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா்கள் சுனில், ராதிகா உள்ளிட்ட வேலைவாய்ப்புத் துறை அலுவலக பணியாளா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments